பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க வழிமுறைகள்! #SwineInfluenza | Methods to prevent swine flu

வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (17/10/2018)

கடைசி தொடர்பு:17:15 (17/10/2018)

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க வழிமுறைகள்! #SwineInfluenza

தாமதமாக சிகிச்சையைத் தொடங்கினால், பாதிப்பு அதிகரித்து நுரையீரல் செயலிழப்பு ஏற்படும். ரத்தத்தில் ஹெச்1என்1 வைரஸ் பரவிவிடும்.

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க வழிமுறைகள்! #SwineInfluenza

ழைக்காலம் தொடங்கிவிட்டாலே டெங்கு, சிக்குன்குன்யா, பன்றிக்காய்ச்சல் என நோய்கள் வரிசைகட்டத் தொடங்கிவிடும். கடந்த ஆண்டு தமிழகத்துக்கு டெங்குக் காய்ச்சல் மிகப்பெரிய சவாலாக இருந்தது. 23,294 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர், 65 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடங்கிய உடனேயே, டெங்கு பயம் தொற்றிக்கொண்டாலும், பன்றிக்காய்ச்சல் முந்திக் கொண்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு, உயிரிழப்பு தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர், நீலகிரி, வேலூர் உட்பட பல மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பன்றிக்காய்ச்சல்

பன்றிக்காய்ச்சலை உருவாக்கும் ஹெச்1என்1 வைரஸ் முதன்முதலில் பன்றியிடம் இருந்துதான் மனிதர்களுக்குப் பரவியது. பன்றிகளைக் கையாண்ட ஊழியர்கள், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்டோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கும் பரவியது.

2009-ம் ஆண்டில்தான் இந்தியாவுக்குள் பன்றிக் காய்ச்சல் நுழைந்தது. அதன்பிறகு ஆண்டுதோறும் இந்த நோயின் பாதிப்பைக் கண்டு வருகிறோம். விலங்குகளிடமிருந்து தற்போது நோய் மனிதர்களுக்குப் பரவுவதில்லை. இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5,651 பேரை இந்தக் காய்ச்சல் பாதித்துள்ளது, 464 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

பன்றிக் காய்ச்சலில் ஏ, பி, சி என்று மூன்று நிலைகள் உள்ளன.

நிலை `ஏ' 

சளியுடன் மெல்லிய உடல் உஷ்ணம், லேசான தொண்டைவலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவைதாம் இந்த நிலையின் அறிகுறிகள். இதுபோன்று இருந்தால் அதிகம் பயப்படத் தேவையில்லை. மருத்துவரிடம் புறநோயாளிகளாகவே சிகிச்சைப் பெற்று, வீட்டில் தனியாக ஓரிடத்தில் ஓய்வில் இருக்க வேண்டும். ரத்தம், சளி மாதிரியைக் கொண்டு செய்யப்படும் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை தேவைப்படாது.

நிலை `பி'

 அதிக காய்ச்சல், கடுமையான தொண்டைவலி, சளி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் தோன்றும். இதற்கு,  `டாமிஃப்ளூ' எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கான மாத்திரையை மருத்துவர் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்ளவேண்டும். மருத்துவரிடம் புறநோயாளியாக சிகிச்சைப் பெற்று, வீட்டில் தனியாக ஓரிடத்தில் ஓய்வில் இருக்க வேண்டும். இந்த நிலைக்குப் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை தேவைப்படாது.

காய்ச்சல்

நிலை `சி'

ஏ,பி, நிலைகளில் உள்ள அறிகுறிகளோடு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மயக்கம், ரத்த அழுத்தம் குறைதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதற்கு டாமிஃப்ளூ மாத்திரையைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். பன்றிக்காய்ச்சல் பரிசோதனை செய்து நோயை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

கர்ப்பிணிகள், குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம், நாள்பட்ட நுரையீரல், இதயம், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருக்கும் என்பதால் பன்றிக் காய்ச்சல் எளிதில் தாக்கும். பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுடன் அதிகம் புழங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், உறவினர்களும் பன்றிக்காய்ச்சலுக்கான `ஹை ரிஸ்க்' பட்டியலில் உள்ளனர்.

இது தொடர்பாக பொது மருத்துவ நிபுணர் கே.அனுபமாவிடம் கேட்டோம்:

"பன்றிக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளில் ஏதாவது இரண்டு அறிகுறிகள் ஒருவரிடம் இருந்தாலே, அந்த நபரை அவதானிக்கத் தொடங்கிவிடுவோம். சில குழந்தைகளுக்குப் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல், உடலில் ஆக்சிஜன் குறைந்து கை,கால் டாக்டர் கே.அனுபமாவிரல் முனைகளில் நீலநிறம் பரவத் தொடங்கிவிடும். பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கத் தொடங்கிவிட்டால் குணப்படுத்திவிட முடியும்.

தாமதமாக சிகிச்சையைத் தொடங்கினால், அதன் பாதிப்பு அதிகரித்து நுரையீரல் செயலிழப்பு ஏற்படும். ரத்தத்தில் ஹெச்1என்1 வைரஸ் பரவிவிடும். அதன்பின்னர் நோயாளி சுயநினைவை இழந்து கோமாவுக்குச் சென்றுவிடுவார்கள். இதுபோன்ற சமயங்களில் உயிரிழப்பு நிகழும்.

பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தடுப்பூசியும், மூக்கில் மருந்தைச் செலுத்தும் `நேசல் ஸ்பிரே'வும் உள்ளன. `ஹை ரிஸ்க்' பட்டியலில் இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் இவற்றில் ஏதாவது ஒன்றைத் தடுப்பு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். இந்தத் தடுப்பு மருந்துகள் ஓராண்டுக்குப் பாதுகாப்பை அளிக்கும். 

பன்றிக்காய்ச்சலைப் பரப்பும் வைரஸின் தன்மை அவ்வப்போது மாறி வருகிறது. அதனால் இந்திய அரசு ஆண்டுதோறும் அதற்கான தடுப்பு மருந்துகளையும் அப்டேட் செய்கிறது. அப்டேட் செய்யப்பட்ட தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டால்தான் அந்தச் சமயத்தில் பரவும் வைரஸின் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியும். அதனால் ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அறிகுறிகள் தென்பட்ட உடன் மருத்துவரை அணுக வேண்டும். சுய மருத்துவத்தில் ஈடுபடக் கூடாது. நோய் அறிகுறி தென்பட்ட உடன் ஓய்வில் இருக்க வேண்டும். வெளிஇடங்களில் புழங்குவதைத் தவிர்க்க வேண்டும். 

நோய் அடுத்தவருக்குப் பரவுதைத் தவிர்க்க ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். தும்மும்போது, இருமும்போது கைக்குட்டை, டிஷ்யூ காகிதங்களைப் பயன்படுத்தலாம். போதுமான அளவு தண்ணீர், ஊட்டச்சத்து மிகுந்த உணவு போன்றவை உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும்" என்றார் அவர்.

பேஸ்மாஸ்க்

எப்படித் தடுப்பது?

பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள வைரஸ் கிருமிகள் அவர் புழங்கும் இடங்களிலும் இருக்கும். அவற்றைத் தொட்டால் அடுத்தவருக்கும் அவை பரவும். தரைப்பரப்பு, கைப்பிடிகள், மேஜைகள், நாற்காலிகள், மின்சார ஸ்விட்சுகள், தொலைபேசி, மொபைல் போன்றவற்றில் இந்த வைரஸ் பலமணி நேரம் உயிருடன் இருக்கும். இதுபோன்ற பொருள்கள் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம். 

இந்த நோய் பரவுவதைத் தடுப்பதில் கை கழுவும் பழக்கத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது. அதனால் ஒருநாளைக்கு பத்துமுறையாவது கைகளைக் கழுவவேண்டும். நோய் அறிகுறிகள் உடையவர்கள், கைகளைக் கழுவியபிறகே மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களிடமிருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளிவிட்டு விலகியிருக்க வேண்டும். சளி, காய்ச்சல் பாதித்தவர் உபயோகித்த ஆடை, கைக்குட்டை, துண்டு போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

மற்ற காய்ச்சல்களைப் போல பழியைக் கொசுக்கள் மீது போட்டுவிட்டு நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. தனி மனித சுகாதாரத்தைப் பேணுவதன்மூலம் பன்றிக்காய்ச்சலைப் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.

பன்றிக் காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள், தகவல்களுக்கு 104-ஐ தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் பகுதியில் காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் பொது சுகாதாரத் துறையின் 044 - 2435 0496, 94443 40496 இந்த எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்