`காற்றுதான் புதிய புகையிலை' - எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு! | Air is the new tobacco - WHO Warns

வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (30/10/2018)

கடைசி தொடர்பு:17:36 (30/10/2018)

`காற்றுதான் புதிய புகையிலை' - எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

காற்று மாசுபாடு காரணமாக நுரையீரல் பிரச்னைகள், இதயப் பிரச்னைகள், சர்க்கரை நோய் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது உலக சுகாதார அமைப்பு புதிய ஆய்வு முடிவொன்றை வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாடு, பெரியவர்களைவிடக் குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் என்பதே அந்த ஆய்வுமுடிவு. உலகளவில் 15 வயதுக்குட்பட்ட 180 கோடி குழந்தைகள் தினமும் மாசு படர்ந்த காற்றையே சுவாசிக்கின்றனர் என்கிறது அந்த ஆய்வுமுடிவு. இந்தத் தொகை என்பது, உலகளவில் தோராயமாக 93 சதவிகித குழந்தைகளைக் குறிக்கின்றது.

காற்று மாசுபாடு

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் நிறைந்து வாழும் நாடுகளில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நாடுகளில் குழந்தைகள் இறப்பும் அதிக அளவில் உள்ளது. மேலும், 2016-ம் ஆண்டு கணக்குப்படி, உலகளவில் ஆறு லட்சம் குழந்தைகள் மாசு கலந்த காற்றைச் சுவாசித்து, சுவாசக் கோளாறுகளால் இறந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், ஒரு லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர் என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள்

இந்தியாவில் இறக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், பத்தில் ஒரு குழந்தை காற்று மாசுபாடு காரணமாகத்தான் இறக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. அந்த ஆய்வின் முடிவில் 'காற்றுதான் புதிய புகையிலை' என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அந்த அமைப்பின் பொது இயக்குநர் மரியா நெய்ரா (Maria Neira) பேசும்போது, "காற்று மாசு காரணமாக, குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்புகள், அறிவாற்றல் திறன் பாதிப்பு, புற்றுநோய், தீவிரமான இதய பாதிப்புகள் போன்ற பிரச்னைகள் ஏற்படுத்துகின்றன. எல்லா குழந்தைகளும் சுத்தமான மாசற்ற காற்றை சுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் அதற்கான சூழலை உருவாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க