வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (30/10/2018)

கடைசி தொடர்பு:11:43 (30/10/2018)

``தமிழகத்தில் அக்குபஞ்சர் படிக்கலாமா... கிளினிக் நடத்தலாமா..?!" ஆர்.டி.ஐ-யில் அரசு தகவல்

அக்குபஞ்சர் மருத்துவப் படிப்புக்கும், அக்குபஞ்சர் மருத்துவம் செய்யவும் தமிழகத்தில் அங்கீகாரம் இல்லை’ என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

``தமிழகத்தில் அக்குபஞ்சர் படிக்கலாமா... கிளினிக் நடத்தலாமா..?!

`ருந்தில்லா மருத்துவம்', `பக்கவிளைவில்லா மருத்துவம்', `நிரந்தரத் தீர்வு தரும் மருத்துவம்' என்றெல்லாம் மக்களை எளிதில் ஈர்க்கும் பெயர்களில் அக்குபஞ்சர் மருத்துவம் பற்றி விளம்பரப்படுத்தப்படுகிறது. சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த மருத்துவம் தற்போது தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்குபஞ்சர் படித்தவர்கள் கிளினிக் திறந்து வலி நிவாரணம் உள்ளிட்ட சிகிச்சைகளைச் செய்துவருகிறார்கள். பொதுமக்களும் ஆங்கில மருத்துவத்துக்கு மாற்றான மருந்தில்லா இந்த மருத்துவத்தைத் தேடிச் செல்கின்றனர். 

அக்குபஞ்சர்

இந்நிலையில், `அக்குபஞ்சர் மருத்துவப் படிப்புக்கும், அக்குபஞ்சர் மருத்துவம் செய்யவும் தமிழகத்தில் அங்கீகாரம் இல்லை’ என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அக்குபஞ்சர் மருத்துவர்கள் தமிழகத்தில் கிளினிக் நடத்துவது தொடர்பாக  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குக் கிடைத்த பதிலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 

அக்குபஞ்சர் மருத்துவம் பற்றி தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பிய சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் முஹம்மது கிஸாரிடம் பேசினோம்.

``மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்திடம் அக்குபஞ்சர் மருத்துவர்கள் தமிழகத்தில் கிளினிக் நடத்துவது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் 3 கேள்விகளுக்கு விளக்கம் கோரியிருந்தேன். அந்த மனுவை இந்திய மருத்துவ இயக்குநரகம் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. அதன்படி, இந்திய மருத்துவத்துக்கான தமிழ்நாடு வாரிய பதிவாளர் பதிலளித்திருந்தார். அதில், `தமிழகத்தில் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அக்குபஞ்சர் படிப்புகள் உள்ளனவா' என்ற கேள்விக்கு `தமிழகத்தில், அக்குபஞ்சர்  தொடர்பான பட்டயம், பட்டம், முதுகலை, குறுகியகால டிப்ளோமா படிப்புகள் என எந்தவிதப் படிப்பையும் அரசு அங்கீகரிக்கவில்லை. அதற்கான படிப்புக்கு அரசு பதிவு பெற்ற பல்கலைக்கழகங்களும் அங்கீகாரம் பெறவோ அல்லது பயிற்சிகளை நடத்தவோ இல்லை' என்று கூறப்பட்டிருந்தது. 

அக்குபஞ்சர்

மேலும்,  `அப்படி அங்கீகாரம் இல்லாதபட்சத்தில், அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க அனுமதி இருக்கிறதா' என்ற கேள்விக்கு `அரசுமுஹம்மது கிஸார் அனுமதி பெற்ற பல்கலைக்கழங்களில் படிக்காத வெறும் பயிற்சி மட்டுமே பெற்ற எந்த நபரும் அக்குபஞ்சர் பிராக்டிஸ் மாநிலத்தில் செய்ய தகுதி இல்லாதவர்தான்' என்று பதில் தரப்பட்டுள்ளது.  `அங்கீகாரம் இல்லாத படிப்பு, பயிற்சி முடித்த அக்குபஞ்சர் தெரபிஸ்ட்டுகள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்ற கேள்விக்கு `அக்குபஞ்சர் பயிற்சியாளர்மீது தமிழக அரசு சட்டம் அரசாணை எண்- 171 (தேதி 27.06.2016) சுகாதாரம் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத்துறை சட்டப்படி போலி மருத்துவர் எதிர்ப்புக் குழுவால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்ற பதிலும் கிடைத்துள்ளது. 

இதன் மூலம் தமிழகத்தில் அக்குபஞ்சர் மருத்துவர்களைத் தமிழக அரசோ, இந்திய மருத்துவமோ அங்கீகரிக்கவில்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. நிலைமை இப்படிருக்க, `மாற்று மருத்துவம்' என்ற பெயரில் மக்கள் அலை அலையாக இந்த மருத்துவமனைகளை நோக்கிச் செல்வதைப் பார்க்கிறோம். அத்துடன் நான் நன்கு அறிந்தவர்களில் சிலர் கூட இந்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நான் எந்த மாற்று மருத்துவத்துக்கும் எதிரானவனில்லை. `அக்குபஞ்சர்' மருத்துவம் நல்ல மருத்துவம் என்று மட்டும் கூறினால் அது அவர்களின் கணிப்பு என்று விட்டுவிடலாம். ஆனால் அது அலோபதி மருத்துவத்துக்கு மாற்று என்று சொல்லும்போதுதான் மக்கள் அதை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் தவறான வழிகாட்டுதலால், முறையான அலோபதி சிகிச்சையைத் தகுந்தநேரத்தில் எடுக்கத் தவறிவிடுகின்றனர். அத்துடன் `மாற்று மருத்துவம்' என்று நம்பி சிகிச்சை எடுத்து தங்களது பொன்னான நாள்களை வீணாக்கி நோய் முற்றியநிலையில் ஆங்கில மருத்துவத்துக்கு வந்தவர்கள் பலரையும் பார்த்திருக்கிறேன். மக்களிடம் இதுகுறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்த இதை ஆர்.டி.ஐ மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். இதில் எனக்கு வேறு எந்தத் தனிப்பட்ட  நோக்கமுமில்லை. மக்கள் இனிமேலாவது விழிப்புஉணர்வுடன் இருக்க வேண்டும்" என்கிறார் முஹம்மது கிஸார்.

சேது சுப்பிரமணியன்இந்தக் குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு அக்குபஞ்சர் மற்றும் புற சிகிச்சையாளர் சங்கத்தின் (Tamilnadu Acupuncture and External Therapists Association) தலைவர் சேது சுப்பிரமணியனிடம் பேசினோம்.

``அக்குபஞ்சர் மருத்துவத்தின் பூர்வீகம் சீனாவாக இருந்தாலும், அக்குபஞ்சர் தமிழர் பாரம்பர்யத்தில் இருந்த வழக்கம்தான். காது குத்துவது, தாலி அணிவது உள்ளிட்ட பல சம்பிரதாயங்களில் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது. இன்றைக்கும் ஆதிவாசிகள் தங்கள் காது முழுக்கக் காதணிகளை அணியும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் 1962-ம் ஆண்டு உலகச் சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவம் இது. இன்றைக்கு உலகமெங்கும் பல நாடுகளில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இந்தியாவிலேயே கொல்கத்தா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அக்குபஞ்சர் என்ற மருத்துவம் ஒரு போலியான மருத்துவம் என்று மக்கள் மனதில் விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரத்தில், `அக்குபஞ்சர்' என்ற பெயரில் முறையான படிப்போ, பயிற்சியோ பெறாமல், வருமானம் பெரும் நோக்கில் கிளினிக் நடத்துவதையும் அனுமதிக்கக் கூடாது. 

அக்குபஞ்சர்

அதுமட்டுமல்லாமல் அக்குபஞ்சரின் நிலை பற்றித் தெரிந்துகொள்ள நானே பல ஆர்.டி.ஐ-களை போட்டிருக்கிறேன். அக்குபஞ்சருக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (UCG) அங்கீகாரமே இல்லை என்பதை ஆர்.டி.ஐ மூலம் தெரிந்துகொண்டேன். ஏனெனில் பல்கலைக்கழகங்களே சில அங்கீகாரம் இல்லாத படிப்புகளை நடத்துகின்றன. அதில் அக்குபஞ்சர் படிப்பும் ஒன்று. இப்படிப் பல்கலைக்கழகங்களும், வருமானம் ஈட்டும் நோக்கில் செயல்படும் சில கல்வி நிறுவனங்களும் அக்குபஞ்சர் தொடர்பான பல படிப்புகளை அறிமுகம் செய்து, ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக மாற்றிவருகின்றன. இதைத் தடுக்க அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அதேபோல, தமிழகத்திலும் இந்த மருத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மருத்துவர்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். அதற்காக, சட்டசபையில் தனிச் சட்டம் உருவாக்க வேண்டும்; அக்குபஞ்சர் மருத்துவத்துக்கென தனியாக மருத்துவ கவுன்சில் அமைக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசிடமிருந்து பதில் இல்லை. அதனால், மற்றொரு பக்கம் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான் எங்கள் குரல் அரசுக்குக் கேட்கும்" என்கிறார் சேது சுப்பிரமணியன்.

அக்குபஞ்சர்

 இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பேசினோம். 

``அக்குபஞ்சர் படிப்புக்கென தனியாக எந்தப் படிப்பும் இல்லை. அக்குபஞ்சர் மருத்துவர்கள்மீது 27.06.2016 தேதியிட்ட  அரசாணை 171-ன் படி சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சட்டப்படி போலி மருத்துவர் எதிர்ப்புக் குழுவால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று முடித்துக் கொண்டனர். 

தமிழகம் முழுவதும் சிறியதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான அக்குபஞ்சர் கிளினிக்குகள், மருத்துவமனைகள் இயங்கிவருகின்றன.  இவற்றின் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் இன்னமும் எப்படி இத்தனை கிளினிக்கள் செயல்படுகின்றன. இதனால், இந்த கிளினிக்குகளைக் கண்டுகொள்ளாமல் இருக்க அரசே துணை போகின்றதா என்ற சந்தேகமும், அதிகாரிகள் மறைமுகமாக பலன்பெருகிறார்களா என்ற கேள்வியும் ஒரு சேர எழுகிறது.  

ஒருவர் எத்தகைய மருத்துவத்தையும் பின்பற்றுவது அவரவர் சொந்த விருப்பம். ஆனால், அங்கீகாரமில்லாத இத்தகைய மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளின் உயிருக்கு யார் உத்தரவாதம் தருவது, அரசு இனிமேலாவது கவனம் செலுத்துமா?

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க