வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (09/10/2018)

கடைசி தொடர்பு:17:45 (09/10/2018)

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பரவுகிறது டெங்கு காய்ச்சல்! - சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

டெங்கு

சென்னையில் மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் காய்ச்சல் பாதிப்பால் ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனையில் அவர்களுக்கு டெங்கு பாதிப்பு இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, அவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று மாநகராட்சி சுகாதார அலுவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

``இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் கேட்டோம். ``சென்னையில் டெங்கு பாதிப்பு பரவுவது உண்மைதான். சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடங்கியிருக்கிறது. அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பாதிப்புள்ள பகுதிகளுக்குச் சென்று விழிப்பு உணர்வு ஏற்படுத்துகிறார்கள். சென்னையில் மாநகராட்சி ஊழியர்களும் சுகாதார அலுவலர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதோடு பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருந்தால்தான் டெங்கு பாதிப்பிலிருந்து தப்ப முடியும். எனவே, பொதுமக்களும் கொசு  ஒழிப்பில் அக்கறை எடுத்துக்கொண்டால் மட்டுமே பாதிப்பை எதிர்கொள்ள எளிதாக இருக்கும். கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவற்றின் வாழ்விடங்களை அழிப்பதே முக்கியமானது.

வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைத்து, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு உருவாக ஒரு வாரத்திலிருந்து 10 நாள்கள் போதும் என்பதால், முறையாக மூடிவைக்காமல் பயன்படுத்தும் குடிநீரில்கூட எளிதாகக் கொசுக்கள் உருவாகிவிடுகின்றன. அதேபோல, சுற்றுப்புறங்களில் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளைத் தவிர்த்து, தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்கிநிற்பதைத் தவிர்க்க வேண்டும். அந்த இடங்களில் மணலைக் கொண்டு நிரப்பி, நீர் தேங்காதவாறு சமப்படுத்த வேண்டும்.

ஒரு வாரத்துக்கும் மேலாகப் பாத்திரங்கள், குடங்கள், டின்களில் தண்ணீரைச் சேர்த்துவைப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் அல்லது அவற்றை நன்றாக மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்குகளின் மூடிகளை காற்றுப் புகாமல் மூடிவைக்க வேண்டும். வீட்டின் கதவுகள், ஜன்னல்களுக்கு கொசு புகாத வலைகளைப் பொருத்தலாம். மேலும், அரசின் நடவடிக்கைக்குப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். எங்காவது சுகாதாரமற்ற முறைலில் இருக்கும் இடங்களைக் கண்டாலோ, தேங்காய், டயர்களைக் கண்டாலோ  104 என்ற எண்ணுக்கு பொதுமக்களே புகார் தெரிவிக்கலாம்" என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க