உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிள் பேரணி - சென்னை வந்தடைந்தது! | national cycle rally for food security came up to chennai

வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (20/10/2018)

கடைசி தொடர்பு:10:21 (20/10/2018)

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிள் பேரணி - சென்னை வந்தடைந்தது!

ணவு பாதுகாப்பை வலியுறுத்தி, தேசிய அளவிலான தொடர் சைக்கிள் விழிப்பு உணர்வு பேரணி இன்று மாலை சென்னை வந்தடைந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றார்கள். மகாத்மா காந்தியின், 150-வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில், இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

உணவு பாதுகாப்பை வலியுறுத்தி பேரணி

இந்தப் பேரணி, இந்தியாவில் பல்வேறு கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களையும் கடந்து, நாடகங்கள் மூலம் பிரசாரம் செய்தபடி சென்னைக்கு வந்தடைந்தது. உணவில் குறைந்த உப்பு, குறைந்த சர்க்கரை மற்றும் குறைந்த கொழுப்பு சேர்ப்பதன் அவசியம் பற்றியும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர். மேலும், மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் பரிசோதனைக் கூடங்கள் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடு முழுவதும் நடந்த இப்பேரணி, உலக உணவு தினமான கடந்த 16-ம் தேதி, ஆறு வழித்தடங்களில் தொடங்கப்பட்டது. அந்த ஆறு குழுக்களும், தினமும் சராசரியாக, 60 முதல் 70 கி.மீ., வரை, நான்கு மாதங்கள் பயணம் செய்து, அடுத்தாண்டு, ஜனவரி 27-ம் தேதி, புதுடில்லியை அடைய திட்டமிட்டுள்ளன. 

ஆறு வழித்தடங்களில் இரண்டு, தமிழகம் வழியாக புதுடில்லியை சென்றடைகிறது. ஏற்கெனவே, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 16-ம் தேதி தொடங்கிய பேரணி தமிழ்நாட்டில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் தக்கலை, திருநெல்வேலி, கோவில்பட்டி, சிவகாசி, மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி  மாவட்டங்கள் வழியாக பெங்களூரை நவம்பர் 10-ம் தேதி அன்று சென்றடைகிறது. 

பேரணியில் பங்கேற்றவர்களுக்கு வரவேற்பு

அதேபோல, புதுச்சேரியில் 16-ம் தேதி தொடங்கிய பேரணி மாமல்லபுரம், சென்னை, திருவள்ளூர், திருத்தணி வழியாக திருப்பதியை இம்மாதம் 25-ம் தேதி அன்று சென்றடையும். அதன் ஒரு பகுதியாக, இன்று (19-ம் தேதி) மாலை காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து தொடங்கிய மிதிவண்டி பேரணி கிண்டி, காந்தி மண்டபத்தை வந்தடைந்தது. இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மிதிவண்டியாளர்களை வரவேற்றார். நாளை (20-ம் தேதி) ஸ்டெல்லா மாரிஸ் மகளிர் கல்லூரியிலும் 21-ம் தேதி அன்று பெசன்ட் நகரிலும் பேரணிக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.