வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (29/09/2018)

கடைசி தொடர்பு:20:50 (29/09/2018)

ஆஸ்பிரின் இதயத்தைக் காக்காது... அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு!

`தினமும் ஓர் ஆஸ்பிரின் சாப்பிடுங்கள்... உங்கள் ஆயுள் அதிகரிக்கும்...', `நடுத்தர வயதுடையவர்கள் அன்றாடம் ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்துக்கொள்வதால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளலாம்' - இதுபோன்ற நம்பிக்கை தரும் செய்திகளைக் கடந்த காலங்களில் நிறையவே பார்த்திருப்போம், கேட்டிருப்போம். 

ஆஸ்பிரின்

வயது முதிர்வால் ஏற்படும் இதயப் பிரச்னைகளைத் தடுப்பதற்காக, குறைந்த டோசேஜ் கொண்ட ஆஸ்பிரின் வகை மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். இதயப் பிரச்னை மட்டுமன்றி புற்றுநோய், மாரடைப்பு போன்றவற்றையும் இந்த மாத்திரைகள் தடுக்கும் என்பதால், முதியவர்கள் சிலர் மருத்துவர்களின் பரிந்துரை ஏதுமின்றி தாமாகவே இந்த மருந்துகளை உட்கொள்வதுண்டு. `நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன்' (New England Journal of Medicine) என்ற மருத்துவ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், குறைந்த டோசேஜ் உள்ள ஆஸ்பிரின் வகை மாத்திரைகளை உட்கொள்வதால் இதயப் பிரச்னைகள் வரும் என்பது தெரிய வந்துள்ளது. 

2010 முதல் 2014 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 65 வயதுக்கும் மேற்பட்ட, உடல் சார்ந்த எத்தகைய பாதிப்புகளும் இல்லாத முதியவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் அனைவருக்கும் பிளேசிபோ (Placebo) வகை மாத்திரைகள் தரப்பட்டன. பிளேசிபோ என்பது, போலி மருந்து (Fake medicine) வகையைச் சேர்ந்தது. இந்த மாத்திரையை உண்பதால், உடலில் எந்தவித மாற்றமும் நிகழாது. ஆனால், இதைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது எனச் சொல்லி மருத்துவர்கள்  அறிவுரைப்பதால், மூளை அதை நம்பும். அதன்படி உடலில் மாற்றம் ஏற்படுவதாக அவர்கள் நம்புவர்.

முதுமை

இப்படியாக, ஆஸ்பிரின் மாத்திரைகள் சாப்பிட்டவர்களுக்கும் போலி மருந்துகளைச் சாப்பிட்டவர்களுக்கும் ஆய்வு நடத்தப்பட்டது. போலி மருந்துகளை உட்கொண்டவர்களுக்கு, உடலில் எத்தகைய நன்மைகளும் நடக்கவில்லை. அதேநேரம், முதுமை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் ஏற்படும். ஆஸ்பிரின் உட்கொள்பவர்களுக்கு, அந்த முதுமைப் பிரச்னைகள் தடுக்கப்படுகின்றனவா இல்லையா என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், பிளேசிபா வகை மாத்திரைகள் உட்கொண்டவர்களைக் காட்டிலும் ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டவர்களே அதிகமாக இறப்புக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இது வயது முதிர்வால் இயற்கையாகப் பிரச்னைகளை எதிர்கொண்டவர்களைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதயம்

இதய பாதிப்புகள் மட்டுமன்றி, மூளை மற்றும் இரைப்பை பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. எனவே, 'ஆஸ்பிரின் இதயத்தைக் காக்கும்' என நினைத்துக்கொண்டு, மருத்துவர்களின் பரிந்துரையின்றி ஆஸ்பிரின் வகை மாத்திரைகள் உட்கொள்வதை இன்றே கைவிடுவது மிகவும் நல்லது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க