வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (19/10/2018)

கடைசி தொடர்பு:20:00 (19/10/2018)

ஆதரவற்றோருக்கு உதவும் நோய் தணிப்பு சிகிச்சைத் திட்டம்!

வாழ்க்கை இயந்திரத்தனமாய் மாறிவிட்டது. 'நம்மைப் பாதுகாக்கவே நேரம் இல்லை, இதில் வாழ்க்கையின் கடைசித் தருவாயில் இருக்கும் உறவுகளை எங்கே பாதுகாப்பது?' என்று சொல்பவர்கள்தான் அதிகம் உள்ளனர்.  இப்படிப்பட்ட சூழலில் நம் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ  ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால், அவர்களை கவனிப்பது சிரமம்தான். இதைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டதுதான், 'தேசிய நோய் தணிப்பு சிகிச்சைத் திட்டம்'. ஆங்கிலத்தில்  'Palliative care' என அழைக்கப்படுகிறது. இத்திட்டம், தற்போது திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. 

சிகிச்சை பெறும் நோயாளி

மருத்துவர் ரவீந்திரபாபுஇதுகுறித்து இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்  டாக்டர் ரவீந்திரபாபு நம்மிடம் விரிவாகப் பேசினார். ``தேசிய நோய் தணிப்பு சிகிச்சை திட்டத்தின்மூலம், 'இனி சிகிச்சை அளிக்க முடியாது' என்று நோயின் கடைசித் தருவாயில் இருக்கும் நோயாளிகளுக்கு உடல் சார்ந்த, உளவியல் சார்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. மரணம் குறித்த அவர்களது பயத்தைக் களைவதே எங்கள் நோக்கம். இதன்மூலம், அவர்களைக்  குணப்படுத்த இயலாது எனினும் வாழ்க்கையின் கடைசித்  தருணத்திலும் அவர்கள் நம்பிக்கையோடு வாழ எங்களால் முடிந்த சிறு சேவைதான் இது. குறிப்பாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், நுரையீரல்,  கல்லீரல், குடல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நடக்க இயலாதவர்கள், இதய நோயால் பாதித்தவர்கள், மனநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில், அவர்களுக்குப்  புதிதாக மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை. அவர்களது வலியைப் போக்க 'மார்பின்' போன்ற வலி நிவாரணி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும்  செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இந்த நாள்களில் நோயாளிகள் பலர் இங்கு வந்து சிகிச்சைபெற்றுச் செல்கின்றனர்" என்றார்.  டாக்டர் ஸ்டான்லி

இதன் அடுத்த கட்ட முயற்சியாக, 'வீடுகளுக்கே நேரில் சென்று நோயாளிகளைக்  கவனித்துக்கொள்வது' என்ற திட்டம் பற்றி திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மைக்கேல் நம்மிடம்  பேசினார். ``தற்போது இந்தத் திட்டம், கேரளா முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. முதல் கட்டமாக இந்தத் திட்டத்தை தமிழகத்தில் திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர், திருப்பூர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளோம். அதைத்  தொடர்ந்து, மற்ற மாவட்டங்களிலும் தொடங்க இருக்கிறோம். இங்கு பணியாற்றும் மருத்துவர்களுக்கு எர்ணாகுளம் மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

திருவாரூர் மருத்துவக் கல்லூரியில்  சிகிச்சை பெறவந்த புற்றுநோய் பாதித்த நோயாளி ஒருவர், 'நான் இந்த நோயில் இருந்து இனி  மீளமுடியாது; வாழ்வதே வீண் என்று நினைத்திருந்தேன். அப்போதுதான் இந்த சிகிச்சை பற்றி அறிந்து இங்கு வந்தேன். இவர்கள் மட்டும் எனக்குத் தக்க  சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். இவர்கள் அளித்த அன்பும், அக்கறையும் என்னை வாழவைத்துள்ளது' என்றார் நெகிழ்ச்சியுடன். இப்படிப்பட்ட வாய்ப்புகள் இருப்பதை அறிந்து, நாமும் மற்றவர்களுக்காக உதவி செய்யலாமே!.