வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (15/10/2018)

கடைசி தொடர்பு:17:23 (15/10/2018)

குழந்தைகள் சரியாகக் கைகழுவினால், 95 சதவிகித நோய்களைத் தடுக்கலாம்! எப்படி? #GlobalHandWashingDay

"குழந்தைகளின் கைகளை முறைப்படி கழுவுவது, சாதாரண விஷயம் கிடையாது அம்மாக்களே. வயிற்றுப்போக்கு, வாந்தி, நிம்மோனியா உள்ளிட்ட பல பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.''

குழந்தைகள் சரியாகக் கைகழுவினால், 95 சதவிகித நோய்களைத் தடுக்கலாம்! எப்படி?  #GlobalHandWashingDay

ன்று `உலக கை கழுவும் தினம்'. பெரியவர்கள், 10 வயதுக்கு மேற்பட்ட வளர்ந்த குழந்தைகள், இயல்பாகவே சாப்பிடுவதற்கு முன்னால் கை கழுவிவிடுவார்கள். ஆனால், புதிதாகத் தானாகச் சாப்பிட ஆரம்பித்த குழந்தைகளுக்கு விவரம் புரியாது. அனைவரும் எப்படி கைகளை எப்படிக் கழுவ வேண்டும். அதற்கு எப்படிப்பட்ட சோப்பைப் பயன்படுத்த வேண்டும். விவரிக்கிறார், குழந்தை நல மருத்துவர் பழனிராஜ்.

``குழந்தைகளின் 3 வயதிலிருந்து அவர்களின் கைகளைச் சுத்தமாக வைத்திருக்க ஆரம்பிக்க வேண்டும். `நானே சாப்பிட்டுக்கிறேன்' என்று அவர்கள் சாப்பிட ஆரம்பிக்கும் வயது அது. குழந்தைகள் சாப்பிட ஆரம்பிக்கும் முன்பு, வாசனை இல்லாத, அல்லது வாசனை குறைவாக உள்ள ஹேண்டு வாஷ் மூலம் முழங்கை வரை கழுவிவிட வேண்டும். கைகளில் சோப்பின் வழவழப்புத்தன்மை போகும் வரை தண்ணீரால் கழுவ வேண்டியது அவசியம். இல்லையென்றால், ஹேண்டு வாஷில் இருக்கும் கெமிக்கல் குழந்தைகளின் வயிற்றுக்குள் போய்விடும்.

கை கழுவிடுங்கள்

வாசனை அதிகமுள்ள ஹேண்டுவாஷ்களில், கெமிக்கல்ஸ் அதிகமாக இருக்கும். அது குழந்தைகளின் கைகளை வறண்டுபோகச் செய்துவிடும். சோப்பு நுரை போகும் வரை கழுவவில்லை என்றால், பிரச்னையைத் தடுக்கவேண்டிய ஹேண்டு வாஷாலேயே குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம்'' என்கிற டாக்டர் பழனிராஜ், கைகள் சுத்தமாக இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகளையும் சொன்னார்.

``குழந்தைகளின் கைகளை முறைப்படி கழுவுவது, சாதாரண விஷயம் கிடையாது அம்மாக்களே. வயிற்றுப்போக்கு, வாந்தி, நிம்மோனியா உள்ளிட்ட பல பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு உண்டாகும் தொற்றுகளில் 95 சதவிகிதம் வரை, சுத்தமான கைகளால் தடுக்க முடியும். இவை, பலகட்ட ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மை.

`என் குழந்தை வெளியில் சென்று விளையாட மாட்டான்' என்று சில அம்மாக்கள் சொல்லலாம். வீட்டின் சோபா, ஜன்னல், கதவு ஆகிய இடங்களிலும் தூசி இருக்கும். அங்கே கை வைப்பார்கள். அழுக்கான பொம்மைகளுடன் விளையாடுவது, தொலைக்காட்சியின் ரிமோட்டை கையிலேயே வைத்திருப்பது இவற்றாலும் குழந்தைகளின் கைகள் அசுத்தமாகும். 

சாப்பிடுதல்

சாப்பிடுவதற்கு முன்பு, கை சுத்தம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம், டாய்லெட் போய்விட்டு வந்ததும் கைகளை வாஷ் செய்வது. குழந்தைகள் டூ பாத்ரூம் போனால், அம்மாக்கள்தாம் சுத்தப்படுத்துகிறார்கள். ஆனால், அம்மாக்கள் பார்க்காத நேரத்தில் குழந்தைகள், மலம் கழிக்கும் உறுப்பில் கைகளை வைத்துவிடலாம். கண்ணுக்குத் தெரியாமல் அவர்களின் கைகளில் அசுத்தம் உண்டாகி, லட்சக்கணக்கில் கிருமிகள் இருக்கும். அந்தக் கையை வாயில் வைத்துவிட்டால்... இந்த விஷயம், குழந்தைகளின் ஆரோக்கியத்தைச் சீரழித்துவிடும். அதனால், டாய்லெட்டைப் பயன்படுத்திய பிறகு, அம்மா மற்றும் குழந்தை இருவரும் சோப்புப் போட்டு கை கழுவுவதே நல்லது'' என்றவர் குழந்தைகளின் கையை எப்படிக் கழுவ வேண்டும் என்றும் சொன்னார்.

``குழந்தைகளின் கைகளை ஈரமாக்கி விட்டு, சிறிதளவு சோப்போ அல்லது ஹேண்டுவாஷையோ அவர்களின் கைகளின் மேல் தடவி விடுங்கள். இப்போது கைகளின் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து இரண்டு கைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாகத் தேய்த்து, நகக் கண்களை சுத்தப்படுத்தி, பிறகு தண்ணீர் விட்டு கைகளை நன்கு அலச வேண்டும். 

கேட்பதற்கு இது சின்ன விஷயமாகத் தோன்றலாம். ஆனால், பெரியளவில் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பழக்கம் இது. அதனால், குழந்தைகளுக்கு முன்மாதிரியாகப் பெற்றோர்களும் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள்'' என்கிறார் டாக்டர் பழனிராஜ். 


டிரெண்டிங் @ விகடன்