வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (25/10/2018)

கடைசி தொடர்பு:15:50 (25/10/2018)

`மருத்துவர் சீட்டு இல்லாமல் பாரசிட்டமால் கொடுக்கக் கூடாது! - மருந்துகடைகளுக்கு அரசு எச்சரிக்கை

டெங்கு, பன்றிக்காய்ச்சல் எனத் தொற்றுநோய்களின் பின்னால் தமிழகமே ஓடிக்கொண்டிருக்கிறது. சுகாதாரத்துறையின் அனைத்துப் பிரிவுகளும் விழிப்போடு செயல்பட்டு தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக, பொதுமக்கள் யாரும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகள் வாங்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகக் காய்ச்சலுக்கான பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (prescription) இல்லாமல் மருந்துக் கடைகள் விற்பனை செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பாராசிட்டமால் மாத்திரை

இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சிவபாலன் கூறும்போது, ``தமிழகம் முழுவதும் 35,000 மருந்துக் கடைகள் உள்ளன. சுகாதாரத் துறை உதவி இயக்குநர்கள், மருந்து ஆய்வாளர்கள் மூலம் மருந்துக்கடைகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். காய்ச்சலுக்கான பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. அந்த மாத்திரைகளைக் கேட்டு வரும் பொதுமக்களை உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளோம். முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் சுய மருத்துவத்தில் ஈடுபட்டால் நோய்கள் தீவிரமடைய வாய்ப்புள்ளது. அதைத் தடுக்கவே இந்த முயற்சி.

போலி மருத்துவர்களுக்கு மாத்திரைகள் விநியோகிக்கக் கூடாது என்று மருந்து விநியோகஸ்தர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருந்து ஆய்வாளர்கள் ஆய்வுக்குச் செல்லும்போது, விநியோகஸ்தவர்கள், பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு மட்டுமே மருந்து, மாத்திரைகளை விநியோகம் செய்துள்ளதற்கான ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். போலி மருத்துவர்களுக்கு மருந்து விநியோகிக்கப்பட்டது தெரியவந்தால், மருந்து விநியோகஸ்தர்கள் மீதும், மருந்தைப் பெற்ற போலி மருத்துவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அவர்.