வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (08/10/2018)

கடைசி தொடர்பு:17:17 (08/10/2018)

மீண்டும் செயல்படத் தொடங்கியது `108' அவசர எண்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த இரண்டு மணி நேரமாக செயல்படாமல் இருந்த `108' அவசர எண் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. 

108

அவசர சிகிச்சை எண்ணான `108' சேவை மையம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வரும் அழைப்புகள் இங்கு வந்த பின்னர்தான் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு மாற்றப்படும். 

இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக `108' அவசர சிகிச்சை எண் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்காலிக மாற்று எண்ணாக 044-40170100 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது  பிரச்னை சரிசெய்யப்பட்டதாக `108' ஆம்புலன்ஸ் சேவையின் இயக்குநர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,

``  108 சேவை எண் தடைப்பட்ட நேரத்தில் 102,104, எங்களுடைய கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள தொலைபேசி எண்களின் மூலமாக சேவை வழங்கினோம். இடைப்பட்ட நேரத்தில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்கியிருக்கிறோம். தற்போது கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. இனி மக்கள் 108-க்கே  அழைக்கலாம்.`` என்றார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க