வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (24/10/2018)

கடைசி தொடர்பு:15:00 (24/10/2018)

பன்றிக் காய்ச்சல், டெங்கு, மலேரியா வரிசையில் ஜிகா வைரஸ் காய்ச்சல்- அலர்ட்!

ஜிகா வைரஸ் பாதிப்புக்கு நேரடி சிகிச்சைகளோ, மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கிடையாது. நோயின் அறிகுறிகளுக்கான சிகிச்சை மட்டுமே உள்ளது. அறிகுறிகளுக்கேற்ப இப்போது புழக்கத்தில் உள்ள மருந்துகளைக் கொண்டே சிகிச்சை அளிக்கின்றனர்.

பன்றிக் காய்ச்சல், டெங்கு, மலேரியா வரிசையில் ஜிகா வைரஸ் காய்ச்சல்- அலர்ட்!

ன்றிக் காய்ச்சல், டெங்கு, மலேரியா என்று ஏற்கெனவே தமிழகம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு இப்போது மிரட்ட வந்துள்ளது ஜிகா வைரஸ். தமிழகத்தில் இதுவரை பாதிப்புகள் எதுவும் அறியப்படாவிட்டாலும், ராஜஸ்தான் மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 23 பேர் கர்ப்பிணிகள். அம்மாநிலத்தில் சாஸ்திரி நகர் என்ற பகுதியில் மாதிரிகளுக்காகச் சேகரிக்கப்பட்ட கொசுக்களில் ஜிகா வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

ஜிகா வைரஸ்

டெங்கு நோயைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்கள்தாம் ஜிகா வைரஸையும் பரப்புகின்றன. இந்த வைரஸ் முதன்முதலில் 1947- ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் உள்ள குரங்கிடம் கண்டறியப்பட்டது. அதனால் அந்த வைரஸுக்கும் ஜிகா என்று பெயரிடப்பட்டது. டெங்கு, சிக்குன்குன்யா, மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும் ஏடிஸ் வகை கொசுக்களால்தாம் இந்த வைரஸும் பரவுகிறது. 1952-ம் ஆண்டில் உகாண்டாவிலும், தான்சானியா நாட்டிலும் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது முதலில் கண்டறியப்பட்டது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா என உலகின் 86 நாடுகளை இந்த வைரஸ் பாதித்துள்ளது. 2007-ம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள யாப் தீவிலும், 2013-ம் ஆண்டு தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பிரெஞ்சு பொலினீசியா நாட்டிலும், 2015-ம் ஆண்டு பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளிலும் ஜிகா வைரஸ் `அவுட் பிரேக்' ஏற்பட்டது.

இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒருவருக்கு ஜிகா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதே ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் நேத்ரபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரை இந்த வைரஸ் பாதித்தது. நோயை உறுதி செய்வதற்கு இளைஞரின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி மணிப்பாலில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனையில், `ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை' என்று முடிவு வந்தது. மீண்டும் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. வைரஸ் பாதித்த நபருக்கு அம்மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் உறவினர்கள் 4 பேரின் ரத்தம், சிறுநீர் மாதிரிகளும் பரிசோனை செய்யப்பட்டது. ஆனால், வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சிகிச்சை பெற்ற இளைஞர் உடல்நலம் தேறி வீடு திரும்பினார்.

ஜிகாவை அறிவது எப்படி?

டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலைப் போன்று உயிரிழப்புகளை அதிகம் ஏற்படுத்தாது இந்த வைரஸ் பாதிப்பு. ஆனால், பல்வேறு குறைபாடுகள் ஏற்படும். காய்ச்சல், தோலில் அரிப்பு, கண்நோய், எலும்பு மூட்டுகளில் வலி, உடல்சோர்வு போன்ற சாதாரண அறிகுறிகளே தோன்றும். ஜிகா வைரஸைச் சுமந்து வரும் ஏடிஸ் கொசுக்கள் கடித்த 2 முதல் 7 நாள்களில் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். ஆனால்,  நான்கில் ஒருவருக்குதான் பாதிப்பு ஏற்படும். நோயைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் காலை, பிற்பகல் வேளைகளில்தாம் கடிக்கும். 

ஜிகா வைரஸ் சாதாரண நபர்களைக் காட்டிலும் கர்ப்பிணிகளுக்கே அதிக ஆபத்தை ஏற்படுத்தும். ஒரு பெண் கர்ப்பம் தரித்த முதல் 3 மாதங்களில் அவருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் பிறக்கும் குழந்தையை மரபணு, நரம்பியல் நோய்கள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக, மூளை வளர்ச்சி பாதிக்கப்படவோ, மூளையில் திசுக்கள் போதிய அளவில் உருவாகாமல் சிறிய தலையுடைய குழந்தைகள் பிறக்கவோ வாய்ப்புண்டு. கருவில் குழந்தை இறத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறந்து பிறத்தல் போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. வைரஸ் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்குப் பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, வலிப்பு நோய் போன்ற குறைபாடுகளும் ஏற்படலாம். ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்குப் பிறக்கும் 5 முதல் 15 சதவிகித குழந்தைகளுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பெரியவர்களுக்கும் நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்.

காய்ச்சல்

 மருந்து இல்லை!

 ஜிகா வைரஸ் பாதிப்புக்கு நேரடி சிகிச்சைகளோ, மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கிடையாது. நோயின் அறிகுறிகளுக்கான சிகிச்சை மட்டுமே உள்ளது. அறிகுறிகளுக்கேற்ப இப்போது புழக்கத்தில் உள்ள மருந்துகளைக் கொண்டே சிகிச்சை அளிக்கின்றனர். அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும். நோய் பாதித்தவர்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும். தண்ணீர், கஞ்சி, ஜூஸ் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள பானங்களைப் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வடமாநிலத்தில் பரவி வரும் ஜிகா வைரஸ் தமிழகத்தையும் பாதிக்குமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் க.குழந்தைசாமியிடம் பேசினோம்.

``ஜிகா வைரஸ் பாதிப்புக்கு மட்டுமன்றி, டெங்கு, சிக்குன்குன்யா பாதிப்புகளுக்கும் காரணமான ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறோம். தமிழகம் முழுவதும் 770 குழுக்கள் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் 15 குழுக்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தினமும் காலை 7 மணி முதல் அலுவலக நேரம் தொடங்கும் வரை கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான நிலையங்கள், துறைமுகங்கள், மருத்துவமனைகளிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

ஜிகா வைரஸ் பாதிப்பு கர்ப்பணிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளோம். அரசின் சார்பில் நடத்தப்படும் பிறந்த குழந்தைகளுக்கான பரிசோதனைத் திட்டத்தின் மூலமும் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்காணிக்கிறோம். ஆனால் இதுவரை சிறிய தலையுடைய குழந்தைகள் பிறந்ததாக அறிக்கை எதுவும் வரவில்லை.

ஜிகா வைரஸ்

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுவோருக்கு டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, டைபாய்டு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைகளையும் மேற்கொள்கிறோம். இந்தப் பாதிப்புகள் அனைத்தும் இல்லை என்றால் மட்டுமே ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று அறிவதற்காக ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை மணிப்பால் அல்லது புனேவிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்புவோம். அதுபோன்று இதுவரை ஜிகா வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனைக்கு எந்த மாதிரிகளும் அனுப்பப்படவில்லை. அதன்மூலம் தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகிறது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான சிகிச்சைக்குத் தேவையான அனைத்தும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம்தான் ஏடிஸ் கொசுக்கள் பரவாமல் தடுக்க முடியும். அதற்கு பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்" என்றார் அவர்.

தடுக்கும் முறைகள்

* வீடுகள், அதைச் சுற்றியுள்ள பகுதிகள், அலுவலகங்களில் தண்ணீர் தேங்க விடக்கூடாது.

* வீட்டுச் சுற்றுப்புறத்தில் உடைந்த குடங்கள், வாளிகள், தேங்காய் மட்டை போன்ற பொருள்களைச் சேமித்து வைக்கக் கூடாது.

* கொசுக்கள் முட்டையிட்டுள்ள தண்ணீரை எந்தக் காரணம் கொண்டும் உபயோகிக்கக் கூடாது.

* கொதித்து ஆற வைத்த நீரை மட்டுமே பருகவேண்டும்.

* காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

* சுய மருத்துவம் செய்வதோ, மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதோ கூடாது.

* குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.