வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (20/10/2018)

கடைசி தொடர்பு:17:19 (20/10/2018)

ஆசியாவின் முதல் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சையில் பிரசவித்த பெண்... பின்னணி என்ன?

யாருக்கெல்லாம் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம்... யாரெல்லாம் தானம் தரலாம்?

ஆசியாவின் முதல் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சையில் பிரசவித்த பெண்... பின்னணி என்ன?

தாயின் கருவறையில் மகள் பிறக்கலாம். தாயும் மகளும் ஒரே கருவறையில் பிறக்க முடியுமா..? முடியும் என்கிறது அறிவியல்... அதுவும் இந்த அதிசய முறையில் ஒரு பிரசவம் இந்தியாவில் முதன்முறையாக நிகழ்ந்திருக்கிறது. இதுவரை இதயம் பழுதடைந்தவர்களை, சிறுநீரகம் பழுதடைந்தவர்களை, நுரையீரல் பழுதடைந்தவர்களை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்து வாழ வைத்திருக்கிறது மருத்துவத் துறை. ஆனால், கர்ப்பப்பை இல்லாதவர்களுக்கும், பழுதடைந்தவர்களுக்கும் தீர்வு காணப்படவில்லை. இப்போது அதற்கும் தீர்வு கண்டு சாதித்துக் காட்டியிருக்கிறது புனேவைச் சேர்ந்த `கேலக்ஸி கேர் ஹாஸ்பிடல்ஸ்' மருத்துவக் குழு.

கர்பப்பை மாற்று அறுவை சிகிச்சை

சென்ற வருடம் கர்ப்பப்பை மாற்று சிகிச்சை செய்து கொண்ட மீனாட்சி வாலன்ட் என்பவருக்கு இம்மாதம் 18-ம் தேதி பிறந்த பெண் குழந்தைதான் கர்ப்பப்பை மாற்று சிகிச்சைக்குப் பிறகு, ஆசியாவில் பிறந்த முதல் குழந்தை என்ற சிறப்பு. இது இந்திய மகப்பேறு மருத்துவத்தின் கொண்டாடப்பட வேண்டிய அதிமுக்கிய நிகழ்வு என்பதில் சந்தேகமே இல்லை.

இந்தியாவில் இதுதான் முதல் குழந்தை என்றபோதும், உலகில் இதுபோல் பிறக்கும் 12-வது குழந்தை இது என்பதால் இதன் வரலாறு,  சாத்தியக்கூறுகள், சாதக பாதகங்கள் அனைத்தையும் சற்றுத் தெரிந்து கொள்வோம்.

தோல் மற்றும் கண்தானத்தில் தொடங்கிய உறுப்பு மாற்றுச் சிகிச்சை, பிறகு சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜை, குடல், இதயம், நுரையீரல் என மனிதனின் வாழ்நாள்களை நீடிக்கச் செய்திருக்கிறது. ஆனால் இவற்றைப் போல, கர்ப்பப்பை மாற்று சிகிச்சை என்பது ஓர் உயிரை நீட்டிக்க வைக்கும் சிகிச்சையல்ல. 

ஆரம்ப காலத்தில் (1930), பல்வேறு நாடுகளில், பல்வேறு மருத்துவர்கள் இந்தக் கர்ப்பப்பை மாற்று சிகிச்சையை முயன்று, அதில் ஏற்பட்ட `ஆர்கன் ரிஜெக்க்ஷன்' (organ rejection) என்ற உறுப்பு ஒவ்வாமையைத் தோற்கடிக்க முயன்று கொண்டிருந்தபோது, 1978-ம் ஆண்டு உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபியான லூயி ப்ரௌன் பிறந்தார்.

கர்ப்பப்பை

அதற்குப் பிறகு, உலகெங்கும் IVF, ICSI போன்ற செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சைகள் பெருமளவு பிரபலமடைய, இந்தக் கர்ப்பப்பை மாற்று சிகிச்சை சற்று தேங்கிப்போனது. ஆயினும், சில நாடுகளில் வாடகைத் தாய் முறை (Surrogacy) மறுக்கப்படுவதாலும், பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாத பெண்களுக்கு இதன் தேவை அதிகமாக இருந்ததாலும், தொடர்ந்து மகப்பேறின்மை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்கள். அதன் விளைவாக, உலகின் முதல் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை 2002-ம் ஆண்டு சவுதி அரேபியாவிலும், 2011-ம் ஆண்டு துருக்கியிலும் நடந்தேறியது. அப்போதும் அவர்களால் உறுப்பு ஒவ்வாமையை வெல்ல முடியாமல் இருந்தது.

ஆனால், ஸ்வீடன் மருத்துவர்கள் இந்தக் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை முறையில் சில மாறுதல்களைச் செய்து, அதில் வெற்றியும் கண்டனர். ஆம், 2014-ம் ஆண்டு ஸ்வீடனில் பிறந்த வின்சென்ட் என்ற ஆண்குழந்தைதான், உலகிலேயே இந்த முறையில் பிறந்த முதல் குழந்தையாகும்.

வின்சென்டுக்குப் பிறகு, இதுவரை 9 குழந்தைகள் ஸ்வீடனிலும், 2 குழந்தைகள் அமெரிக்காவிலும், கடந்த 18-ம் தேதி ஒரு குழந்தை இந்தியாவிலும் பிறந்திருக்கின்றன.

இந்நிலையில் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை என்ற இந்த முறை சாத்தியம் தானா, இதன் அறிவியல் என்ன, இது ஏற்புடையதுதானா என்பது போன்ற ஆச்சர்யங்களும் கேள்விகளும், டெஸ்ட் ட்யூப் பேபிக்குப் பிறகு எழுந்த கேள்விகளைப் போன்றே மீண்டும் எழுந்திருக்கின்றன.

கர்ப்பப்பை

பொதுவாகப் பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாத பெண்களுக்கும், (MRKH Syndrome) நோய் அல்லது அறுவை சிகிச்சையின் காரணமாகச் சிதிலமடைந்த (Ashermann's Syndrome) கர்ப்பப்பை கொண்ட பெண்களுக்கும், புற்றுநோய் அல்லது கட்டியின் காரணமாகக் கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்களுக்கும் மட்டுமே இது தேவைப்படுகிறது.

உலகளவில், கர்ப்பப்பை இல்லாத, அல்லது முற்றிலும் செயல்படாத பெண்களின் (Uterine Factor Infertility) எண்ணிக்கை 3-5% என்பதால், இப்பெண்களுக்கு மட்டுமே கர்ப்பப்பை தானம் பரிந்துரைக்கப்படுகிறது. அதிலும் வாடகைத் தாய் மறுக்கப்பட்ட நாடுகளில்தான், இதன் பரிந்துரை அதிகமாகத் தேவைப்படுகிறது என்றாலும் இதில் சில வரைமுறைகளும் நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன.

60 வயதுக்குக் கீழுள்ள, ஏற்கெனவே கருத்தரித்து குழந்தை பெற்ற பெண்களின் கர்ப்பப்பை மட்டுமே இதில் தானமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பெரும்பாலும் மற்ற எந்தவோர் உறுப்பு தானத்தைப் போலவே, நோயாளியின் தாய் அல்லது சகோதரியின் கர்ப்பப்பையைப் பெண்ணின் உடல் ஏற்றுக் கொள்வதில் ஒவ்வாமை தொல்லை குறைவு என்பதால் நோயாளியின் தாயார்தான் இதுவரை தானம் தந்துள்ளனர். தாயும், மகளும் ஒரே கருவறையில் பிறக்க முடியும் என்பதைக் காட்டிய அழகிய நிகழ்வாக, இம்முறையில் குழந்தையைப் பெற்றுக்கொண்ட மீனாட்சிக்குக்கூட அவரது தாயாரின் கர்ப்பப்பைதான் தானமாகப் பெறப்பட்டுள்ளது.

மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உறுப்பு ஒவ்வாமை ஏற்படாமல் இருக்க `இம்யூனோ சப்ரஸென்ட்ஸ்' (immunosuppressants) எனப்படும் நோய் எதிர்ப்பைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வதும் இவர்களுக்குக் கட்டாயமாகிறது. மேலும், செயற்கை முறையில் மட்டுமே இந்தப் பெண்கள் கருத்தரிக்க இயலும் என்பதும், இரண்டு பிரசவங்களுக்குப் பிறகு கர்ப்பப்பை நீக்கம் மேற்கொள்ளப்படும் என்பதும் இப்போதிருக்கும் நடைமுறைகள் ஆகும்.

கர்ப்பப்பை

இந்த முறையில் இந்தியாவில் குழந்தை பெற்றுக்கொண்ட, மீனாட்சி வாலண்ட்க்குச் சிகிச்சையளித்த டாக்டர் சைலேஷ் புன்டம்பேக்கர், இந்தச் சிகிச்சையைப் பற்றிப் பேசும்போது கூறியவை இவை.

``இதுவரை இந்தியாவில் மீனாட்சி மற்றும் சிவம்மா ஆகிய இரு பெண்களுக்கு மட்டுமே கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐந்து முறை ஏற்பட்ட அடுத்தடுத்த குழந்தை இறப்பின் காரணமாக, முற்றிலும் சிதிலமடைந்த மீனாட்சியின் கர்ப்பப்பையை அகற்றியபின், மே மாதம் 2017 ம் ஆண்டு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனது தாயின் கர்ப்பப்பையை தானமாகப் பெற்றுக்கொண்ட இந்தப்பெண், நீண்ட நேர (ஏறத்தாழ 12 மணிநேரம்) அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் 9 மாதங்களுக்கும் மேல் குழந்தைப் பேறுக்காக தயாராக வேண்டியிருந்தது. நோயெதிர்ப்பைக் குறைக்கும் மருந்துகள், மீனாட்சிக்குப் பரிந்துரைக்கப்பட்டுப் பிறகு டெஸ்ட் ட்யூப் குழந்தை முறையில் செயற்கையாகக் கருத்தரிக்க வைக்கப்பட்டார்.

கர்ப்ப காலத்தின் போதும், இதே மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருந்ததால், அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, 32 வாரங்கள் ஆன நிலையில் 18-ம் தேதி சிசேரியன் மூலமாகப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இப்போது முயற்சிகள் வெற்றியடைந்து விட்டன. தாயும், சேயும் நலம்."

ஏற்கெனவே கூறியபடி, கர்ப்பப்பை தானம் என்ற இந்த அறுவை சிகிச்சை முறை, உயிர் காக்கும் அறுவை சிகிச்சை அல்ல என்பதாலும், உலகளவில் இந்த முறை இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது என்பதாலும், இதற்கு ஆகும் செலவும் மிகவும் அதிகம் என்பதாலும் இந்த முறையில் சிக்கல்களும் அதிகமாகவே உள்ளன. என்றாலும் `UFI' எனப்படும் கர்ப்பப்பை காரணத்தால் குழந்தையின்மையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்பது உண்மையே.

மேலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், கூடிய விரைவில் குறைந்த செலவில் ஒரு எளிய முறை நமக்குக் கிடைத்துவிடும் என்றே நம்பலாம்.


டிரெண்டிங் @ விகடன்