``இந்த நான்கு காரணங்களால்தான் சொரியாசிஸ் தீவிரமடையும்!'' - எச்சரிக்கும் பேராசிரியர் | This is the reasons behind Psoriasis

வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (15/10/2018)

கடைசி தொடர்பு:19:34 (15/10/2018)

``இந்த நான்கு காரணங்களால்தான் சொரியாசிஸ் தீவிரமடையும்!'' - எச்சரிக்கும் பேராசிரியர்

``மனஅழுத்தம், நோய்த்தொற்று, புகைபிடித்தல், மதுப் பழக்கம் போன்றவற்றால் சொரியாஸிஸ் தாக்கம் அதிகரிக்கிறது. மாறாக, குடிப்பழக்கம், புகைபிடித்தல் போன்ற பழக்கங்களை அறவே நிறுத்தினால், சொரியாஸிஸ் நோயை கட்டுக்குள் வைக்க முடியும்’’ என்று தோல்நோய் சிகிச்சைத் துறையின் இயக்குநரும் பேராசிரியருமான தனலட்சுமி கூறியுள்ளார். 

சொரியாஸிஸ் நோய் குறித்து விளக்கம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வாரம்தோறும் திங்கள்கிழமையன்று, மக்கள் - மருத்துவர்களிடையே உறவை மேம்படுத்துவதற்கான விழிப்பு உணர்வுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. கூட்டத்தில், பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்று, நோய்கள் மற்றும் அவற்றுக்கான அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து விளக்கமளிப்பார்கள். அந்த வகையில் இன்று (15.10.2018) காலை தோல்நோய் சிகிச்சைச் துறை சார்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில், துறை இயக்குநரும் பேராசிரியருமான தனலட்சுமி பங்கேற்று, தோல்நோய் சிகிச்சைகள் பற்றிப் பேசினார்.

``அன்றாட வாழ்வில் நாம் காணும் தோல் தொடர்பான பிரச்னைகளில் படர் தாமரை, சொரியாஸிஸ் போன்ற முதன்மையான இரண்டு நோய்கள் பாதிக்கின்றன. படர்தாமரை என்பது பூஞ்சைக் காளான்களால் தோலில் ஏற்படும் ஒருவித தொற்று நோயாகும். இது தோல், தலைமுடி மற்றும் நகங்களைப் பாதிக்கும். பெரும்பாலும் இது, மிகவும் அதிகப்படியான வெப்பம், வியர்வை மற்றும் ஈரப்பதத்தாலும், எதிர்ப்புச் சக்தி குறைவாலும் ஏற்படுகிறது. இந்நோய் உள்ளவர்களுடன் நெருக்கமாகப் பழகுவதாலும், அவர்களது சீப்பு, துண்டு, போர்வை போன்றவற்றைப் பயன்படுத்துவதாலும் பரவுகிறது. 

மருத்துவர் ஆலோசனையின்றி சுயமாக மருந்துக்கடைகளில் ஸ்டீராய்டு கலந்த மருந்து, கிரீம்களைப் பயன்படுத்துவதால் இது அதிகமாகப் பரவி, குணப்படுத்தக் கடினமான ஒரு தொற்றுநோயாக மாறியுள்ளது. சுத்தமாக இருப்பது, காற்றோட்டமான, உலர்ந்த சுத்தமான பருத்தி உடைகளை அணிவது, ஒரு நாளைக்கு இரண்டுமுறை குளிப்பது போன்றவற்றால் இந்நோயை கட்டுக்குள் கொண்டுவரலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான முறையில் மருந்துகளைப் பயன்படுத்துவதன்மூலம் இந்நோயை முழுமையாகக் குணப்படுத்தலாம்

மக்கள்

தோலில் சிவப்பான திட்டுகளும் அதிகப்படியாக தோல் உரிதலும், சிலநேரம் அரிப்பும் ஏற்படுத்தும் இது சொரியாஸிஸ் எனப்படுகிறது. இது உடலின் குறிப்பிட்ட பகுதிகளிலும் அல்லது உடல் முழுவதுமோ ஏற்படலாம். சில நேரம் நகங்கள் மற்றும் மூட்டுகள்கூட பாதிக்கப்படலாம். இந்த நோய்க்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால், மனஅழுத்தம், நோய்த் தொற்று, குடி, புகை போன்றவற்றால் இந்நோயின் தாக்கம் அதிகரிக்கும். இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். குடிப்பழக்கம், புகைபிடித்தல் போன்றவற்றை அறவே நிறுத்தினால் சொரியாஸிஸ் நோயைக் கட்டுக்குள் வைக்க முடியும்” என்றார் தனலட்சுமி.