உடைக்கு மட்டுமல்ல... இனி உணவுக்கும் உதவும் பருத்தி! | Cotton not only for the dress but also for the food!

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (19/10/2018)

கடைசி தொடர்பு:17:00 (19/10/2018)

உடைக்கு மட்டுமல்ல... இனி உணவுக்கும் உதவும் பருத்தி!

டை ரகங்களில் மிகவும் பிரபலமான பருத்தியை உணவுப்பொருளாகவும் மாற்றி சாதனை படைத்துள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஏ & எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கீர்த்தி ரத்தோர் எனும் பேராசிரியர் 23 ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கான ஆய்வைத் தொடங்கினார்.

பருத்தி விதை இனி உணவு

பருத்தி விதையில் 'காஸிபால்' என்ற நச்சுப்பொருள் இருக்கும். பூச்சிகளின் தாக்குதலிலிருந்து பருத்தி விதைகளைப் பாதுகாப்பது இந்த நச்சுப்பொருள்தான். இந்த நச்சுப்பொருளால் பருத்தி விதையை மனிதர்களும் விலங்குகளும் சாப்பிடக்கூடாத பட்டியலில் வைத்திருந்தனர். ஆனால், பருத்தி விதையில் அதிக அளவில் புரதம் உள்ளது. இதுதவிர, பாதாம், வால்நட் கொட்டைகளில் இருக்கும் பல ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளதாம். இத்தனை சத்துகள் நிறைந்த பருத்தி விதைகளை உணவு வகையாக மாற்ற முடியாமல் தடுத்தது அந்த நச்சுப்பொருள்தான். இந்த ஆராய்ச்சியில் பருத்தி விதைகளில் இருந்த நச்சுகளை உருவாக்கும் மரபணுவின் செயல்பாட்டைத் தடுத்து, நச்சுத்தன்மை நீக்கப்பட்ட பருத்தி விதைகளை உருவாக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இவற்றை வணிக ரீதியாக விற்பனை செய்யவும் அமெரிக்க வேளாண்துறை ஒப்புதல் அளித்துவிட்டது. அதனால் ஆடை தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட பருத்தி விதைகளை இனிமேல் உணவுக்காகவும் பயன்படுத்தலாம். அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள விவசாயிகள் இந்த விதைகளைப் பயன்படுத்தலாம். விதைகளில் உள்ள புரதத்தை மட்டும் எடுத்து, பிஸ்கெட், பால், சாக்லெட்பார்கள் போன்றவற்றையும் தயாரிக்க முடியும் என்று தம்ப்ஸ் அப் காட்டுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.