மழைக்காலத்தை எதிர்கொள்ள ஏ டு இசட் டிப்ஸ்! #Vikatan360 | Most Common Monsoon Diseases, Their Treatment & Prevention

வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (18/10/2018)

கடைசி தொடர்பு:09:36 (19/10/2018)

மழைக்காலத்தை எதிர்கொள்ள ஏ டு இசட் டிப்ஸ்! #Vikatan360

மழைக்காலத்தை எதிர்கொள்ள ஏ டு இசட் டிப்ஸ்! #Vikatan360

ழைக்காலம் தொடங்கிவிட்டாலே,  சளி, காய்ச்சல் தொந்தரவுகள் தொடங்கிவிடும். 40 டிகிரி வெயில் அடித்தால் கூட அசராதவர்கள், இரண்டு துளி மழைக்குத் துவண்டுவிடுவார்கள். இந்தச் சமயங்களில் உடல் நலனைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

 மழை

உடலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர்களிடம் செல்ல வேண்டியது அவசியம் என்றாலும், மழைக்காலங்களில் உடனே மருத்துவரைப் பார்ப்பது சாத்தியப்படாது. அதுபோன்ற நேரங்களில் வீடுகளில் முன்னெச்சரிக்கையாக சில மருந்துகளை வைத்திருக்க வேண்டும். 

உடல்நலனைப் பொறுத்தவரையில் மழைக்காலத்தில் இரண்டு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உணவு மற்றும் குடிநீர். ஃபிரஷ்ஷாக தயாரிக்கப்பட்ட, சூடான உணவுகளை மட்டுமே மழைக்காலத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். உணவில் ஏதேனும் பாக்டீரியா பாதிப்பு இருந்தால் கூட, உணவில் உள்ள சூட்டின் காரணமாக அது அகன்றுவிடும். அதேபோன்று தண்ணீரையும் கொதிக்க வைத்தே குடிக்கவேண்டும்.

மழைக்காலத்தில் முதியோரைப் பாதிக்கும் நோய்கள், தடுக்கும் வழிமுறைகள் குறித்து கீழேயுள்ள வீடியோவில் விளக்குகிறார் முதியோர் நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்!

மழைக்காலங்களில் வீடுகளில் இருக்க வேண்டிய மருந்துகள் குறித்து பொதுமருத்துவ நிபுணர் பி.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்.

"காய்ச்சல், தலைவலி, உடல்வலி பிரச்னைகளுக்கு 'பாராசிட்டமால்' மாத்திரையை வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு மூன்று மாத்திரைகளுக்கு மேல் எடுக்கக்கூடாது. இரண்டு நாளுக்கு மேல் காய்ச்சல் குறையவில்லை என்றால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். அதற்கு மேல் சுயமாக மாத்திரைகளை எந்தக் காரணம் கொண்டும் சாப்பிடக் கூடாது.

ஆஸ்துமா நோயாளிகள் தங்களுக்கான மாத்திரை, மருந்துகள், இன்ஹேலர் மருந்துகள் ஆகியவற்றைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்துகள் தீரும் தறுவாயில் இருந்தால், முன்கூட்டியே வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அஜீரணக் கோளாறு அதிகமாக ஏற்படும் என்பதால், காரம், புளிப்பு இரண்டையும் குறைவாகச் சாப்பிட வேண்டும். அஜீரணத்துக்கான மருந்து, பொடிகளையும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். சிலருக்கு மழைக்காலங்களில் வயிற்றுப்போக்கு ஏற்படும். அந்தச் சமயங்களில் உடலில் நீர்ச்சத்து குறையும். எனவே, சர்க்கரை - உப்பு கரைசல் (ஓஆர்எஸ்) பாக்கெட்டுகளை வாங்கி வைக்கலாம். 

'மழைக்கால நோய்களைத் தடுக்கும் மிகச்சிறந்த மருந்து தண்ணீர்தான்' என்கிறார்கள் மருத்துவர்கள். தண்ணீரின் மகத்துவம் குறித்து அறிந்துகொள்ள கீழேயுள்ள ஆடியோவைக் கேளுங்கள்! 

சிறிய காயங்களுக்கு ஆன்டிபயாடிக் களிம்பு, ஐயோடின் களிம்புகளைப் பயன்படுத்தலாம். காலில் சுளுக்கு பிடித்து வீக்கம் ஏற்பட்டால், வலி நிவாரண களிம்பு, ஸ்பிரே ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். டி.டி. ஊசி போட்டுக் கொள்வதும் நல்லது. காயத்தினால் ஏற்படும் ரண ஜன்னியை இது தடுக்கும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை டி.டி. ஊசி போட்டால் போதுமானது" என்றார்.

மழைக்காலப் பாதுகாப்புக்கு அலோபதி மருந்துகள் மட்டுமி்லலை. நமது இயற்கை மருத்துவமான சித்த மருத்துவத்திலும் நிறைய மருந்துகள் உண்டு. 

 இது தொடர்பாக விரிவாகப் பேசுகிறார் சித்த மருத்துவர் ஆர்.சைலஜா. 

"மழை நேரங்களில் அனைத்து வீடுகளிலும் கட்டாயம் இருக்க வேண்டியது நிலவேம்பு குடிநீர் சூரணம். சளித்தொல்லை, தலைப்பாரம், உடல்வலி, காய்ச்சல் போன்ற பிரச்னைகளுக்கான அறிகுறி தோன்றிய உடனே நிலவேம்பு குடிநீரைப் பருகலாம். மூன்று நாளைக்குக் காலையில் வெறும் வயிற்றில் நிலவேம்பு குடிநீரைத் தயாரித்து அருந்தினால் அறிகுறிகள் காணாமல் போகும்.

திரிபலா சூரணம்... இது தொண்டை வலி, தொண்டை கட்டுப் பிரச்னைக்கு பயனளிக்கும். இந்தச் சூரணத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். நோய் எதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்தும் என்பதால், வாய் கொப்பளிக்கும்போது இந்தத் தண்ணீரை விழுங்கினாலும் பிரச்னை இல்லை.

மழைக்காலத்தில் பாதிக்கும் நோய்கள், அவற்றின்  அறிகுறிகள், நோய்களுக்குரிய பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுக்கும் வழிமுறைகளை அறிந்துகொள்ள கீழேயுள்ள சுவாரஸ்யமான இன்ட்ராக்டிவை க்ளிக் செய்து பாருங்கள்!  

 

ஜீரணப் பிரச்னைக்கு ஏலாதி சூரணம் பயன்படும். 1 டீஸ்பூன் ஏலாதி சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்தால், விடுதலைக் கிடைக்கும். சிறிய காயங்கள், வீக்கம் போன்றவற்றுக்கு காயத்திருமேனி தைலத்தைப் பயன்படுத்தலாம். காயங்களில் இருந்து ரத்தம் வெளியேறுவதைத் தடுத்து, புண்ணை ஆற்றுவதற்கு மத்தன் தைலமும் அருமருந்து.

மழை நேரத்தில் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு அதன் தீவிரம் அதிகரிக்கும். அதுபோன்ற நேரங்களில் 2 நொச்சி இலை, 1 வெற்றிலை, 1 கிராம்பு, 3 பல் பூண்டு, 2 மிளகு ஆகியவற்றை 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, 50 மில்லியாக குறுக்கிப் பருகலாம். குழந்தைகளுக்கு அதில் சிறிது தேன் கலந்து கொடுக்கலாம்" என்கிறார்.

மின் பாதுகாப்பு!

நமது அன்றாட வாழ்வின் முக்கியமான அங்கம். ஆனால் மழை நேரங்களில், வீட்டில் இருக்கும்போதும், சாலைகளில் பயணிக்கும்போதும், அலுவலகங்களில் பணியாற்றும்போதும் மின்சாதனப் பயன்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மழைக் காலங்களில் மின் மற்றும் மின்னணு சாதனங்களைப் பழுது நீக்குவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். எலெக்ட்ரீசியனை அழைத்தோ, மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்றோ பழுது நீக்குங்கள்.

மழைக்காலத்தில் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்தெந்த உணவுகளைச் சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும், டயட்டீஷியன் கற்பகம் வினோத் தரும் ஆலோசனைகளைக் காண கீழேயுள்ள ஸ்லைடுஷோவை க்ளிக் செய்யுங்கள்! 

 

 மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மின்சாரப் பாதுகாப்பு குறித்து எலெக்ட்ரீசியன் ஜீவன் குமார் விளக்கினார்:

* உங்கள் வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் எர்த் கம்பி பிவிசி குழாய் வழியாகப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

* வீட்டில் உள்ள மிக்ஸி, கிரைண்டர், அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை இயக்கும்போது ஈரமில்லாத ரப்பர் ஷீட்டின் மீது நின்றுகொண்டு இயக்குங்கள். ஈரமான கைகளோடு எந்த மின் சாதனங்களையும் இயக்கக் கூடாது.

* வீட்டின் உள்ளேயும் செருப்பு உபயோகிப்பது நல்லது.

* வெறும் ஒயரை நேரடியாகப் பிளக்கில் செருகக் கூடாது.

* ஈரமாக இருக்கும் மின்சாதனப் பொருள்களை ரிப்பேர் செய்ய முயற்சிக்கக்கூடாது.

* உடைந்த சுவிட்சுகள், பிளக் போன்ற எந்த மின்சாரப் பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது; அதனை உடனடியாக மாற்ற வேண்டும்.

* ஐஎஸ்ஐ முத்திரை உள்ள தரமான மின்சார உபகரணங்களையே உபயோகிக்க வேண்டும்.

* இடி, மின்னல், மழை சமயங்களில் டிவி, கம்ப்யூட்டர், செல்போன் போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாட்டைத் தவிருங்கள்.

* மழையின் காரணமாக மின்சாரம் தடைப்பட்டிருக்கும்போது, அதன் மெயின் சுவிட்சை அணைக்காமல், மின்சாரம் சார்ந்த எந்தப் பணியிலும் ஈடுபட வேண்டாம்.

மழைக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?  நோய்ப் பாதிப்புகளைத்  தடுக்கும் வழிமுறைகள் குறித்து கீழேயுள்ள வீடியோவில் விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் செல்வன்!

* இடி, மின்னல், மழை நேரங்களில் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டாம்.  அதுபோன்ற நேரங்களில் குளிப்பது, பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற செயல்களையும் செய்ய வேண்டாம்.

* மின்கம்பிக்கு கீழே நின்று செடிகள், மரங்களில் பூ, காய், பழங்களைப் பறிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.

* சாலையில் மின்கம்பி அறுந்து கிடந்தாலோ, மின்கம்பம் சாய்ந்திருந்தாலோ அதன் அருகில் செல்லக் கூடாது. உடனடியாக மின்வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

* உங்கள் பகுதி மின்சார அலுவலகம் அல்லது மின்சார அலுவலக அதிகாரிகளின் தொடர்பு எண்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

* மின்வாரிய பணியாளர்கள் இன்றி டிரான்ஸ்பார்மர்களில் தன்னிச்சையாக ஏறி ஃபியூஸ் மாற்றக் கூடாது.

* மழைபெய்யும்போது மரங்களின் அடியில் ஒதுங்கக் கூடாது. பெரிய கட்டடங்கள் போன்றவற்றில் ஒதுங்கி நிற்கலாம்.

* மின்கம்பங்கள், மின்வடம் போன்றவற்றில் ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகளைக் கட்டி வைக்கக் கூடாது. 

* மின்சாரக் கம்பிகளில் துணிகளைக் காயப்போடக் கூடாது.

* அதிக மழை பெய்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதனால் எமர்ஜென்சி லைட், மெழுகுவத்தி, தீப்பெட்டி ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருங்கள்.  

மழைக்கால நோய்களைத் தடுக்கவும், குணப்படுத்தவும் சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துகள் உண்டு. பக்க விளைவுகளற்ற, எளிதில் கிடைக்கக்கூடிய அந்த மருந்துகள் பற்றி விரிவாக அறிந்துகொள்ள கீழேயுள்ள படத்தை 'க்ளிக்' செய்யுங்கள்!

மழைக்கால நோய்கள்

 


டிரெண்டிங் @ விகடன்