துணையை இழந்ததால் ஏற்படும் மனஅழுத்தம் உயிரையே பறிக்கலாம் - பகீர் ஆய்வு முடிவு! | A broken heart can kill the person

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (29/10/2018)

கடைசி தொடர்பு:16:15 (29/10/2018)

துணையை இழந்ததால் ஏற்படும் மனஅழுத்தம் உயிரையே பறிக்கலாம் - பகீர் ஆய்வு முடிவு!

மிகவும் அந்நியோன்யமாக வாழும் கணவன்-மனைவி இருவரில் ஒருவர்  உயிரிழந்துவிட்டால், குறுகிய காலத்திலேயே மற்றவரும் உயிரைத் துறக்கும் நிகழ்வுகளைப் பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். இது தொடர்பாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில்... துணையை இழந்தவர்களுக்கு, அந்தத் துயரத்தின் காரணமாக இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

மன அழுத்தம்


 அமெரிக்காவைச் சேர்ந்த ரைஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், துணையை இழந்த 99 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளனர். துணை இறந்தபிறகு,  நாள்களை எப்படிக் கடத்துவது என்ற குழப்பத்தில் இருப்பவர்கள், தன்னுடைய வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிட்டது என்று கவலைப்படுபவர்கள், உயிரிழந்துவிட்டார் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் என அதிகபட்ச துயரத்தை வெளிக்காட்டியவர்களிடமும், துணையை இழந்தாலும் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்பவர்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், துணையை இழந்த துயரத்தில் இருப்பவர்களுக்கு உடலில் 17 சதவிகிதம் கூடுதலாக அழற்சி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த அழற்சி, இதயநோய், புற்றுநோய், சர்க்கரை நோய்க்குக் காரணியாக விளங்குகிறது. 

 இது தொடர்பாக தலைமை ஆராய்ச்சியாளர் கிரிஸ் கூறும்போது,"வயதானவர்களுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு அழற்சிதான் காரணியாக உள்ளது. அழற்சிக்கு மனஅழுத்தம்தான் முக்கியக் காரணமாக உள்ளது. துணையை இழந்து வாடுபவர்களுக்கு, பொதுவாக மனஅழுத்தம் அதிகரித்துக் காணப்படும். அந்த மனஅழுத்தத்தின் விளைவாக மாரடைப்பு, பக்கவாதம், முன்கூட்டியே உயிரிழத்தல் போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. துணையை இழந்தவர்களிடம் இருக்கும் துயரம், பல்வேறு நோய்களுக்கு எவ்வாறு காரணியாக அமைகிறது என்பது பற்றி, உலக அளவில் முதன்முதலாக இப்போதுதான்  இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது" என்றார். 

 இளம் வயதில் ஏற்பட்டாலும், வயதானபோது நிகழ்ந்தாலும் துணையை இழப்பது என்பது ஈடுசெய்ய முடியாத இழப்பு. அப்படிப்பட்டவர்களின் துயரத்தை அத்தனை சீக்கிரத்தில் போக்கிவிட முடியாது. எனவே, துணையை இழந்து வாடுவோருக்குப் பிள்ளைகள், உற்றார், உறவினர் என அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களின் தனிமையைப் போக்க வேண்டும். தேவைப்பட்டால், மருத்துவர் அல்லது உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.