டயட் கிடையாது... ரெகுலரா ஜிம்முக்குப் போயிடுவேன்! - இயக்குநர் விஜய் மில்டன் ஃபிட்னெஸ் | Story about Vijay Milton fitness secret

வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (10/10/2018)

கடைசி தொடர்பு:19:51 (10/10/2018)

டயட் கிடையாது... ரெகுலரா ஜிம்முக்குப் போயிடுவேன்! - இயக்குநர் விஜய் மில்டன் ஃபிட்னெஸ்

கோலிவுட்டில் இயக்குநர்கள் எப்போதும் பரபரப்பாகவே இருப்பார்கள். அதுவும் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் இருப்பவர்களை சொல்லவே வேண்டாம். டிஸ்கஷன், ஷூட்டிங், டப்பிங் என பிஸியாக இருப்பார்கள். அதனால், டயட், ஃபிட்னெஸ் விஷயத்தில் சில நேரங்களில் அக்கறை எடுத்துக்கொள்ள நேரமிருக்காது. ஆனால், இதில் விலக்கானவர்களும் உண்டு. இயக்குநர் விஜய் மில்டன் அந்த ரகம். பிஸியான ஷெட்யூல்களுக்கு இடையே ஃபிட்னெஸ்ஸிலும் கவனம் செலுத்துகிறார்.  

இயக்குநர் விஜய் மில்டன்

``நினைத்ததை சாப்பிடற சூழ்நிலை இல்லைன்னா என்ன வாழ்க்கை அது. நாற்பது வயசுக்கு மேல், இதைச் சாப்பிடக்கூடாது; அதை சாப்பிடக்கூடாதுன்னு சொன்னா எப்படி. நூறு வயசு வரைக்கும் உயிரோடு இருப்போம்ங்கிறதுக்கு யாரு கியாரண்டி. அதனால், விரும்புகிறதைச் சாப்பிடுவேன்.. டயட் எல்லாம் இருக்க மாட்டேன். 

உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு அவசியம்தான். எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு சும்மா இருந்துட முடியாதுல்ல. இன்னிக்கி வரைக்கும் எனக்கு உடல்ரீதியாக எந்தப் பாதிப்பும் வரல. ஒருவேளை அப்படி ஏதாவது வந்துச்சுன்னா எனக்கு டயட் அவசியப்படலாம். எனக்கு வேர்க்கடலைன்னா ரொம்பப் பிடிக்கும். அதை அவித்தோ, வறுத்தோ எந்த வகையில் கொடுத்தாலும் சாப்பிடுவேன். அதேமாதிரி என்ன வகையான ஸ்வீட்டா இருந்தாலும் சாப்பிடப் பிடிக்கும். ஷூட்டிங்குக்காக எந்த ஊருக்குப் போகிறேனோ அங்கு என்ன ஸ்பெஷலோ, அதை வாங்கிச் சாப்பிடுவேன். ஆனால், அளவு குறைவாகதான் இருக்கும். அதேபோல, இதுவரைக்கும் சாப்பிடாத உணவா இருந்தா, அதை முதலில் வாங்கிச் சாப்பிடுவேன். 

என்னுடைய அப்பா உடற்பயிற்சி செய்வார். அவரைப் பார்த்தே நானும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சுட்டேன். அப்படி, சின்ன வயசுல இருந்தே உடற்பயிற்சி என்பது என்னோடு இருந்துக்கிட்டே இருக்கு. தினசரி ஜிம்முக்குப் போய்ட்டிருந்தேன். வெயிட் லிப்டிங் எக்ஸர்சைஸ் பண்ணுவேன். இப்போது, ஷூட்டிங்குக்காக அடிக்கடி வெளியூர் போக வேண்டியிருக்கிறதால், வீட்டிலேயே ஒரு ஜிம்மை உருவாக்கிட்டேன். காலையில் எழுந்ததும் ஒரு அரை மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வேன். அப்படிச் செய்யலைன்னா அன்னைக்கு எதையோ மிஸ் பண்ணிட்ட மாதிரி உணருவேன். அதேபோல, ஷர்ட்டில், டென்னிஸ் இரண்டும் ரெகுலரா விளையாடுவேன். எவ்வளவு நேரம் விளையாடினாலும் டயர்டே ஆக மாட்டேன்!” என்கிறார் விஜய் மில்டன்


[X] Close

[X] Close