வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (27/09/2018)

கடைசி தொடர்பு:17:35 (27/09/2018)

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் யாருக்கு லாபம்?- ஓர் அலசல்! #AyushmanBharat

தமிழகத்தில் உள்ள 8 சதவிகிதம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களே இல்லை. 60 சதவிகித அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார். "இந்த நிலையில் இத்திட்டத்தின் மூலம் புதிதாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (Health and Wellness Centres- HWC) தொடங்கப்பட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்."

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் யாருக்கு லாபம்?- ஓர் அலசல்! #AyushmanBharat

ந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துவிட்டது `ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். 10.74 கோடி ஏழைக் குடும்பங்கள், ஆண்டுக்குத் தலா 5 லட்சம் வரை மருத்துவச் செலவு செய்துகொள்ளும்விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், இந்திய மக்கள்தொகையில் சுமார் 40 சதவிகிதம் பேருக்குப் பயனளிக்கும் என்கிறார்கள்.  

தமிழகத்தில் ஏற்கெனவே, `முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்' என்ற பெயரில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. ஆண்டுக்கு ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வரை மொத்தமாக ஒரு குடும்பத்துக்கு நான்கு லட்சம் வரை இதன் மூலம் செலவு செய்துகொள்ளமுடியும். இந்தத் திட்டத்தில் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்கள் பயனாளிகளாக இருக்கிறார்கள். தற்போது மத்திய அரசுத் திட்டத்துக்குத் தமிழகத்திலிருந்து, 77 லட்சம் பயனாளி குடும்பங்கள் ( Socio-Economic Caste Census-2011) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆக, இரண்டு திட்டங்களும் ஒருங்கிணைந்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசு கொடுத்திருக்கும் பயனாளிகள் பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே மாநில அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாகவே இருக்கலாம் என்பதால், இறுதிப் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத்

பட்ஜெட்டில் இத்திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும்போதே, முதற்கட்டமாக 12,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.மருத்துவர் புகழேந்தி மத்திய அரசின் புதிய திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கும் 60 சதவிகித பிரீமியத்தை மத்திய அரசு செலுத்தும். மீதமுள்ள 40 சதவிகித பிரீமியத்தைத் தமிழக அரசுதான் செலுத்தவேண்டும். இத்திட்டம் ஒருபுறம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேவேளையில் `இத்திட்டத்துக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து கிடைக்கும்?' எனப் பொருளாதார நிபுணர்களும், `இத்திட்டத்தால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகும், மக்களுக்கு எந்தப் பயனுமில்லை' என மருத்துவச் செயற்பாட்டாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

 ``'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெரும்பாலான மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் செல்வார்கள். அதன்படி பார்த்தால் மக்களின் வரிப்பணத்தை, தனியாரிடம் கையளிக்கவே இதுபோன்ற திட்டங்கள் உதவும் என்பதே உண்மை. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை செய்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 85 சதவிகிதம் பேருக்கும் மேலாக தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் சென்றிருக்கிறார்கள் என்பது ஆதாரபூர்வமான தகவல். அரசு மருத்துவமனைகளில் நல்ல மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் மக்கள் ஏன் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லப் போகிறார்கள்? 

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

தமிழகத்தில் உள்ள 8 சதவிகிதம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களே இல்லை. 60 சதவிகித அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார். இந்த நிலையில் இத்திட்டத்தின் மூலம் புதிதாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (Health and Wellness Centres- HWC) தொடங்கப்பட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி போதிய மருத்துவர்களை நியமித்தாலே போதும், புதிதாக எதுவும் தேவையில்லை`` என்கிறார் மருத்துவர் புகழேந்தி. 

ரெக்ஸ் சற்குணம்``மத்திய அரசின் இந்தத் திட்டத்தால் 10 கோடி குடும்பங்களுக்குப் பயன் கிடைக்கிறதோ இல்லையோ கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு நல்ல லாபம். இதுபோன்ற திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளைத்தான் மக்கள் அதிகமாகத் தேடிச் செல்வார்கள். தனியார் மருத்துவமனைகளும் அவர்கள் இஷ்டத்துக்கு பில் போட்டு மக்களிடம் கையொப்பம் வாங்கிவிடுவார்கள். பொதுவாகவே மக்களுக்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது பற்றியோ, அவற்றுக்கான கட்டணம் எவ்வளவு என்பது பற்றியோ விழிப்புஉணர்வு கிடையாது. 

அரசு மருத்துவமனைகளுக்குச் சிகிச்சை பெற வருபவர்கள் காப்பீட்டுத் திட்டப் பயனாளியாக இருந்தால், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதற்குக் காரணம் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஒருவருக்கு சிகிச்சையளிக்கும்போது, அரசு மருத்துவமனைகளுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். அரசால் வழங்க முடியாத ஒரு சிகிச்சைக்கு, மக்கள் தனியார் மருத்துவமனைகளைத் தேடிச் சென்று அதற்கு அரசு பணம் செலவழித்தால் பரவாயில்லை. அடிப்படையான சிகிச்சைகளுக்குக்கூட தனியார் மருத்துவமனைகளைத்தான் நாடிச் செல்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசு மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை வசதிகள் இல்லாததே. எனவே, இவற்றை எப்படிச் சரிசெய்வது என்பது பற்றி அரசு யோசிக்கவேண்டும்`` என்கிறார் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் தலைவர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம்.

சிகிச்சை

``இதுபோன்ற காப்பீட்டுத் திட்டங்கள் எல்லாம் அரசு மருத்துவமனைகளைத் தனியாருக்குக் கையளிக்கும் முன்னோட்டம்தான்`` என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத அரசு மருத்துவர் ஒருவர். 

``அரசு மருத்துவமனைகளுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படாத சூழல்தான் நிலவுகிறது. மருத்துவமனைக்கான நிதியை அவர்கள் தாங்களாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டுதான் மருத்துவமனைகளுக்குத் தேவையான பொருள்களை வாங்கிவருகிறோம். ஏற்கெனவே அடிப்படை மருந்து, மாத்திரைகளை வாங்குவதற்கே எங்களிடம் போதிய பணம் இல்லை. இது, இப்படியே தொடர்ந்தால் ஒருகட்டத்தில் எங்களால் சமாளிக்கமுடியாத சூழல் வரும். அப்படிப்பட்ட நிலை வரும்போது மருத்துவமனைகளை நேரடியாகத் தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டத்துடன் இருக்கிறார்கள். இதுபோன்ற காப்பீட்டுத் திட்டங்களால் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்குத்தான் லாபம். இலவச சிகிச்சை என்பதால்தான் மக்கள் அரசு மருத்துவமனைகளைத் தேடி வருகிறார்கள். ஆனால், அரசு மருத்துவமனைகளிலோ காப்பீடு உள்ளவர்களுக்குத்தான் முன்னுரிமை அளித்து சிகிச்சை அளிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இது மிகவும் அபாயகரமான போக்கு`` என்கிறார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்