`தமிழகத்தில் மட்டும்தான் இலவசமாக இன்சுலின் வழங்கப்படுகிறது!’ - அரசு மருத்துவர் தகவல் | TN government provides Insulin bottle worth Rs.600 for free sugar patients, says Doctor

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (22/10/2018)

கடைசி தொடர்பு:21:00 (22/10/2018)

`தமிழகத்தில் மட்டும்தான் இலவசமாக இன்சுலின் வழங்கப்படுகிறது!’ - அரசு மருத்துவர் தகவல்

`தமிழகத்தில் மட்டும்தான் இலவசமாக இன்சுலின் வழங்கப்படுகிறது!’ - அரசு மருத்துவர் தகவல்

`உலகிலேயே இந்தியாவில்தான் 6.9 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று சர்க்கரைநோய் உயர்நிலைத்துறையின் இயக்குநரும், பேராசிரியருமான ப.தர்மராஜன் கூறியுள்ளார். 

இன்சுலின் இலவசம் குறித்து பேசும் மருத்துவர்

இன்று, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சர்க்கரைநோய் உயர்நிலைத்துறை சார்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். சர்க்கரைநோய் துறை இயக்குநரும், பேராசிரியருமான ப.தர்மராஜன் பங்கேற்றுப் பேசினார்.

``நம்முடைய உடலில் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் அளவு குறைந்தாலோ அல்லது இன்சுலின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்பட்டாலோ ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையையே சர்க்கரைநோய் என்போம். இந்த நோயால் உலகளவில் 10 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் சீனாவிலும்தான் அதிகமான சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில் மட்டும் 6.9 கோடி பேரும், தமிழ்நாட்டில் 10 சதவிகிதம் பேரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே சர்க்கரை நோய்க்காகத் தொடங்கப்பட்ட சர்க்கரை நோய்த்துறை, சென்னை அரசு பொது மருத்துவமனையில்தான் தொடங்கப்பட்டுள்ளது. இங்கே நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 800 வெளிநோயாளிகளும், 20 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் படுக்கைகள் உட்பட 30 படுக்கை வசதிகளில் உள்நோயாளிகளும் சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கண்டறிவதற்கான பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. நீர்ப் பரிசோதனை, ஈ.சி.ஜி, சிறுநீரகப் பரிசோதனை, கால் நரம்பு மற்றும் ரத்த ஓட்டப்பாதிப்புகளைக் கண்டறியும் `பயோதீசியோமீட்டர்' (Biothesiometer) மற்றும் `டாப்ளர்' (Doppler) கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, சர்க்கரை நோயின் தீவிரம், பின்விளைவுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, பின்னர் உரிய சிகிச்சை அளிக்கிறோம்.  

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான விலை உயர்ந்த மாத்திரைகள், மருந்துகளை இலவசமாக வழங்குகிறோம். மேலும், டைப்-1 சர்க்கரைநோய் கொண்ட இளம் வயது நோயாளிகள், அவர்களது வீட்டிலேயே இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வசதியாக, முழு இன்சுலின் பாட்டிலை இலவசமாக வழங்குகிறோம். இதன் மதிப்பு 150 முதல் 600 ரூபாய் ஆகும். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இப்படி இலவசமாக வழங்கப்படுகிறது. இளம் வயது சர்க்கரை நோயாளிகளில் சுமார் 50 பேர் 25 வருடங்களாக இங்கு சிகிச்சைபெற்று நலமுடன் உள்ளனர்” என்கிறார் ப.தர்மராஜன்.