சீர்காழி மருத்துவமனையில் துப்புரவாளர் குளுக்கோஸ் ஏற்றினார்... பிறகு நடந்தது என்ன? | a labour girl treated patient in government hospital

வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (31/10/2018)

கடைசி தொடர்பு:19:58 (31/10/2018)

சீர்காழி மருத்துவமனையில் துப்புரவாளர் குளுக்கோஸ் ஏற்றினார்... பிறகு நடந்தது என்ன?

மருத்துவமனையில் பணிபுரியும் பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதுபோன்ற வீடியோ காட்சி வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. 

சீர்காழி மருத்துவமனையில் துப்புரவாளர் குளுக்கோஸ் ஏற்றினார்... பிறகு நடந்தது என்ன?

நாகை மாவட்டத்தில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்று சீர்காழி அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டது. கண் சிகிச்சை, தீப்புண் சிகிச்சைப் பிரிவு, தாய்ப்பால் வங்கி, ரத்த வங்கி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. இந்த மருத்துவமனைக்குச் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் சிகிச்சைபெற வந்து செல்கின்றனர். ஆண்டுக்கு 1500 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

சிகிச்சை

இந்நிலையில், இந்த மருத்துவமனையில் பணிபுரியும் பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதுபோன்ற வீடியோ காட்சி வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. 

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தோம். 

``கடந்த சனிக்கிழமை (27.10.2018) இந்த மருத்துவமனைக்குக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சைபெற வந்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெறுமாறு பரிந்துரைத்துள்ளார். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அந்தப் பெண்ணுக்கு குளுக்கோஸ் ஏற்ற வேண்டியிருந்தது. செவிலியர் யாரும் இல்லாத நிலையில் அங்குப் பணிபுரியும் பெண் துப்புரவுப் பணியாளர் கஸ்தூரி என்பவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கையில் உள்ள நரம்பில் ஊசியைக் குத்தி குளுக்கோஸ் ஏற்றியிருக்கிறார். இந்தக் காட்சியை அங்கிருந்த யாரோ ஒருவர் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். வழக்கமாக டாக்டரோ, செவிலியரோ மட்டுமே நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றுவார்கள். எந்தப் பயிற்சியும் இல்லாத துப்புரவுப் பணியாளர் சர்வசாதாரணமாக நரம்பைத் தேடிக் கண்டுபிடித்து ஊசிபோட்டு குளுக்கோஸ் ஏற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..." என்கிறார்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்தவர்கள். 

சிகிச்சை

இதுபற்றி சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தேவசெல்வியிடம் கேட்டோம். 

``இங்குத் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தனியார் அமைப்பு உதவியுடன் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கஸ்தூரி என்ற பெண் இங்கு துப்புரவுப் பணிகளை மேற்கொண்டுவருகிறார். இவர் சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளி ஒருவருக்கு உதவி செய்தார். அவ்வளவுதான். அதை யாரோ படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி புகார் வந்ததும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

அரசு மருத்துவமனை

``பணி நேரங்களில் இந்த மருத்துவமனையில் பெரும்பாலான மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவமனையிலேயே இருப்பதில்லை" என்கிறார்கள் சீர்காழியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள். 

டாக்டர் ருக்மணிஇந்த விவகாரத்தைத் தமிழகப் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமியின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ``நானும் அந்த வீடியோவைப் பார்த்தேன். இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தபட்டவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

தமிழக மருத்துவம் மற்றும் ஊரகப் பணி துறை இயக்குநர் டாக்டர் ருக்மணியிடம் பேசினோம்.  ``சமூக வலைதளங்களில் வெளிவந்த அந்தக் காட்சி உண்மைதான். சீர்காழி அரசு மருத்துவமனையில் அங்கு பணிபுரிந்த துப்புரவுப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் துப்புரவுப் பணியாளர் குளுக்கோஸ் ஏற்றியது உண்மைதான். அங்குச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கவனத்துக்கு வந்ததும் அவரை பணியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார். 

``அந்தத் துப்புரவுப் பணியாளர் மீது நடவடிக்கை எடுத்தது இருக்கட்டும்... பணியில் இல்லாத செவிலியர், இதைக் கண்காணிக்கத் தவறிய மருத்துவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?" என்று கொதிக்கிறார்கள் சீர்காழி மக்கள்! 


டிரெண்டிங் @ விகடன்