வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (24/10/2018)

கடைசி தொடர்பு:14:03 (24/10/2018)

நாற்காலியில் உட்கார்ந்துகொண்டே கலோரியை எப்படிக் குறைக்கலாம்? - ஆய்வு தந்த டிப்ஸ்

ண்டியலும் வயிறும் ஒன்றுதான். இரண்டிலும் சேமித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால், இரண்டுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. உண்டியலில் காசு சேர்ப்பது கடினம். சேர்த்த காசை செலவழிப்பது மிக மிக எளிது. வளைத்துக்கட்டி சாப்பிட்டு, வயிற்றில் கொழுப்பைச் சேர்ப்பது எளிது. சேர்ந்த கொழுப்பை அல்லது கலோரிகளைச் செலவழிப்பது மிக மிகக் கடினம். அதுவும் கண்ணாடிச் சட்டம் போட்ட கணினிகள் நிறைந்த அலுவலகத்தில், அசையாமல் வேலை பார்ப்பவர்கள், உடலில் சேர்ந்த கலோரிகளைக் கரைக்க படும் பாடு, சொல்லி மாளாது. 

அலுவலக நாற்காலி

நமக்கெல்லாம் ஒரு நற்செய்தி!

அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், அலுவலக சுழல்நாற்காலியில் உட்கார்ந்துகொண்டே கலோரிகளைக் கரைத்துவிட முடியும் என்று கண்டறிந்துள்ளனர். சுழல்நாற்காலியில் 'தேமே' என்று உட்கார்ந்திருக்காமல், அவ்வப்போது கால் விரல்களை அசைப்பது, கால்களால் தாளம்போடுவது, இடையிடையே எழுந்து நிற்பது, தூரத்து இருக்கையில் இருக்கும் நண்பர்களிடம் நடந்துசென்று ஒரு சிறிய உரையாடல் நடத்திவிட்டுவருவது என அலுவலக நாற்காலியைச் சுற்றி துருதுருவென்று இயங்கினால், ஒரு நாளைக்கு 300 கலோரிகளைக் குறைத்துவிட முடியும் என்கிறது ஆய்வு. நாற்காலியுடன் நகர்ந்துகொண்டே நடனம் ஆடினால், இன்னும் அதிக கலோரிகளைக் குறைக்க முடியுமாம்.

உடலின் அசைவுக்குத் தேவை ஆற்றல். அதனால், நாம் அசையும்போது உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்ற எளிய டெக்னிக்தான் இது.

 'அலுவலகத்தில், எல்லார் முன்னிலையிலும் இப்படியெல்லாம் செயல்பட முடியுமா' என்று நினைப்பவர்களுக்கும் இருக்கிறது இன்னொரு வழி. வேலைபார்க்கும் 8 மணி நேரமும் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்காமல், அவ்வப்போது எழுந்து நின்றால், கலோரிகள் கரையும். மதிய உணவை நின்றுகொண்டே சாப்பிடுவது, செல்போனில் பேசும்போது எழுந்து நின்று பேசுவது என ஒரு நாளைக்கு 1 மணி நேரம் நின்றால், மனத்துக்குப் புத்துணர்வு ஏற்படுவதுடன், 50 கலோரிகள் வரை குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.