நெல்லையில் பல்வேறு கட்டங்களில் டெங்கு விழிப்பு உணர்வு முகாம்! | Dengue awareness campaign going on in various stages of Nellai district

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:07:25 (01/11/2018)

நெல்லையில் பல்வேறு கட்டங்களில் டெங்கு விழிப்பு உணர்வு முகாம்!

ழைக்காலத்தில் மிகவும் அச்சுறுத்தும் நோய்களான டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் இந்த முறை அதிகளவில் பரவியுள்ளது. தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி 2,676 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

டெங்கு

காலை வேளையில் கடிக்கும் கொசுவின் வழியாக ஒருவகை வைரஸ் மூலம் டெங்கு காய்ச்சல் மனிதனுக்கு பரவுகிறது. தொடர் வாந்தி, வயிற்று வலி, தொண்டைவலி, தலைவலி, எலும்பு தசைகளில் உண்டாகும் வலி, இவையனைத்தும் டெங்கு காய்ச்சலுக்கான முக்கிய அறிகுறிகள். இந்தக் காய்ச்சலை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திவிட முடியும். வைரஸின் தாக்கம் அதிகரித்தால், தட்டணுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்தாண்டு  டெங்குவினால் 5 பேரும், பன்றிக்காய்ச்சலினால் 15 பேரும் பாதிக்கப்பட்டு தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இப்போது 10 பேர் மட்டுமே டெங்கு அறிகுறிகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லையில் 2748 பேர் டெங்கு தடுப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை 190 பேர் கொண்ட குழு கண்காணிக்கிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை அரசுப் பள்ளிகள், அலுவலகங்கள் உட்பட எல்லா இடங்களிலும் டெங்கு எதிர்ப்பு நாளாக விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  அனைத்து ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என எல்லா இடங்களிலும் தினமும் மொத்த குப்பைகள் அகற்றப்பட்டு கொசுப்புழுக்கள் ஒழிப்பு மற்றும் புகைமருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனை

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளின் முன்னெடுப்பாகத் தினமும் பாளை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவேம்பு மற்றும் ஆடாதொடை குடிநீர்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், வியாழன்தோறும் ஊராட்சி, பேரூராட்சிகளில் நிலவேம்பு குடிநீர் முகாம்கள் பாளை அரசு சித்த மருத்துவக்கல்லூரியினால் நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், 117 தனியார் மருத்துவமனைகள் என எல்லா இடத்திலும் டெங்கு பற்றிய விழிப்பு உணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்துக்கு டெங்கு மற்றும் இதர பரவும் நோய்களுக்கான சிறப்பு அலுவலராக மருத்துவர் சரவணன் நியமிக்கப்பட்டுளார். டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மரு. கண்ணன், மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.