வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (26/10/2018)

கடைசி தொடர்பு:13:26 (26/10/2018)

ஹெட்போனும் காதுமா சுத்துறவரா நீங்க... இதப்படிங்க முதல்ல! #HighAlert #VikatanInfographics

நமது காதுகளுக்குப் பாதுகாப்பான ஒலி அளவு என்பது 40 முதல் 50 டெசிபல் அளவுதான். ஆனால் ஹெட்போன்களைப் பயன்படுத்தும்போது அதன் அளவு அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிக ஒலியைக் காதுகள் கேட்டுக்கொண்டிருக்கும்போது செவித்திறன் பாதிக்கப்படுகிறது.

ஹெட்போனும் காதுமா சுத்துறவரா நீங்க...  இதப்படிங்க முதல்ல! #HighAlert #VikatanInfographics

ன்றைய இளம் தலைமுறையிடமிருந்து செல்போனை எப்படிப் பிரித்துப் பார்க்க முடியாதோ, அதேபோல் ஹெட்போனையும் பிரிக்க முடியவில்லை. அலுவலகத்தில், பயணங்களில், வாகனப் பயணத்தில், ஜிம்மில், உடற்பயிற்சி செய்யும்போது என ஹெட்போன் எப்போதும் காதுகளிலேயே ஒட்டியிருக்கிறது. சிலர் உறங்கும்போதுகூட காதுகளில் ஹெட்போன் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். 

ஹெட்போன் பாதிப்புகள்

வீட்டுக்கு ஒரு ரேடியோ வைத்து குடும்பமே கேட்ட காலம்போய், செல்போன், கணினி என கேட்ஜெட்டுகளில் ஹெட்போன்கள் போட்டு தனித்தனியாகக் கேட்கும் பழக்கம் வந்துவிட்டது. இன்று அவை காதுகளையே பலி கேட்கின்றன. `ஹெட்போன்களை அதிக அளவில் பயன்படுத்தும்போது செவித்திறனையை இழக்க நேரிடும்' என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனமும் இந்த விஷயத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு உலக நாடுகளுக்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. `ஹெட்போன் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பற்ற ஒலிகளைக் கேட்பதால் உலக அளவில் 110 கோடி இளைஞர்கள் தங்கள் செவித்திறனை இழக்க வாய்ப்புள்ளது' என்கிறது உலக சுகாதார நிறுவனம். மேலும், அனைத்து நாடுகளும் கடுமையான சட்டங்கள் மூலம் பாதுகாப்பற்ற ஒலி பயன்பாட்டைத் தடுக்கவேண்டும். ஹெட்போன் உள்ளிட்ட ஆடியோ சாதனங்கள் செவித்திறனுக்குப் பாதுகாப்பு தரும்விதமாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 

ஹெட்போன்

நமது காதுகளுக்குப் பாதுகாப்பான ஒலி அளவு என்பது 40 முதல் 50 டெசிபல் அளவுதான். ஆனால் ஹெட்போன்களைப் பயன்படுத்தும்போது அதன் அளவு அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிக ஒலியைக் காதுகள் கேட்டுக்கொண்டிருக்கும்போது செவித்திறன் பாதிக்கப்படுகிறது.

ஹெட்போன் மட்டுமன்றி தொலைபேசி, செல்போன்களில் அதிக நேரம் பேசினாலும் இதே பாதிப்புகள் ஏற்படும். கால் சென்டர்கள், தொடர்ச்சியாக அதிக தொலைபேசி அழைப்புகளில் பேச வேண்டிய பணியில் இருப்பவர்களுக்கும் செவித்திறனில் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். 

இதுதொடர்பாக காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் சொ.வெங்கட கார்த்திகேயனிடம் பேசினோம்.

``ஹெட்போன் மட்டுமன்றி தொலைபேசியிலும் மொபைலிலும் கேட்கும் சத்தம்கூட மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான். தொடர்ச்சியாக காது மூக்கு தொண்டை நிபுணர் வெங்கட கார்த்திகேயன்அதிக ஒலி காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும்போது பாதிப்பு ஏற்படும். காதுகளில் வெளிப்புறக் காது, நடுப்புறக் காது, உட்புறக் காது என்று மூன்று பகுதிகள் உண்டு. ஹெட்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதாலும் அதிக சத்தத்தைத் தொடர்ந்து கேட்பதாலும் உட்புறக் காதுகளில் உள்ள சிறிய நரம்புகள் சேதமடையும். அதனால் மூளைக்குச் செல்லும் தகவல்கள் தடைப்பட்டுச் செவித்திறன் குறையத் தொடங்கும். 

ஹெட்போன்கள் பயன்பாட்டால் அதிக சத்தத்தைக் காதுகள் கேட்டுக்கொண்டிருக்கும்போது, காது நரம்புகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்து நிரந்தரச் செவித்திறன் இழப்பு ஏற்படக்கூடும். காதுகளின் வெளிப்புறத்தில் மாட்டிக் கேட்கும் `பேண்ட்' ஹெட்போன்களைவிட காதுகளுக்குள் சொருகிக் கேட்கும் சிறிய தலையையுடைய ஹெட்போன்கள் அதிக ஆபத்தானவை. 

கேட்ஜெட்டுகளின் டிரெண்ட் அதிகரித்துவரும்நிலையில், இதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை வரும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 20 முதல் 35 வயது வரையுள்ள இளைஞர்கள் பலர் செவித்திறன் பாதிப்பு, காதுகளில் சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது, காதுகளில் அசௌகரியம், வலி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனை வருகின்றனர். பலர்  செவித்திறனை இழந்த நிலையிலும் வருகின்றனர். அவர்களுக்கு சவுண்ட் ப்ரூஃப் அறையில் வைத்து செவித்திறனை அளவிடும் பரிசோதனை மேற்கொள்வோம். அதன் அடிப்படையில் செவித்திறன் பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோம்.

பலர் பிரச்னை இருப்பதை உணராமலேயே இருக்கின்றனர். ஆரம்ப நிலையிலேயே இந்தப் பிரச்னைக்கு மருத்துவர்களை அணுகிவிட்டால், காதுகளில் உள்ள நரம்புகள் மேலும் சேதமடையாமல் தடுக்கலாம். நிரந்தரச் செவித்திறன் இழப்பையும் தடுக்கலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கேட்ஜெட்ஸ் பயன்பாட்டினால் ஒருமுறை செவித்திறன் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டால், அதனை மீண்டும் மீட்டெடுக்க முடியாது. குறைவான பாதிப்பு இருந்தால் அதை அதிகரிக்காமல் தடுக்கலாம்.

ஹெட்போன் அணிந்து குறைவான சத்தத்தில் கேட்பது நல்லது. அதேபோல் குறைந்த நேரம் மட்டுமே ஹெட்போன் பயன்படுத்துவது நல்லது. முடிந்த அளவு ஸ்பீக்கர் பயன்படுத்திப் பேசலாம். அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவது, செல்போனில் பேசுவது போன்றவை காதுகளின் நலனை மட்டுமன்றி மனநலத்தையும் பாதிக்கும். 

ஹெட்போன்

ஹெட்போன் அணிந்திருந்தாலும், பிறர்  பேசுவது நமக்குக் கேட்கவேண்டும். ஹெட்போன் அணிந்தவாறு நாம் பிறரிடம் பேசும்போதும் இயல்பான சத்தத்தில் பேச வேண்டும் (சிலர் ஹெட்போன் அணிந்து கொண்டு பிறரிடம் அதிக சத்தத்தில் பேசுவதைப் பார்த்திருப்போம்). இந்த இரண்டு வழிமுறைகள்தாம் ஹெட்போன் பயன்படுத்துவதற்கான அளவுகோல். இவை இரண்டும் இல்லை என்றால், அதிக சத்தத்தை நமது காதுகள் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து உடனடியாக சத்தத்தைக் குறைக்க வேண்டும்'' என்கிறார் அவர்.

வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்யும்போது, சாலைகளில் ஜாக்கிங் போகும்போது காதுகளில் ஹெட்போனுடன் உறவாடினால், உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம்; ஆனால் காது கேட்காமல் போய்விடும்.

 `என் பிரைவசிதான் முக்கியம். ஹெட்போன் பயன்படுத்துவது என் உரிமை' என்று சொல்பவர்களுக்கு ஒரு செய்தி... பிரைவசியைக் காட்டிலும் செவித்திறன் முக்கியம்..!


டிரெண்டிங் @ விகடன்