வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (23/10/2018)

கடைசி தொடர்பு:17:50 (23/10/2018)

`காய்ச்சல் வராமலும் டெங்கு தாக்கலாம்!’ - எச்சரிக்கும் டெல்லி எய்ம்ஸ்

காய்ச்சலே வராமல் டெங்கு காய்ச்சல் பாதிக்க வாய்ப்புள்ளது என்று அதிர வைத்துள்ளனர் டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்.

டெங்கு காய்ச்சல்

எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலிய உதவியாளராகப் பணியாற்றிய 50 வயது நபர் ஒருவர், `எப்போதும் அதிக சோர்வாக இருக்கிறது' என்று மருத்துவர்களின் ஆலோசனையை நாடியுள்ளார். ரத்தத்தைப் பரிசோதித்தனர் மருத்துவர்கள். பரிசோதனை முடிவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அமிலத்தன்மையும் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. மேலும், அந்த நபரின் ரத்த சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் குறைவாக இருந்துள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்கு பரிந்துரைத்தனர் மருத்துவர்கள். பரிசோதனை முடிவில் டெங்கு காய்ச்சல் பாதித்திருப்பது கண்டறியப்பட்டது. 

அறிகுறிகளே இல்லாமல் டெங்கு பாதித்துள்ளதால் குழப்பமடைந்த மருத்துவர்கள் மீண்டும் வேறுவகையான டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர். அப்போதும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நோயாளி குறித்த விவரம் அடங்கிய ஆராய்ச்சிக் கட்டுரையை எய்ம்ஸ் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். 

 `வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச்சக்தியைக் குறைக்கும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சலே ஏற்படாமல் டெங்கு பாதிக்க வாய்ப்புள்ளது. அதுபோன்றவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். ஆனால் காய்ச்சல் இருக்காது. அதனால் ரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மருத்துவர்கள் தாமதிக்காமல் டெங்கு பரிசோதனைக்குப் பரிந்துரைக்க வேண்டும்'' என்று ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.