வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (28/10/2018)

கடைசி தொடர்பு:11:28 (28/10/2018)

குழந்தைகளுக்கு தொக்கு எடுத்தல், வயிற்றை நீவி விடுதல் போன்ற செயல்களைச் செய்யலாமா?

குழந்தைகளுக்கு தொக்கு எடுத்தல், வயிற்றை நீவி விடுதல் போன்ற செயல்களைச் செய்யலாமா?

ழைக்காலம் வந்தால் தொற்றுநோய்கள் பற்றிக்கொள்கின்றன. குறிப்பாக, குழந்தைகள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மழைக்காலத்தில், குழந்தைகளைப் பாதிக்கும் பிரச்னைகளில் முக்கியமானது வயிற்றுப்போக்கு. நிறையப் பெற்றோர், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல மாட்டார்கள்.  வீட்டு மருத்துவத்தையே அதிகம் நம்புவார்கள். குறிப்பாக, குழந்தையின் வயிற்றை நீவிவிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகிவிடும் என்று பெரும்பாலானோர் கருதுகிறார்கள். 

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் குழந்தைகளின் வயிற்றை நீவிவிடலாமா? வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகள் நல மருத்துவர் செல்வன் ரத்தினசாமியிடம் கேட்டோம்.  

"வயிற்றுப்போக்கு ஏற்படுவதால் குடல் பகுதியில் உள்ள நீர்ச் சத்து மற்றும் உப்பு சத்து போன்றவை கழிவுகள் மூலம் தொடர்ச்சியாக வெளியேறிக்கொண்டே இருக்கும். வயிற்றுப்போக்கு தொடர்ந்து ஏற்படுவதால் குழந்தையின் உடலில் தாது உப்புகள் மற்றும் நீர் வறட்சி ஏற்பட்டு, மிகவும் பலவீனமாகிவிடுவர். அப்படிப்பட்ட நேரத்தில், குழந்தையின் உடலுக்குத் தேவைப்படுவது தகுதியான மருத்துவ சிகிச்சைகளும், உடலில் ஏற்பட்டிருக்கும் வறட்சியைத் தீர்க்கும் உணவுகளும் தாம். ஆனால் சில பெற்றோர்  தவறான சில வழிமுறைகளை நம்பிக்கையின் அடிப்படையில் செய்யத் துவங்கிவிடுகின்றனர். குழந்தைகள் நல மருத்துவர் செல்வன் ரத்தினசாமி

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டவுடனே, 'குடல் ஏறியிருக்கும். அதனால்தான் வயித்துப்போக்கு ஆயிடுச்சு. வயிற்றை தட்டிவிட்டாச் சரியாகிடும்' என்று  சிலர் சொல்வதைக் கேட்கலாம். இன்னும் சிலர் 'வயிறு நீவிவிட்டா சரியாகிடும்' என்பார்கள். குடல் சார்ந்த பிரச்னைகளில் குடல் ஏற்றம், குடல் இறக்கம் என இரண்டு உள்ளன. குடல் இறக்கத்துக்குச்  சரியான தீர்வு அறுவை சிகிச்சை மட்டுமே. உதாரணமாகக்  கவட்டை குடலிறக்கம் (Inguinal hernia) எனப்படும் ஒருவகைப் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். அதேபோல் இரைப்பை ஏற்றம் (Hiatus hernia) எனப்படும் ஒருவகையான குடல் ஏற்றத்துக்கும் அறுவை சிகிச்சைதான் தீர்வு. இவற்றுக்குப்பதிலாக நீவிவிடுவதால் குடல் ஏற்றமோ இறக்கமோ சரியாகாது. 

பிறந்த குழந்தைகளுக்கு சில நேரங்களில் தொப்புள் பெரிதாகத் துவங்கும். இது, 'அம்பிலிக்கல் ஹெர்னியா' (Umbilical hernia) எனப்படும். இந்தப் பிரச்னைக்கும்கூட நீவிவிடுமாறு சில பெரியவர்கள் சொல்வதுண்டு. இதுபோன்ற சூழலில் நீவிவிடுதல் என்பது தவறானது. ஹெர்னியா என்பது குடல் சார்ந்த பிரச்னையாகும். அதற்கும், வயிற்றுப்போக்கு பிரச்னைக்கும் தொடர்பில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நீவி விடுதலைப்போல மற்றொரு தவறான நம்பிக்கையும் சிலரிடம் காணப்படுகிறது. அது, தொக்கு எடுத்தல். இந்த சிகிச்சைகள் நேரத்தை வீணடிக்கும் சிகிச்சை முறை என்பதால், பெற்றோர் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. 

நீவிவிடுவதால் குழந்தைகள் அமைதியாகிவிடுவது வழக்கம். மேலும், வயிற்றுப்போக்கின்போது குடல் தசைகள் சுருங்கிவிரிந்து வலி உணர்வும், வயிற்றில் ஒருவகை இறுக்கமும் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில், அந்த இடத்தில் எண்ணெய்போட்டு கையால் நீவிவிட்டால் பிரச்னை சரியாவது இயல்புதான். இது, மசாஜ் வகை சிகிச்சை முறை. இதைச் செய்வதால், அடிப்படையான பிரச்னை சரியாகாது. வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான நுண்ணுயிர்களை அழித்தால் மட்டுமே அப்பிரச்னை சரியாகும். மாறாகக் குடல் சார்ந்த சில வீட்டு வைத்தியங்களைச் செய்வது, பலனளிக்காது.

வயிற்றுப்போக்குப் பிரச்னைக்கு சரியான தீர்வு என்னவென்றால், அதனால் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து மற்றும் தாதுச்சத்து இழப்பைத் தடுப்பது ஒன்றே. அதற்கான சில எளிய யோசனைகளைப் பார்ப்போம்.

நீவி விடுதல்

நீர்ச்சத்தை அதிகரிக்க...

குழந்தைக்கு உப்பு - சர்க்கரை கலவை அளிக்கலாம். அரசு மருத்துவமனைகளில், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும் உப்பு - சர்க்கரைக் கரைசலை (ஓஆர்எஸ்) வாங்கிக் கொடுப்பது நல்லது. 
வீட்டிலேயே உப்பு சேர்த்த அரிசிக் கஞ்சி, பாசிப்பருப்புக் கஞ்சி, ஜவ்வரிசிக் கஞ்சி, இளநீர், சத்துமாவுக் கஞ்சி, கூழ், எலுமிச்சைச் சாறு போன்றவற்றைத் தரலாம். வயிற்றுப்போக்குக்காகக் குழந்தைக்கு ஏற்கெனவே மாத்திரை கொடுத்துவந்தால், மாத்திரை சாப்பிட்டு சிறிதுநேரம் கழித்து ஓஆர்எஸ் பவுடர் கொடுக்கலாம்.

வயிற்றுப்போக்கின் போது ஏற்படும் மற்றொரு முக்கியமான சிக்கல், வாந்தி. சாப்பாட்டில் காட்டும் அக்கறையை, சாப்பிடும் விதத்திலும் காட்ட வேண்டும். மிகவும் பொறுமையாக, மெதுவாகச் சாப்பிட வைக்க வேண்டும். ஒரேநேரத்தில் மொத்தமாகச் சாப்பிட வேண்டும் என்று சொல்லாமல், சிறிது சிறிதாகப் பிரித்து கொடுக்க வேண்டும். 

வயிற்றுப்போக்கு சரியாகத் தொடங்கியவுடன் எளிதாகச் செரிமானமாகும் தக்காளி சேர்த்த ரச சாதம், தயிர்ச் சாதம், மோர் சாதம், இட்லி, சூப், கரைத்த உணவுகள் போன்றவற்றைக் கொடுக்கலாம். பிரச்னை குறையக் குறைய, திரவ உணவுகளைத் திட உணவுகளாக மாற்றிக் கொடுக்கலாம். 

சில நேரங்களில், தாய்ப்பால் கொடுப்பதால்தான் வயிற்றுப்போக்கு அதிகமாகிறது என நினைத்து அம்மாக்கள், தாய்ப்பாலை நிறுத்திவிடுவதுண்டு, அது தவறு. எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழலிலும் தாய்ப்பால் குழந்தைக்கு நல்லதையே கொடுக்கும். முதல் இரண்டு நாள்களுக்குப் பிரச்னை ஏற்படுவது இயல்புதான்; என்றாலும், நிறுத்தாமல் தாய்ப்பாலை மட்டுமே கொடுப்பது நல்லது.
பவுடர் கலந்த பால், குளிர்பானங்கள், பசு/எருமை/ஆட்டுப்பால், ஊட்டச்சத்து பானங்கள், டீ, காபி, பிஸ்கட், பேக்கரி உணவுகள், வசம்பு, கசகசா போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தை

* தொடர் வயிற்றுப்போக்கு
* இடைவிடாத வாந்தி
* அதிக காய்ச்சல்
* வலிப்பு
* மயக்கம் அல்லது நினைவிழப்பது
* அதிகமான வயிற்றுவலி
* மூச்சுவிடச் சிரமப்படுதல்
* வயிறு வீங்கியிருத்தல்
* மூச்சுத்திணறல்
* தோல் நீல நிறத்தில் மாறுவது
* கை, கால் குளிர்ந்து போவது

இதுபோன்ற சூழல்களில், தாமதிக்காமல் மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

மருந்துக் கடைகளில் 'வயிற்றுப்போக்குப் பிரச்னைக்கு மாத்திரை வேண்டும்' என்று சொன்னவுடன் லோமோடில் (Lomotil), லோப்ரமைட் (Loperamide) போன்ற மாத்திரைகளைத் தருவார்கள். அவையாவும், வயிற்றின் இயக்கத்தை நிறுத்தக்கூடியவை என்பதால், ஆபத்தை விளைவிக்கும். அதுமட்டுமன்றி, எல்லா நேரங்களிலும் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் சரியான தீர்வாக இருக்காது. 

சில பெற்றோர், 'ஆன்டிபயாடிக் மருந்து கொடுத்தால் என் குழந்தைக்கு பிரச்னை சரியாகிவிடுகிறது' எனக்கூறி, மருந்துக் கடைகளில் தாமாகக் கேட்டுப் பெறுவதுண்டு. மருத்துவரின் ஆலோசனையின்றி அவற்றைத் தருவது, தவறு. தொடர்ச்சியாக ஆன்டிபயாடிக் சாப்பிடும் குழந்தைகளுக்கு, பின்னாளில் அவை பிரச்னையை ஏற்படுத்தலாம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்