மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்! - பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக சுகாதார அதிகாரி பதில் | Does Pon Radhakrishnan Statement true in Chief Minister's Comprehensive Health Insurance Scheme name change?

வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (28/09/2018)

கடைசி தொடர்பு:17:26 (28/09/2018)

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்! - பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக சுகாதார அதிகாரி பதில்

``தமிழகத்தில் முதலமைச்சர்  பெயரில் இயங்கி வந்த காப்பீட்டுத் திட்டம் இனி பிரதமர் பெயரில் அழைக்கப்படும்’’ என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்தைத் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளார்கள்.

ஆயுஷ்மான் பாரத்

மத்திய அரசின் ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் படைத்த பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நாகர்கோவிலில்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “நாடு முழுவதும்
50 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவப் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் இயங்கி வந்த திட்டம் இனி பிரதமர் பெயரில் இயங்கும்’’ எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்

அமைச்சரின் கருத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர், ``தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்ற முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.57 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு தமிழகத்திலிருந்து 77 லட்சம் குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த 77 லட்சம் குடும்பங்களில் உள்ளவர்கள் மட்டும் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள். காரணம் இந்த 77 லட்சம் குடும்பங்களுக்கு 60 சதவிகித செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. மீதமுள்ள 80 லட்சம் பயனாளி குடும்பங்கள் ஏற்கெனவே இருந்த முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வருவார்கள். அதனால், பெயர் மாறுகிறது என்பது தவறான கருத்து" என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close