வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (15/10/2018)

கடைசி தொடர்பு:17:58 (15/10/2018)

கை கழுவியதும் `ஹேண்ட் ட்ரையர்' பயன்படுத்தினாலும் கிருமித் தொற்று வரும், எச்சரிக்கை! #GlobalHandWashingDay

கலிலியோவின் கண்டுபிடிப்பை ஏற்காத மதவாதிகள் அவரை சிறையில் அடைத்ததைப் போல, `உங்கள் கைகளைக் கழுவுங்கள்...' என ஆஸ்திரிய நாட்டின் வியன்னாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூற அவரைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். 

கை கழுவியதும் `ஹேண்ட் ட்ரையர்' பயன்படுத்தினாலும் கிருமித் தொற்று வரும், எச்சரிக்கை! #GlobalHandWashingDay

`அதென்ன கைகழுவும் தினம்...' என்று கேள்வி கேட்டவுடன் `சந்தையில் புதிது புதிதாக வரும் சோப்புகளை மார்க்கெட் பண்றதுக்கான ட்ரிக் தான், இந்தக் கை கழுவுற நாள்...' என்று சிலர் பதிலளிப்பதைக் கேட்டிருக்கிறோம்.

கை கழுவுதலின் அவசியத்தை முதன்முதலாக ஒரு மருத்துவர், மற்ற மருத்துவர்களிடம் சொல்லும்போதும் இதே எதிர்ப்பைத்தான் சந்தித்தாராம். கலிலியோவின் கண்டுபிடிப்பை ஏற்காத மதவாதிகள் அவரை சிறையில் அடைத்ததைப் போல, `உங்கள் கைகளைக் கழுவுங்கள்...' என ஆஸ்திரிய நாட்டின் வியன்னாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூற அவரைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். 

1847-ம் ஆண்டு குழந்தைப்பேற்றுக்குப் பிறகு, 5 பெண்களில் ஒருவருக்குக் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் முழுவதும் சீழ்பிடித்து இறந்திருக்கின்றனர். இதைக் கண்ட `இக்னாஸ் செம்மல்வீல்ஸ்' என்ற மகப்பேறு மருத்துவர், பிரசவம் பார்க்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் பிரசவம் பார்க்கும் முன் குளோரின் நீரில் கைகளைக் கழுவுவதன்மூலம் பிரசவக்காலத்துக்குப் பிறகான இறப்பைத் தடுக்கலாம் என்பதை உணர்ந்தார். அதை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் அவர் வலியுறுத்த அவரது கருத்துகள் ஏற்கப்படாததுடன் அப்போதைய அரசு, அவரை மனநல காப்பகத்தில் உள்ள தனிமைச் சிறையில் அடைத்தது. கை கழுவுதலின் அவசியத்தை நன்கு உணர்ந்திருந்த டாக்டர் இக்னாஸ், சிறையிலும் கிருமித் தொற்றினைத் தடுக்கும் முறைகள் பற்றித் தொடர்ந்து பேசி வந்ததுடன் அதுபற்றிய புத்தகங்களையும் எழுதினார். அவர் செய்த அந்தச் செயல்களுக்குத் தண்டனையாக அவரை அடித்துக் காயப்படுத்தினர். இதனால் அவரது உடல் முழுவதும் கிருமிகள் பரவி, பிரசவத்துக்குப் பிறகு இந்தப் பெண்களைப் போலவே, இக்னாஸும் உயிரை இழந்தார்.

கைகழுவுதல்

இதையடுத்து ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு அதே டாக்டர் இக்னாஸின் ஆய்வை முன்னிறுத்தி ஜோசப் லிஸ்டர் என்ற மருத்துவர் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறைகளைப் பரிந்துரைத்தார். அதேபோல், லூயிஸ் பாஸ்டர் நோய்க் கிருமிகள் ஒழிக்கும் முறையைப் பரிந்துரைத்தார். இவர்கள் இரண்டுபேரும் சொன்னதையடுத்தே கை கழுவுதலின் அவசியம் மருத்துவ உலகத்துக்குப் புரிந்ததாம். அன்றிலிருந்து இன்று வரை, மருத்துவ உலகம் மக்களிடம் கை கழுவுதலின் அவசியத்தை வலியுறுத்தும்போதெல்லாம், இதுபோல சில எதிர்ப்புகளைச் சந்தித்துதான் வருகிறது.

கைகளைக் கழுவுதல் அவ்வளவு அவசியம்தானா என்பதைத் தெரிந்துகொள்ள, சில விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. உண்மையில் புற்றுநோய், மாரடைப்பு, சர்க்கரைநோய், ரத்தக் கொதிப்பு, எய்ட்ஸ் ஆகியவை பெரியவர்களுக்கு எப்படி உயிர்க்கொல்லி நோயாக இருக்கிறதோ, அதேபோல 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணத்துக்கு முக்கியக் காரணமாக விளங்குவது வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா காய்ச்சல் என்கிறது சிடிசி (CDC)என்ற உலக நோய் எதிர்ப்பு அமைப்பு.

உலகளவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 14 லட்சம் குழந்தைகளை வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா நோய் காரணமாக நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் மட்டுமே கைகளை ஒழுங்காகக் கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கினால், ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் ஒரு லட்சம் குழந்தைகளை இழக்கவும் நேரிடுகிறது. முறையான கைகழுவுதல், இந்த நோய்கள் பரவுவதைப் பெருமளவு தடுப்பதுடன், இத்தனை லட்சம் குழந்தைகளையும் காக்க முடியும் என்பதால், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதியன்று உலக கை கழுவும் நாளாக அனுசரித்து வருகிறது உலக சுகாதார அமைப்பு.

கிருமித்தொற்றை தடுக்க கைகழுவுதல்

பொதுவாகவே எந்தவொரு பொருளைத் தொடும்போதும் நமது கைகளிலும், விரல்களிலும் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நூற்றுக்கணக்கான கிருமிகள் உயிர்வாழ்வதுடன் பரவவும் செய்கின்றன. அதனாலேயே, மருத்துவ உலகம் மனிதக் கைகளை, `கிருமித் தொழிற்சாலை' (Germ Factory) என்று அழைக்கிறது. இந்தக் கிருமித்தொழிற்சாலையில் எப்போதும்,  ஸ்டேஃபிளோகோகஸ் எபிடிர்மீடிஸ் (Staphylococcus epidermidis), புரோப்யோனிபாக்டீரியம் (Propionibacterium), டிப்திராய்ட்ஸ் (Diphtheroids) போன்ற வீரியம் குறைந்த பாக்டீரியாக்களும், சில நேரங்களில் ஈ கோலி (E.coli), ஷிகெல்லா (Shigella), ஸ்டீஃபிலோகோகஸ் ஆரியஸ் (Staphylococcus aureus), ஸ்டெப்டோகோகஸ் (Streptococcus) போன்ற வீரியம் நிறைந்த பாக்டீரியாக்களும் காணப்படுகின்றன..

கழுவப்படாத அசுத்தமான விரல்களின் மூலம் உடலின் உள்ளே நுழையும் இந்த பாக்டீரியாக்களின் வீரியத் தன்மையைப் பொறுத்து நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காலரா, டைஃபாய்டு, சீதபேதி, அமீபியா வயிற்றுப்போக்கு, நிமோனியா, கண்நோய் எனப் பற்பல நோய்களை ஏற்படுத்துகின்றன. பாக்டீரியா நோய்கள் மட்டுமன்றி ஹெபடைடிஸ் நோய், ஃபுளூ காய்ச்சல், மஞ்சள்காமாலை, எபோலா நோய் போன்ற வைரஸ் கிருமிகளைப் பரப்புவதிலும் நமது கைகளுக்குப் பெரும்பங்கு உண்டு. அதனால்தான், கைகளைக் கழுவுவதன் அவசியம் பற்றியும், கைகளைக் கழுவும் முறைகள் பற்றியும், அதனால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நாளாக இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது. முறையான கைகழுவுதலை குழந்தைகளிடையே தொடர்ச்சியாக வலியுறுத்த வேண்டும். வயிற்றுப்போக்கை 50 சதவிகிதமும், நிமோனியா காய்ச்சலை 25 சதவிகிதமும் குழந்தைகளிடையே குறைக்க முடியும் என்கிறது யுனிசெஃப்.

தினமும் கைகளைக் கழுவிக் கொண்டுதானே இருக்கிறோம். அது என்ன முறையான கைகழுவுதல் என்று சிலர் கேட்கலாம். நாம் பிறந்த முதல் வருடத்திலிருந்து நடந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால், ஒரு ராணுவ வீரரின் நடை நேர்த்தி எப்படி நம்மிடம் இருப்பதில்லையோ, அதேபோல நாம் இத்தனை வருடங்களாகக் கைகளைக் கழுவினாலும், முறையாகக் கழுவுவதில்லை என்பதுதான் உண்மை‌. `கைகழுவுதல் என்பது நாம் தினந்தோறும் செய்யும் செயல்தான் என்றாலும் கட்டை விரல், அனைத்து விரல்களின் நகங்கள், விரல் இடுக்குகள், புறங்கை ஆகியவற்றைக் கழுவும்போது எளிதில் விடுபட்டுப் போகும் இடங்கள் என்பதாலேயே கைகழுவுதலுக்கு முறையான வழிமுறைகள் தேவை' என்கிறார் மருத்துவப் பேராசிரியர் டெய்லர். டெய்லரின் ஆய்வைக் கொண்டு கைகழுவும் முறையை 7 நிலைகளாகப் பிரித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

கை கழுவதல்

முதலில் இரண்டு கைகளையும் குழாய் நீரில் கழுவ வேண்டும். சூடான அல்லது வெதுவெதுப்பான நீர் கிடைக்காத பட்சத்தில், குளிர்ந்த நீரில் கைகளைக் கழுவலாம். ஒரு காயின் அளவு திரவ சோப் அல்லது பார் சோப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இரண்டு உள்ளங்கைகளையும் நன்றாகத் தேய்க்க வேண்டும். சோப் இரண்டு கைகளிலும் சமமாகப் பரவி இருத்தல் வேண்டும். (Palm to palm)

* வலது உள்ளங்கையால் இடது புறங்கையை நன்றாகத் தேய்க்க வேண்டும். அதேபோல, இடது உள்ளங்கையால் வலது புறங்கையைத் தேய்க்க வேண்டும். (Palm to dorsum)

* இரண்டு கைகளையும் கோத்து, விரல் இடுக்குகளை நன்றாகத் தேய்க்க வேண்டும். (Interlacing)

* விரல்களின் பின்புறத்தை உள்ளங்கையில் தேய்க்க வேண்டும். 10 விரல்களும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டது போல, இது தோன்றும். (Interlocking)

* மற்ற விரல்களிலிருந்து கட்டை விரலை நோக்கி சோப்பைத் தேய்க்க வேண்டும். (Fingers to thumb sweep)

* குவித்த இடது விரல்களால் வலது உள்ளங்கையையும், வலது விரல்களால் இடது உள்ளங்கையையும் சுழற்றித் தேய்க்க வேண்டும். (Circular sweep)

கடைசியாக, இரு கைகளின் மணிக்கட்டு வரை தேய்க்க வேண்டும். (Palm to wrist)

நன்றாகத் தேய்த்ததும் இரு கைகளையும் சோப் முழுமையாக நீங்கும்படி குழாய் நீரில் கழுவ வேண்டும். கைகளை நீரில் நன்றாகக் கழுவியதும், உலர்ந்த அல்லது சுத்தமான துண்டால் துடைக்க வேண்டும். துடைத்த துண்டை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. (Rinse and dry) 

இவ்வாறு கைகளைச் சுத்தம் செய்யும் வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.

கைகழுவும் மாணவர்கள்

குழந்தைகளுக்கு, இந்தக் கைகழுவும் முறையை எளிதாகச் சொல்லித்தர வேண்டுமென்றால்,`ஹேப்பி பர்த்டே ட்டூ யூ' பாடலை இரண்டுமுறை பாடிக் கொண்டே கைகளைக் கழுவச் சொல்கிறது இந்த அமைப்பு. இப்படித்தான் கைகளைக் கழுவ வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்வது போல, எப்போதெல்லாம் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும் என்பதை அறிந்து கொள்வதும் அவசியமே. 

* உணவு தயாரிப்பதற்கு முன்பும், இடைப்பட்ட நேரத்திலும், பிறகும்.

* உணவு உண்பதற்கு முன்பு.

* குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் முன்பும், பிறகும்.

* கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு.

* குழந்தைகளின் டயாப்பரை மாற்றி சுத்தம் செய்த பிறகு.

* குப்பை மற்றும் கழிவுகளைக் கையாண்ட பிறகு.

* வாகனங்களை ஓட்டிய பிறகு.

* காயங்களை பராமரிக்கும்போது.

* தும்மிய பிறகு அல்லது இருமிய பிறகு.

* உடல் நலமில்லாத ஒருவரைச் சந்திக்கும்போது.

* வளர்ப்பு மிருகங்களைக் கையாளுபோது.

* செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்திய பிறகு.

 இவ்வாறு நமது பணிகளுக்கும் கைகளைக் கழுவுதலுக்கும் உள்ள உறவைச் சொல்கிறது சுகாதாரம்.

சாப்பிடப் போகும் முன் தண்ணீரில் கையை நனைத்துவிட்டு சாப்பிடுவதற்குப் பெயர் `கை கழுவுதல்' இல்லை. குறைந்தது 30 விநாடிகளாவது சோப்பைக் கொண்டு கைகளை நன்றாகத் தேய்த்த பிறகு, கழுவும்முறைதான், உண்மையான கைகழுவுதல் ஆகும். சோப் என்றதும், எந்த சோப் கை கழுவச் சிறந்தது என்று அடுத்த கேள்வியும் எழுவது இயல்பே. உண்மையில் கை கழுவ அதிக ரசாயனம் கலந்த சோப்பினைப் பயன்படுத்தக் கூடாது. கைகளைக் கழுவ, திரவ சோப் (Liquid soap) சிறந்தது என்றாலும் அதன் விலை மற்றும் பராமரிப்பு (dispenser) காரணமாக, வளரும் நாடுகளில், சோப்புக் கட்டிகளே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. ஆன்டிசெப்டிக் அல்லது ஆன்டிஃபாக்டீரியல் சோப்பைத்தான் பயன்படுத்த வேண்டுமா என்றால், ஆன்டிஃபாக்டீரியல் சோப்புக்கும் சாதாரண சோப்புக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது ஓர் ஆய்வு.

வெறும் தண்ணீரால் கைகழுவுவதும், களிமண், செங்கல் அல்லது சாம்பலைக் கொண்டு கைகழுவுவதும் இந்தியாவில் இன்னும் சிலபகுதிகளில் காணப்படுகிறது என்றாலும், நோய்த்தொற்றைத் தவிர்க்க அவை உகந்ததல்ல என்பதால், அவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. உண்மையில் உலக சுகாதாரத்தில் சோப்பின் பங்கு மிக முக்கியமானது. உலக சுகாதார வரலாற்றில், மிக முக்கியக் கண்டுபிடிப்பாகக் கருதப்படுவது ஆன்டிசெப்டிக் லோஷனோ, ஆயின்மென்ட்டோ, வேறு எதுவுமோ கிடையாது‌. அது சோப் கட்டி மட்டுமே. 

நமது நாட்டில் மிகவும் பிரபலமான லைஃபாய் சோப் கூட, இங்கிலாந்து நாட்டில், காலரா நோயைத் தடுக்கத்தான் 1894-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. எனவே, சோப் மற்றும் தண்ணீர் இல்லாத நேரங்களில் ஹேண்ட் சானிட்டைஸர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றில் 60 சதவிகிதம் ஆல்கஹால் அளவு இருப்பது அவசியம். மேலும் ஹேண்ட் சானிட்டைஸர்கள் மிகவும் சுத்தமான உணர்வைத் தந்தாலும் அழுக்கு, எண்ணெய்ப் பிசுக்கு ஆகியவற்றை அவை நீக்காது. கைகளிலுள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை மட்டுமே குறைக்கும். 

கைகழுவுதல்

மருத்துவமனைகளில் ஒரு நோயாளிக்கும் அடுத்த நோயாளிக்கும் இடையே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் இந்த சானிட்டைஸர்களால் சிலருக்குத் தோலில் வறட்சி மற்றும் எரிச்சல் உண்டாகலாம் என்பதைக் கவனித்து, அவற்றைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். உணவகங்கள், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில், கை கழுவும் இடத்தில் ஹேண்ட் ட்ரையர் (Hand Dryer) எனப்படும் மின்விசை இயந்திரங்கள் செயல்படுகின்றன. ஆனால், அவற்றாலும் கிருமித்தொற்று ஏற்படலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஹேண்ட் ட்ரையர்களுக்கு மாற்றாக டிஷ்யூக்களை பயன்படுத்தவும் இந்த ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.

நோயற்ற வாழ்வுக்கு மிகவும் தேவையானவை மூன்று. அவை தண்ணீர், சோப் மற்றும் கைகள். கைகழுவும் முறையை குழந்தைகளுக்கு முறையாகக் கற்றுக் கொடுப்பதுடன் அதைக் குடும்ப வழக்கமாகவும், பள்ளிகளிலும் செயல்படுத்தினால் மிகப்பெரிய சுகாதார மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

அன்றைக்கு டாக்டர் இக்னாஸ், `உங்கள் கைகளைக் கழுவுங்கள்...' என்று சொல்ல, ஒரு நாடே அவரை எதிர்த்தது. ஆனால் இன்று, ஒவ்வொரு நாட்டு மக்களிடையேயும் `உங்கள் கைகளைக் கழுவிவிட்டீர்களா..?' என்று அழுத்தமாகக் கேட்கிறது உலக சுகாதார அமைப்பு.

மேலும் கைகழுவுலுக்கும், சுகாதாரத்துக்கும், உணவுக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்த `சுகாதாரமான சமையலின் ஆரம்பம், சுத்தமான கைகளில் தொடங்குகிறது...' என்பதை இந்த ஆண்டின் முழக்கமாக அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

சுத்தம் சோறு மட்டுமல்ல... சுகாதாரத்தையும் சேர்த்துப் போடும். ஆம்...  உலக கைகழுவுதல் தினம் என்பது ஒரு நாள் விழிப்புஉணர்வு மட்டுமல்ல, இது ஒரு வாழ்க்கைமுறை.

`உன் வாழ்க்கை, உன் கையில்..!' என்ற வாசகம் தமிழில் ஏற்கெனவே பிரபலம். அது முற்றிலும் உண்மையே. ஏனென்றால், சுத்தமான கைகளே, ஆரோக்கியமான உறுதியான கைகள் என்பதை உணர்வோம்!