வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (29/10/2018)

கடைசி தொடர்பு:17:15 (29/10/2018)

ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒருவரைத் தாக்கும் ஸ்ட்ரோக்! #WorldStrokeDay

தய நோய், புற்று நோயைப் போன்று மிகவும் ஆபத்தான நோய் பக்கவாதம் (ஸ்ட்ரோக்). மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களிலும் மூளைக்குள் உள்ள ரத்தக் குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டாலோ, கசிவு உருவானாலோ பக்கவாதம் ஏற்படும். குறிப்பாக 50 வயதைக் கடந்தவர்கள் இந்த நோயால் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். உலகம் முழுவதுமே பக்கவாதம் பற்றி போதிய அளவுக்கு விழிப்புஉணர்வு இல்லை. அதனால் பலர்  சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை. இந்தநோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும், நோயின் தாக்கம் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 29-ம் தேதியை உலக பக்கவாத விழிப்பு உணர்வு நாளாக அனுசரித்து வருகிறது உலக சுகாதார நிறுவனம். 

ஸ்ட்ரோக்

ஒவ்வோர் ஆறு விநாடிக்கும் ஒருவரைத் தாக்கும் இந்த நோயால் உலகம் முழுவதும் எட்டுக் கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 5 கோடிக்கும் அதிகமானோர் நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். அமெரிக்காவில் பக்கவாதத்தால் வருடத்துக்கு 7.95 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அதில் 1.4 லட்சம் பேர் இறக்கின்றனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் அந்தப் பாதிப்பிலிருந்து விடுபட முடியும். உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக இருத்தல், புகை பிடித்தல், சர்க்கரை நோய், மரபியல் ரீதியான தன்மை, வயது அதிகரித்தல் போன்றவை பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன. இதயத்தின் சீரற்றத் துடிப்பு, இதய வால்வு பிரச்னை, தலைக் காயம், மூளையில் நோய்த் தொற்று போன்றவற்றாலும் பக்கவாதம் ஏற்படலாம்.

ஸ்ட்ரோக்

50 வயதுக்கு மேல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பக்கவாதம் வருகிற வாய்ப்பு 2 மடங்கு அதிகரிக்கிறது. வாய் கோணுவது, முகம் அல்லது உடலில் ஒரு பக்கம் மரத்துப்போவது, உடல் செயலிழத்தல், பேசும்போது திடீரென வார்த்தைகள் குளறுவது, நடக்கும்போது தள்ளாடுவது, நேராக நிற்க முடியாத நிலை, ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது, பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென்று சில நொடிகள் பேச்சு நின்றுபோவது, பார்வை திடீரென்று குறைந்துபோவது போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகளாகும்.

பக்கவாதம் வராமல் தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும்? 


ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். புகைபிடிக்கும் பழக்கம் பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகமாக்கும். புகையானது ரத்தக் குழாய் சுவரைத் தாக்குகிறது. மது அருந்துவதும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். சர்க்கரை நோய், உடலின் எல்லாப் பகுதியிலும் உள்ள எல்லாவகை ரத்தக்குழாய்களையும் பாதிக்கும். உணவுப் பழக்கத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். சமச்சீரான உணவைச் சாப்பிட வேண்டும். சிறுதானிய உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரியுங்கள். பக்கவாதம் வருவதற்கான அபாயத்துக்கு உட்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும்.

ஸ்ட்ரோக்

பக்கவாத நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிந்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி முழுவதுமாகச் செயலிழந்துவிடும். காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு பாதிப்பு குறையும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க