வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (24/10/2018)

கடைசி தொடர்பு:20:25 (24/10/2018)

மதுரையைக் கலங்கடிக்கும் வைரஸ் காய்ச்சல், விழிபிதுங்கும் மாவட்ட நிர்வாகம்!

பன்றிக் காய்ச்சல் இந்த ஆண்டு அதிகமாகியுள்ளது. குழந்தைகள், முதியவர்கள், சர்க்கரைப் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் நோயாளிகள் எளிதில் பன்றிக் காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

மதுரையைக் கலங்கடிக்கும் வைரஸ் காய்ச்சல், விழிபிதுங்கும் மாவட்ட நிர்வாகம்!

``மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அசுத்தமான நிலை காணப்படுவதால், பொதுமக்களுக்கு விரைவாக வைரஸ் தொற்றுகள் ஏற்படுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில், சுகாதாரப் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல்களைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

எச் 1 என் 1 (H1N1) இன்ஃப்ளுயன்சா வைரஸ் தொற்று காரணமாக வரக்கூடியது பன்றிக்காய்ச்சல். காற்று, சளி உள்ளிட்டவற்றால் எளிதில் பரவக்கூடியது. பன்றிக் காய்ச்சல் கடந்த ஆண்டு தமிழகத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சலால் தமிழகத்துக்குப் பெரும் அளவு பாதிப்புகள் இருந்தது. கடந்த ஆண்டு மதுரையில், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து டெங்கு கணிசமாகக் குறைந்தது.

இந்த ஆண்டு மதுரையில், டெங்கு காய்ச்சல் அளவுக்குப் பன்றிக் காய்ச்சலும் அதிக அளவில் பரவி வருகிறது. கடந்த வாரம் பன்றிக் காய்ச்சல் பாதிப்பினால், இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில், பன்றிக்காய்ச்சலுக்கு 7 நபர்களும், டெங்கு காய்ச்சலுக்கு 7 நபர்களும், வைரஸ் காய்ச்சலுக்கு 92 நபர்களும் சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தகவல் அளித்துள்ளார். மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைகளிலும் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையின், பல்வேறு இடங்கள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால், ஆண்டு தோறும் காலநிலை மாற்றத்தின்போது மதுரை மாவட்டம் அதிக அளவு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. எனவே, மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், குடிநீர்த்  தொட்டிகளில் கொசுக்களைத் தேடுவதை மட்டும் முழு நேரப் பணியாகக் கொள்ளாமல், அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கும் பொது இடங்களையும் சுத்தம் செய்யவேண்டும்.

கொசுக்களை உற்பத்தி செய்யும் குப்பைமேடு

பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இறந்த வீரம்மாளின் வீட்டுக்குச் சென்றோம். அவரது மகன் திலகர் கூறுகையில், ``10 நாள்களுக்கு முன்பு எனது அம்மாவுக்குக் காய்ச்சல் என்று அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தோம். முறையாகச் சிகிச்சை அளிக்காமல், அலட்சியம் காட்டியதால், தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தோம். அங்கு அவருக்குப் பன்றிக்காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில்தான் இந்த நோய்க்கு முறையான சிகிச்சை அளிக்கமுடியும் என்று அவர்கள் கூறியதையடுத்து, மீண்டும் அரசு மருத்துவமனைக்கே கொண்டுவந்தோம். ஆனால், இங்கே மீண்டும் அவரைச் சாதாரண வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். `ரத்தப் பரிசோதனையில் நாங்கள் உறுதி செய்த பின்னர்தான் அவருக்குப் பன்றிக்காய்ச்சல் தொடர்பான சிகிச்சை அளிக்கமுடியும்' என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதுவரை வார்டு எண் 120-ல் வைத்திருந்தனர். அது காசநோய்க்காக சிகிச்சை பெற்றவர்கள் இருந்த பகுதி. அம்மாவுக்கு ரத்தப் பரிசோதனை வருவதற்குள் இறந்துவிட்டார். இவ்வாறான நிலையில்தான் மதுரை அரசு மருத்துவமனை செயல்படுகிறது. நாங்கள் இருக்கும் குடியிருப்பு கருப்பாலை 43-வது வார்டு. எங்கள் பகுதியில் கொஞ்சம் அதிகமான மழை பெய்தாலேயே மழை நீர் வெளியே போகாமல், தேங்கிவிடும். சிறிது நேரத்திலேயே மழைத்தண்ணீர் வீட்டுக்குள்ளும் புகுந்துவிடும். அப்படித்தான் எங்கள் வீட்டுக்குள்ளும் மழை நீர் தேங்கி நின்றது. இதனாலேயே என் அம்மாவுக்குப் பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் எங்கள் பகுதியை முறையாகக் கவனித்திருந்தால், எனது தாயை நான் இழந்திருக்கமாட்டேன்'' என்றார் கலங்கிய கண்களுடன்.

மதுரை இராசாசி மருத்துவமனை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், ``காய்ச்சல் என்று வரும் நபர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்ள நபர்களை அதிகக் கவனம் எடுத்து கவனிப்பதோடு அவர்களுக்குத் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவமனையில், தேவையான படுக்கை வசதிகளும், மருத்துவ உபகரணங்களும் உள்ளன. சிறப்பு வார்டுகளில் ஒரு தலைமை மருத்துவரும், 2 மருத்துவர்களும், 3 முதுகலை மருத்துவ மாணவர்களும், மூன்று ஷிப்டுகளில் 35 நர்சுகளும் பணியில் உள்ளனர். 24 மணி நேரமும் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா அளவிலான மருத்துவமனைகளிலும் போதுமான அளவு மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.

மருத்துவமனை

மதுரை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அர்ஜுன்குமார் கூறுகையில், ``பருவ மழை தொடங்கும் காலங்களான அக்டோபர், நவம்பரில் மக்களுக்கு அதிக அளவில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு மதுரையில், டெங்கு பாதிப்பு அதிக அளவு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு குறைவான அளவே பாதிப்பு உள்ளது. ஆனால், பன்றிக்காய்ச்சல் இந்த ஆண்டு அதிகமாகியுள்ளது. குழந்தைகள், முதியவர்கள், சர்க்கரைப் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் நோயாளிகள் எளிதில் பன்றிக் காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். ஆனால், நாம் சுகாதாரமான முறையைக் கடைப்பிடிக்கும்போது இந்த நோயைப் பரப்பும் வைரஸ்கள் நம்மைத் தாக்குவதில்லை. எனவே, பல்வேறு துறைகளையும் இணைத்து மதுரையில் சுகாதாரப் பணிகளை செய்துவருகிறோம். தண்ணீரில் நச்சுகள் கலக்காத வகையில் மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பைப் லைன்களைச் சரி செய்தல், கொசு மருத்துகள் அடித்தல்... இப்படி எல்லாப் பணிகளையும் தொடர்ந்து செய்துவருகிறோம்.

அதனால் பொதுமக்கள் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. கை, கால்களைச் சோப்பு போட்டுக் கழுவுவதால், 80 விழுக்காடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். எனவே, பள்ளி மாணவர்களிடையே இதுகுறித்த விழிப்புஉணர்வு தேவை. இதை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும். மேலும் வீடுகளில், கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தப்படுத்தவேண்டும். இந்த நடைமுறைகளைப் பொதுமக்கள் கடைப்பிடித்தால், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு வராமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம். மற்றபடி நோயினால், பாதிக்கப்பட்ட நபர்கள், மருத்துவர்களது அறிவுரைப்படி டாமி புளூ மாத்திரைகளை உட்கொண்டால் காய்ச்சல் குறையும். இப்படிப் பல்வேறு சிகிச்சைகள் மூலம் பன்றிக் காய்ச்சலை நம்மால் விரட்ட முடியும். மதுரையில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களை தடுக்க பல்வேறு கட்ட பணிகளைச் செய்துவருகிறோம்'' என்றார்.

ஆய்வு

``மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அசுத்தமான நிலை காணப்படுவதால், பொதுமக்களுக்கு விரைவாக வைரஸ் தொற்றுகள் ஏற்படுகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில், சுகாதாரப் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல்களைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்