வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:17:00 (02/11/2018)

`சட்டத்துக்கு விஜய் பதில் சொல்லியே ஆகணும்!'‍ - `சர்கார்' புகையிலை பேனருக்கு எதிர்ப்பு

 டிகர் விஜய்யின் படம் வெளியாகும்போதெல்லாம் சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. இப்போது, 'சர்கார்' படத்துக்கு புதிய எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. 

சர்க்கார்

 கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் சுருட்டு பிடிப்பதுபோன்ற தோற்றம் வெளியானது. இது, புகையிலை விளம்பர தடைச்சட்டத்தை மீறும் செயல். சிறுவர்கள், இளைஞர்கள், பிரபல நடிகர்களின் செய்கைகளைப் பின்பற்றுவார்கள். புகையிலை ஒழிப்புகுறித்து இளைஞர்களிடம் விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, விஜய் புகைபிடிப்பதை ஆதரிப்பது பொது சுகாதாரத்துக்குப் பங்கம் விளைவிக்கும் என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றமும் இந்தச் செயலுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்று தமிழக சுகாதாரத்துறைக்கு கேள்வி எழுப்பியது. சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்தப் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய அந்த போஸ்ட்டர் பயன்பாடு தடைசெய்யப்பட்டது. 

தயாரிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, படம் தீபாவளியன்று ரிலீஸாக உள்ளது. அதற்கான முன்பதிவு இன்று தொடங்கிவிட்டது. விஜய் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர். தமிழகம் முழுவதும் படத்துக்கான போஸ்டர், கட்-அவுட் என அமர்க்களப்படுத்திவருகின்றனர். இதில்தான் இப்போது புதுப்பிரச்னை கிளம்பியுள்ளது. வாயில் சுருட்டுடன் விஜய் தோன்றும் தடை செய்யப்பட்ட புகைப்படமே ரசிகர்கள் வைக்கும் பேனர்கள், போஸ்டர்களில் நிரம்பியுள்ளன. இது, புகையிலைக்கெதிரான செயற்பாட்டாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலக்ஸாண்டர் கூறும்போது, சிரில் அலெக்சாண்டர்"தடை செய்யப்பட்ட விஜய்யின் புகைப்படம் தமிழகம் முழுவதும் பேனர்களாவும், கட்அவுட்டுகளாகவும் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதே புகைப்படத்தைப் பயன்படுத்துவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். 

சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம். நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்யத் தீர்மானித்திருக்கிறோம். அப்போது இந்த ஆதாரங்களை எல்லாம் சமர்ப்பிப்போம். சட்டத்துக்குப் புறம்பான புகையிலை விளம்பரங்களைக் கண்காணிக்கும் மத்திய, மாநில கமிட்டிகளுக்கும் புகார் அனுப்பியிருக்கிறோம். ரசிகர் மன்றங்கள் விஜய்யின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. தடைசெய்யப்பட்ட புகைப்படத்தைப் பயன்படுத்தி, பேனர்கள் வைப்பதற்கு விஜய் ஆட்சேபம் தெரிவிக்காததால், அதை ஆதரிக்கிறார் என்றுதான் அர்த்தம். ரசிகர்களைப் பயன்படுத்தி இந்த விளம்பரத்தை விஜய் செய்துவருகிறார். புகைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் இதுபோன்ற தீய செயல்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு விஜய் சட்டப்படி பதில் சொல்லியே ஆகவேண்டும்" என்றார் அவர்.