வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (04/10/2018)

கடைசி தொடர்பு:18:00 (04/10/2018)

சென்னையில் இயங்கிவரும் செல்லப்பிராணிகளுக்கான ரத்த வங்கி! #Amazing

நாட்டு நாய்கள், லேப்ரடார் போன்ற வெளிநாட்டு நாய்கள் என எந்த வகை நாய்களும் ரத்ததானம் அளிக்க முடியும். மனிதர்களைப் போலவே நாய்களிடம் இருந்தும் 350 மில்லி ரத்தம் தானமாகப் பெறப்படும்.

 ங்கள் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்கிறீர்களா? அப்போது இதைப் பற்றியும் நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் விலங்குகளுக்கான ரத்த வங்கி செயல்படுகிறது. ஆசியாவிலேயே அதிக அளவில் விலங்குகளுக்கான ரத்தப் பரிமாற்றம் அதிகம் நடைபெறும் வங்கி இதுதான். இந்தியாவில் செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட விலங்குகளுக்கான ஒரே ரத்தவங்கியும் இதுதான்.

 ஒரு மாதத்தில் மட்டும் 22 நாய்களுக்கு இந்த வங்கியில் உள்ள ரத்தத்தைப் பயன்படுத்தி ரத்தப் பரிமாற்றம் நடைபெறுகிறது. வழக்கமாக ரத்ததானம் வழங்கும் நாய்களுக்கான பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பூனை, மாடு போன்ற விலங்குகளின் ரத்தங்களும் தானம் பெறப்படுகின்றன. ஆனால், நாய்களின் ரத்தத்துக்கே தேவை அதிகமாக உள்ளது. சாலை விபத்துகள், ரத்தசோகை, பிரசவத்துக்குப் பின்னால் ஏற்படும் ரத்த இழப்பு, புற்றுநோய், அறுவைசிகிச்சை என மனிதர்களுக்கு என்னென்ன சிகிச்சைகளுக்கு ரத்தம் அவசியப்படுகிறதோ, அதே அவசியம் விலங்குகளுக்கும் ஏற்படுகிறது. 

ரத்தவங்கி

"நாட்டு நாய்கள், லேப்ரடார் போன்ற வெளிநாட்டு நாய்கள் என எந்த வகை நாய்களும் ரத்ததானம் அளிக்க முடியும். மனிதர்களைப் போலவே நாய்களிடம் இருந்தும் 350 மில்லி ரத்தம் தானமாகப் பெறப்படும். ஒருவேளை சிகிச்சை பெறும் நாய்க்கு 100 மில்லி ரத்தம் மட்டும் போதும் என்றால், 100 மில்லி மட்டுமே தானமாகப் பெறுவோம். தானம் வழங்கிய 3 வாரங்களில் நாய்களின் உடலில் புது ரத்தம் உற்பத்தியாகிவிடும். ஆரோக்கியமான, தடுப்பூசிகள் முறையாக வழங்கப்பட்ட பெர்ஃபெக்ட் நாய்களிடமிருந்தே ரத்தத்தைப் பெறுகிறோம். விழிப்பு உணர்வு குறைவாக இருப்பதால், தங்கள் செல்லப்பிராணிகளின் ரத்தத்தைத் தானமாக அளிக்க பலர் முன்வருவதில்லை.

நட்பாக இருக்கும் நாயிடமிருந்து ரத்தத்தைப் பெறுவது எளிது. ஆனால், சற்று கோபக்காரர் என்றால், சிறிது மயக்க மருந்து கொடுத்துதான் தானம் பெற முடியும். வழக்கமாக தானம் அளிப்பதால், ஜாலியாக ரத்ததானம் கொடுக்கும் நாய்களும் உண்டு" என்கிறார் ரத்த வங்கி அதிகாரி டாக்டர் ஜி.ஆர்.பரணிதரன்.