வெளியிடப்பட்ட நேரம்: 19:01 (02/11/2018)

கடைசி தொடர்பு:19:01 (02/11/2018)

ஆன்லைனில் மருந்து வாங்கினால், லாபமா... நஷ்டமா?! ஓர் அலசல்

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் மட்டுமல்ல, உற்பத்தியாளர்கள் சங்கமும் ஆன் லைன் மருந்து விற்பனையை எதிர்க்கவே செய்கிறது.

ஆன்லைனில் மருந்து வாங்கினால், லாபமா... நஷ்டமா?! ஓர் அலசல்

திவேகத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று, வீட்டிலிருந்து கொண்டே நமக்குப் பிடித்த உணவை, நமக்குப் பிடித்த கடையிலிருந்து வரவழைத்துச் சாப்பிட முடியும். உலகின் எந்தத் திசைக்குச் செல்லவும் டிக்கெட் புக் செய்யமுடியும். சோப்பு முதல், விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வரை வீட்டில் இருந்தபடியே வாங்கிவிட முடியும். அந்தளவுக்கு, ஆன்லைன் வர்த்தகம் ஊடுருவிவிட்டது. மருந்து வணிகமும் அதற்கு விதிவிலக்கல்ல. 

ஆன்லைன்

நமக்குத் தேவையான மாத்திரைகளை, தேவையான மருந்து நிறுவனங்களிலிருந்து வீட்டில் இருந்தபடியே வாங்கிக்கொள்ள முடியும்  என்கிற நிலைதான் இதுவரை இருந்துவந்தது. ஆனால், அதற்குக் கடிவாளம் போட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை கோரி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இரண்டு வாரம் இடைக்காலத் தடை விதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அறிவித்தது.செல்வன்  

இந்த நிலையில் `உரிமம் பெற்ற ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும்,மருந்துப் பொருள்களை விற்பனை செய்யும் பணியை மட்டுமே செய்து வருவதாகவும் கூறி தங்களையும் இந்த வழக்கில் ஒரு தரப்பு வாதியாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென, ஒரு ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனம் சார்பில் நீதிபதி மகாதேவன் முன் முறையிடப்பட்டது. 

அதைக்கேட்ட நீதிபதி, `உரிமம் இல்லாத நிறுவனங்கள் மட்டுமே ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யத் தடை விதித்ததாகவும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை' எனவும் தெரிவித்தார். 

ஆனால், ``ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இதுவரை எந்த நிறுவனத்துக்கும் உரிமம் வழங்கப்படவில்லை. தவறான தகவல்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன" என்கிறார் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் செயலாளர் செல்வன்.

மேலும், ஆன்லைன் மருந்து விற்பனை எதிர்ப்பதற்கான காரணங்களையும் விரிவாக விளக்குகிறார் அவர்,

``ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வது சட்ட விரோதமானது. கடந்த இரண்டு வருடங்களாகச் சட்டத்தை மீறியே பலர் விற்பனை செய்து வருகிறார்கள். உரிமம் பெற்ற மருந்துக்கடைகளில்கூட எவ்வளவு சதுர அடிக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்களோ அதற்குள்தான் மருந்து விற்பனை செய்யமுடியும். ஆனால், ஆன் லைனில் யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் மருந்துகளை விற்பனை செய்யலாம். ஆன்லைனில், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு போலவே போலியாகத் தயாரித்து மருந்து, மாத்திரைகள் வாங்க முடியும். அப்படி வாங்கப்பட்ட மருந்துகளால் மக்களுக்கு ஏதும் பாதிப்பு என்றால் யாரை, எப்படிக் கைது செய்து விசாரிப்பார்கள்..? 

இந்தியாவில் மருந்துக் கடைகள் இல்லாத பகுதிகளே இல்லை. இங்கு ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யவேண்டிய அவசியம் என்ன, கொரியரில் மாத்திரைகள், மருந்துகளை அனுப்பலாமா, அரசாங்கமும் இதை மறைமுகமாக ஆதரிப்பதற்கான காரணம் என்ன... இப்படி எண்ணற்ற கேள்விகள் இருக்கின்றன. நீதிமன்றம் இடக்காலத் தடை விதித்திருக்கிறது. அதுமட்டும் போதாது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நிரந்தமாகத் தடை வேண்டும்`` என்கிறார் செல்வன்.

மாத்திரை

மத்திய அரசு, ஆன்லைன் மருந்து விற்பனையை அனுமதிப்பதற்கான ஒரு வரைவறிக்கையை கடந்த ஆகஸ்ட் மாதம்  28-ம் தேதி வெளியிட்டது. மத்திய அரசின் அந்த முடிவை அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் கடுமையாக எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாக,ரெக்ஸ் சற்குணம் கடந்த மாதம் 28-ம் தேதி, நாடு முழுவதும் ஒருநாள் முழுக் கடையடைப்பு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 30,000 மருந்துக்கடைகள் உட்பட, இந்தியா முழுவதுமுள்ள 8 லட்சம் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன.  ஏற்கெனவே இதுபோன்ற முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டபோது மருந்து வணிகர்கள் நடத்திய போராட்டங்களின் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

``அரசாங்கம் ஆன்லைன் வர்த்தகத்தை ஆதரிப்பதற்குப் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் அழுத்தம்தான் காரணம்`` என்கிறார் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் தலைவர் ரெக்ஸ் சற்குணம். 

மேலும், ``ஆன்லைன் வர்த்தகம் பெருகினால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மக்கள் தானாகவே மருந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடும் பழக்கம் அதிகரிக்கும். இதனால் மக்களுக்கு தேவையில்லாத உடல் நலப் பிரச்னைகள்தான் உண்டாகும். அரசு இந்த விஷயத்தில் மக்களின் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்" என்கிறார் அவர்.சேதுராமன்

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் மட்டுமல்ல, உற்பத்தியாளர்கள் சங்கமும் ஆன்லைன் மருந்து விற்பனையை எதிர்க்கவே செய்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சேதுராமன் பேசும்போது,

``ஆன்லைன் மருந்து வணிகத்தை நாங்களும் ஆதரிக்கவில்லை. அதில் ஏராளமான குழப்பங்கள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மருந்து வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலை இருக்கிறது. 20 சதவிகிதம், 30 சதவிகிதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைப்பதால் மக்களும் விரும்பி வாங்குகிறார்கள். முறையான நிறுவனங்கள்தான் விற்பனை செய்கின்றன என்பது மக்களுக்கு எப்படித் தெரியும்? பெரிய நிறுவனங்கள் போல் போலியாகத் தயாரித்தும் விற்பனை செய்யவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் மக்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் இல்லை. அரசு என்னதான் முறையாகக் கட்டுப்பாடுகள் விதித்து ஆன்லைன் விற்பனையைக் கொண்டு வந்தாலும் அதிலும் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் இதை ஆதரிக்கவே முடியாது" என்கிறார் சேதுராமன்.

எனில், ஆன்லைன் மருந்து விற்பனையால் யாருக்குமே பயன் இல்லையா என்றால், ``பயன் இருக்கிறது" என்கிறார் முதியோர் நலநடராஜன் மருத்துவர் நடராஜன்,

``வெளியில் சென்று மருந்து மாத்திரைகள் வாங்க முடியாத முதியவர்களுக்கு ஆன்லைன் மருந்து விற்பனை மிகவும் பயன்படும். வயதான முதியவர்களில் பலருக்கு ஞாபகமறதி இருக்கும். சில நேரங்களில் அவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்கு மறந்து போய்விடுவார்கள். அதேசமயம் ஆன்லைனில் மாத்திரை மருந்து வாங்கினால், அவை தீர்ந்து போவதற்கு முன்பாக, `தீரப் போகின்றன' என்பதை மருந்து நிறுவனங்களே நினைவுப்படுத்துகின்றன. இதனால் முதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அந்த வகையில் ஆன்லைன் மருந்து விற்பனையை ஆதரிக்கலாம்" என்கிறார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்