வெளியிடப்பட்ட நேரம்: 14:22 (29/09/2018)

கடைசி தொடர்பு:14:22 (29/09/2018)

``கம்மங்கூழும், விரால் மீனும் ரொம்பப் பிடிக்கும்!’’- வேல்முருகன் ஃபிட்னெஸ் சீக்ரெட்

மிழக அரசியலில் தவிர்க்க முடியாதவர்களில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கும் இடமுண்டு. மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர். தன்னுடைய உணவுப் பழக்கம், ஃபிட்னெஸ் குறித்து இங்கே பகிர்கிறார்.

வேல்முருகன் - தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்

``பெரும்பாலும், பயணங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும் ஈடுபடுவதால், `டயட்’ என்று எதையும் வகுத்துக்கொள்வதில்லை. அந்தந்தப் பகுதிகளுக்குச் செல்லும்போது, அங்கேயுள்ள மக்கள் என்ன உணவுகளைத் தருகிறார்களோ அதைத்தான் சாப்பிடுகிறேன். பொதுவாக, காலையில் இரண்டு இட்லி எடுத்துக்கொள்வேன். பகல் உணவாக அரிசிச் சாதம், சாம்பார், மீன் குழம்பு சாப்பிடுவேன். என்னுடைய சொந்த மாவட்டமான கடலூரில் விரால் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும். அந்த மீன் குழம்பை விரும்பி உண்ணுவேன். இரவு உணவாக இட்லி அல்லது கோதுமை தோசை எடுத்துக்கொள்வேன். குக்கிராமங்களுக்குப் போகும்போது அங்கே கம்மங்கூழும், கேழ்வரகுக் கூழும்  குடிப்பேன்.

கேழ்வரகு கூழ்

தருமபுரி சென்றால், என்னுடைய நண்பர்கள் களி கொண்டுவந்து கொடுப்பார்கள். சேலம் மாவட்டத்துக்குச் சென்றால், அங்குள்ளவர்கள் மேட்டூர் அணைக்கட்டிலிருந்து மீன் பிடித்துவந்து, சமைத்துக் கொடுப்பார்கள். சிலர், கீரை வகைகளில் தொக்கு செய்து தருவார்கள். இப்படியாகத்தான் என்னுடைய உணவுப் பழக்கம் இருக்கும். டீ, காபி, கூல்ட்ரிங்ஸ் அருந்த மாட்டேன். மது, சிகரெட் பழக்கமும் கிடையாது. ஆகவே, எனக்கு ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் கிடையாது. 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, சிறையில் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது, மாவீரன் திலீபன் வழியில் ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை. அதனால், எனக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. என்னுடைய கண்பார்வை மங்கியது. சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறினேன். 

தமிழகம் முழுக்கப் பயணிக்கும்போது, சில நேரங்களில் என்னுடைய கட்சிக்காரர்களின் வீடுகளில் சாப்பிட முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அந்த மாதிரியான நேரங்களில் சாலையோரக் கடைகளிலும், உணவு விடுதிகளிலும் சாப்பிடுவேன். இதனால், குடலில் அதிக அளவில் கழிவுகள் தங்கி, குடல்வால் எனும் `அப்பெண்டிசைட்டிஸ்' (appendcities) ஏற்பட்டுவிட்டது. பிறகு, அறுவைசிசிச்சை செய்ததால், உயிர்பிழைத்தேன். மக்கள் பணிக்கே அதிக நேரம் ஒதுக்கிவிடுகிறேன். திருமணங்கள், மஞ்சள் நீராட்டுவிழாக்கள், போராட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகள் எனத் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருப்பதால், உடற்பயிற்சி செய்வதற்கு நேரமிருப்பதில்லை. ஆனால், சென்னையில் இருக்கும்போது மெரினா கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வேன்!’’ என்கிறார் வேல்முருகன்.