வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (28/09/2018)

கடைசி தொடர்பு:20:37 (28/09/2018)

புற்றுநோயைக் குணமாக்குமா சித்த மருத்துவம்? - சித்த மருத்துவ மாநாட்டில் புதிய தகவல்கள்

கருத்தரங்கில் சித்த மருத்துவர் கு.சிவராமன் புற்றுநோய் சிகிச்சையில் `சித்த மருத்துவத்துக்கான பங்கும் இடர்பாடுகளும்' குறித்துப் பேசினார்.

புற்றுநோயைக் குணமாக்குமா சித்த மருத்துவம்? - சித்த மருத்துவ மாநாட்டில் புதிய தகவல்கள்

பாரம்பர்ய வாழ்க்கை முறையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருப்பதன் காரணத்தால், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய், இதயநோய் போன்ற தொற்றா நோய்கள் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. வைரஸ் காய்ச்சல், மலேரியா, காலரா போன்ற தொற்றுநோய்கள் ஒரு காலத்தில் மிகப்பெரும் சவாலாக இருந்தன. கொத்துக் கொத்தாக மனிதர்களைக் காவு வாங்கின இந்தத் தொற்றுநோய்கள்.

தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள், சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தொற்றுநோய்களிலிருந்து முழுமையாக குணமடைவது சாத்தியப்பட்டது. தற்போது மருத்துவச் சவால்கள் தொற்றுநோய்களிலிருந்து தொற்றாநோய்களுக்கு மாறியுள்ளன. காரணம், தொற்றா நோய்கள் ஒருமுறை வந்துவிட்டால் அதிலிருந்து விடுதலை என்பதே கிடையாது. வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எந்த வயதினரையும் இது விட்டுவைப்பதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். குறிப்பாகப் புற்றுநோய் என்பது மனிதக்குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் மருத்துவர்களுக்குச் சவாலாகவும் மாறியுள்ளது.  

புற்றுநோய்

நோய்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போன்று நோய்களுக்கான சிகிச்சைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நவீன மருத்துவத்தில், புற்றுநோய்க்கு மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. வேதனையையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் இந்தச் சிகிச்சைகளை நோயாளிகள் ஏற்றுக்கொண்டாலும், பாரம்பர்ய மருத்துவம் அல்லது மாற்று மருத்துவத்தில் ஏதேனும் தீர்வு கிடைக்காதா என்ற தேடலும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

 தமிழர்களின் பாரம்பர்ய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் புற்றுநோய்க்குத் தீர்வு கிடைக்குமா. இதற்கான தேடலில் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்களைப் போன்று நோயாளிகளும் இறங்கியுள்ளனர். நோய்க்கு தீர்வைத் தேடியும், வலியிலிருந்து விடுதலை பெற உதவும்படியும் நோயாளிகள் சித்த மருத்துவர்களை அணுகத் தொடங்கியுள்ளனர். சிலரோ, ஒருபடி மேலேபோய் `எனக்கு இருக்கிற கேன்சர் பாதிப்புனால நான் எத்தனை நாள் உயிரோட இருப்பேன்னு எனக்குத் தெரியாது. இருக்கிறவரை தரமான வாழ்க்கை வாழணும்' என்று கேட்கிறார்கள்.

சித்த மருத்துவம்

சித்த மருத்துவ முறையை உலக அளவில் கொண்டு சேர்ப்பதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கும் தேசிய கருத்தரங்கத்தை இன்று மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சென்னையில் நடத்தியது. கருத்தரங்கில் சித்த மருத்துவர் கு.சிவராமன் புற்றுநோய் சிகிச்சையில் `சித்த மருத்துவத்துக்கான பங்கும் இடர்பாடுகளும்' குறித்துப் பேசினார்.கு.சிவராமன்

``புகையிலைப் பயன்பாடு, ஆரோக்கியமில்லாத உணவு முறை, குறைவான உடல் இயக்கம், மது ஆகியவையே புற்றுநோய்க்கு முக்கியக் காரணங்கள். இந்தப் பட்டியலில் முதலில் மது சேர்க்கப்படாமல் இருந்தது. மதுவை நேரடியாகக் குடித்தால் பிரச்னை இல்லை என்பது போன்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளில், `மதுப்பழக்கம், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்' என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்தில் தடுப்பு மருத்துவம், மன அழுத்த மேலாண்மை, சரிவிகித உணவு, வாழ்க்கை முறை மாற்றம் ஏற்படுத்தும் அம்சங்கள், யோகா போன்றவை புற்றுநோய் சிகிச்சைக்கு ஆதரவான அம்சங்கள். புற்றுநோய் சிகிச்சைக்கான என்னிடம் வரும் நோயாளிகளுக்கு, புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த சிகிச்சை அளித்து வருகிறேன். அதில் சித்த மருந்துகளை எடுத்துக் கொண்டவர்களுக்குப் புற்றுநோய் கட்டியின் அளவு குறைதல், வலியிலிருந்து விடுதலை, தலைவலியிலிருந்து விடுதலை, நுரையீரலில் ஏற்பட்ட புற்றுநோய்க் கட்டியின் அளவு குறைதல் போன்ற நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன.

புற்றுநோய்க்கு ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள் தேவை. புற்றுநோயாளிக்கு வலியைக் குறைத்தல், நீர்ச்சத்து இழப்பைத் தடுத்தல், ரத்தச்சோகை ஏற்படாமல் பாதுகாத்தல் ஆகியவை அவசியம்.

வேறுபாடுகளை களைந்து அனைத்து மருத்துவ முறைகளும் இணைந்து ஒருங்கிணைந்த ஆய்வு முடிவுகளை மேற்கொண்டால் வெற்றி நீண்ட தூரத்தில் இல்லை" என்றார் அவர்.


டிரெண்டிங் @ விகடன்