புகைபிடிப்பவர்களைக் குறிவைக்கும் நுரையீரல் தழும்பு நோய்! #PulmonaryFibrosis #PFAwarenessMonth | Story about Pulmonary Fibrosis Awareness month

வெளியிடப்பட்ட நேரம்: 12:09 (28/09/2018)

கடைசி தொடர்பு:12:48 (28/09/2018)

புகைபிடிப்பவர்களைக் குறிவைக்கும் நுரையீரல் தழும்பு நோய்! #PulmonaryFibrosis #PFAwarenessMonth

இந்தியாவைப் பொறுத்தவரை, அரியவகை நோய்களின் பட்டியலில் இருந்த ஃபைப்ரோஸிஸ் நோய் தற்போது பொதுவான நோய்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது.

புகைபிடிப்பவர்களைக் குறிவைக்கும் நுரையீரல் தழும்பு நோய்! #PulmonaryFibrosis #PFAwarenessMonth

நுரையீரல் திசுக்கள் சேதமடைந்து, தழும்பாக மாறுவதால் ஏற்படும் சுவாச பாதிப்பை`பல்மனரி ஃபைப்ரோஸிஸ்' என்கிறார்கள். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் `பல்மனரி ஃபைப்ரோஸிஸ்' விழிப்புஉணர்வு மாதம் அனுசரிக்கப்படுகிறது. எனவே இந்நோயைப் பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது. அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில்  43 பேர் இந்த `பல்மனரி ஃபைப்ரோஸிஸ்' (Pulmonary Fibrosis) நோயால் பாதிக்கப்படுகின்றனர். 

நுரையீரல்

`பல்மனரி ஃபைப்ரோஸிஸ்' நோய் குறித்து விரிவாக அறிந்துகொள்ள மயிலாப்பூரில் உள்ள நுரையீரல் சிறப்பு மருத்துவர் மருத்துவர்  ஹரீஷைச் சந்தித்தோம். நுரையீரல் சிறப்பு மருத்துவர்\ ஹரீஷ்

``நுரையீரலிலுள்ள திசுக்கள் சேதமடைவதால் அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படத் தொடங்கும். நாளடைவில் பாதிப்பு அதிகரித்து மூச்சுத்திணறல் ஏற்படும். இதையடுத்து நுரையீரல் முழுவதும் பாதிப்புக்குள்ளாகி சுவாசப் பிரச்னைகள் உண்டாவதுடன் தீவிரத்தன்மை அடையும். நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்தும் `பல்மனரி ஃபைப்ரோஸிஸ்' பிரச்னை எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. புகை பிடிப்பவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதுகுறித்த விழிப்புஉணர்வு ஏற்படுத்தவேண்டும். அசிடிட்டி, முடக்குவாதம் மற்றும் ஆர்த்ரைட்டிஸ் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம். காரணம் தெரியாமல் இருக்கும் ஃபைப்ரோஸிஸ் பிரச்னை, `இடியோபதிக் பல்மனரி ஃபைப்ரோஸிஸ்' (Idiopathic Pulmonary Fibrosis) எனப்படுகிறது.

பல்மனரி ஃபைப்ரோஸிஸ் நோயில், இரண்டு வகைகள் உள்ளன. நுரையீரல் பாரன்கைமா, இன்டர்ஸ்டீசியல் ஃபைப்ரோஸிஸ் ஆகும்.

* `நுரையீரல் பாரன்கைமா' (Lung parencyma): காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அந்நோய் குணமாகும்நிலையில், நுரையீரலில் சில தழும்புகள் வரக்கூடும். அதேபோல, நிமோனியாவால் பாதிக்கப்பட்டு குணமடையும்போதும் நுரையீரலில் தழும்புகள் ஏற்படலாம். இப்படியான தழும்புகளை முதல்நிலையிலேயே சரிசெய்யாமல் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள்தான் `நுரையீரல் பாரன்கைமா' எனப்படுகிறது.

நுரையீரல்

* `இன்டர்ஸ்டீசியல் ஃபைப்ரோஸிஸ்'  (Interstitial  fibrosis) : நுரையீரலில் `இன்டர்ஸ்டீசியல்' என்பது மூச்சு சிற்றறைகளில் (Alveoli) இருந்து ரத்தக்குழாய்களுக்கு ஆக்சிஜன் பரிமாறப்படும் இடம். அதில் பாதிப்பு ஏற்பட்டு, அப்பகுதியிலுள்ள திசுக்கள் அனைத்தும் சேதமடைவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இதைத் தொடர்ந்து ஆக்சிஜன் பரிமாற்றம் முழுவதும் பாதிப்படைந்து `இன்டர்ஸ்டீசியல்  ஃபைப்ரோஸிஸ்' ஏற்படும். 

உடலில் ஏற்படும் தழும்புகள் எப்படி உடலைவிட்டுப் போவதில்லையோ, அதுபோலத்தான் நுரையீரலில் ஏற்படும் இத்தகைய தழும்புகளும் (ஃபைப்ரோஸிஸ்) நீங்காமலிருக்கும். நுரையீரலின் ஏதாவது ஒரு பகுதியில் ஆரம்பிக்கும் இத்தகைய பாதிப்புகள், தொற்று பாதிப்புபோல மற்ற இடங்களுக்கும் பரவி, ஒருகட்டத்தில் நுரையீரல் முழுவதையும் பாதித்துவிடலாம். இத்தகைய சூழலில், உடல் சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதாவது மூச்சுத்திணறல் (dyspnea), வறட்டு இருமல், களைப்பு, அளவுக்கதிகமான மற்றும் காரணமில்லாத உடல் எடை குறைவு, தசை மற்றும் மூட்டுகளில் வலி உணர்வு போன்றவை ஏற்படும். 

வறட்டு இருமல்

தீவிர இருமல் மற்றும் வேகமாக மூச்சு வாங்குதல் போன்றவை மிகமுக்கியமான அறிகுறிகளாகும். அதிகமாக நடக்கும்போதோ, படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போதோ மூச்சிரைப்பு ஏற்படும். இந்நோய் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் கண்டறியப்படாததால் இதைத் தடுக்கும் வழிமுறைகளும் கண்டறியப்படவில்லை. தற்போதைக்கு தூசு, புகை, மாசு போன்றவற்றிலிருந்து நுரையீரலைப் பாதுகாப்பதுடன் புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பதும் மிகவும் நல்லது. உடலில் நோய் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை அமையும். தொடக்கநிலையில் இருப்பவர்களுக்கு, ஆன்டி ஃபைப்ரோஸிஸ் (anti fibrosis) மாத்திரைகள், ஆக்சிஜன் தெரபி போன்றவை வழங்கப்படும். நுரையீரல் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில், நுரையீரல் மாற்று சிகிச்சை பரிந்துரைக்கப்படும். 

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே, பாதிப்பின் தீவிரம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. சிலருக்கு சில நாள்களிலேயே பாதிப்பு தீவிரமடையத் தொடங்கிவிடும். இன்னும் சிலருக்கு, சில வருடங்கள்வரை நீடித்து சிறிது சிறிதாகப் பிரச்னை அதிகரிக்கும். நுரையீரல் பரிசோதனைகள், ஸ்கேன், பயாப்ஸி (Biopsy), பிராங்கோஸ்கோபி (Bronchoscopy) போன்ற பரிசோதனைகள் மூலம் பாதிப்பைக் கண்டறிந்து உறுதிசெய்வது வழக்கம்" என்கிறார் மருத்துவர் ஹரீஷ்.

இந்தியாவைப் பொறுத்தவரை, அரியவகை நோய்களின் (Rare disease) பட்டியலில் இருந்த ஃபைப்ரோஸிஸ் நோய் தற்போது பொதுவான நோய்களின் (Common disease) பட்டியலில் சேர்ந்துள்ளது. இதுகுறித்து சரியான விழிப்புஉணர்வு இல்லாததால் கண்டறியப்படாமலேயே போய்விடுகிறது. 40 - 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதால், அவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்