`பாம்பே - O' அரிய வகை ரத்தம் செலுத்தி நோயாளி மீட்பு! - ஸ்டான்லி மருத்துவர்கள் சாதனை | Patient recovery of rare blood type

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (30/10/2018)

கடைசி தொடர்பு:22:03 (30/10/2018)

`பாம்பே - O' அரிய வகை ரத்தம் செலுத்தி நோயாளி மீட்பு! - ஸ்டான்லி மருத்துவர்கள் சாதனை

விபத்தில் சிக்கிய 46 வயது பெண்மணிக்கு `பாம்பே - O'  என்ற அரிய வகை ரத்தத்தைச் செலுத்தி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

 `பாம்பே - O' - ஸ்டான்லி அரசு மருத்துவமனை

கும்பகோணத்தைச் சேர்ந்த 46 வயது பெண்மணி தவறி கீழே விழுந்ததில், அவரது இடதுகால் மூட்டுப் பகுதியில் பலத்த அடிபட்டது. இதையடுத்து அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது, அவருக்கு மூட்டு விலகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரது காலில் தொடர்ந்து வலி ஏற்பட்டதால் மேல்சிகிச்சைக்காக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்துப் பார்த்ததில், அவரது இடதுகாலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருந்ததைக் கண்டறிந்தனர். மேலும், அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் (Hb 5g ) அளவு மிகவும் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதற்கு குறைந்தது 10 கிராம் அளவாவது ஹீமோகுளோபின்  இருக்க வேண்டியது அவசியம் என்பதால் நோயாளிக்கு ரத்தம் செலுத்த முடிவு செய்தனர். இதையடுத்து அவரது ரத்தவகை பற்றி பரிசோதித்துப் பார்த்ததில் அவரது ரத்தம் `பாம்பே - O' என்ற அரியவகையைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டது.

`பாம்பே - O'  என்ற அரிய வகை  இருப்பில் இல்லாததால், ரத்த வங்கியின் பதிவேடு மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் `பாம்பே - O'  ரத்தம் உள்ளவர்கள் கண்டறியப்பட்டனர். திருவான்மியூரைச் சேர்ந்த ஜெகதீஷ், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த உதயகுமார், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அருள் பிரசாத், பூந்தமல்லியைச் சேர்ந்த சுதாகர் ஆகியோரைக் கண்டறிந்து அவர்களிடம் ரத்தம் தானம் பெறப்பட்டது. பின்னர், நோயாளிக்கு ரத்தம் ஏற்றி, அறுவைசிகிச்சை செய்து, நோயாளியின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினர். ரத்த தானம் செய்து, நோயாளியின் உயிரைக் காப்பாற்றியவர்களை மருத்துவமனை டீன் பேராசிரியர் எஸ்.பொன்னம்பல நமச்சிவாயம் பாராட்டினார்.

`பாம்பே - O'  ரத்த வகை 10 லட்சத்தில் நான்கு பேருக்கு மட்டுமே உள்ள (.0004%) மிகவும் அரிய வகை ரத்தமாகும். இது 1952-ம் ஆண்டில் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கு, இந்தவகை ரத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. இப்பிரிவினருக்கு இதே ரத்தவகை உள்ளவர்களிடமிருந்து மட்டும்தான் ரத்தம் பெறமுடியும். பொதுவாக எந்தவித ரத்த வகைக்கும், அதே வகையான ரத்தம் இல்லாதபட்சத்தில் `ஓ நெகட்டிவ்' ரத்தத்தைச் செலுத்தலாம். ஆனால், பாம்பே ரத்த வகையில் இது இயலாத காரியம். இதனால் கும்பகோணத்தைச் சேர்ந்த நோயாளிக்கு ரத்தம் பெறுவதில் சிரமப்பட வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.