வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (03/11/2018)

கடைசி தொடர்பு:16:27 (03/11/2018)

குழந்தைகளுக்குக் காய்ச்சல் தவிர்க்க... வந்தால் குணமடைய என்ன செய்ய வேண்டும்? #HealthTips

காய்ச்சல் வந்து வைரஸ் அட்டாக் ஆனவுடனே உடல் அதிகபட்சமாகச் சூடாகும்போது உடல் வறட்சியாகி விடுகிறது. இதன் விளைவுதான் குழந்தைகளுக்கு நீரிழப்பு ஏற்படுவது. அதனால், காய்ச்சல் வந்தவர்களுக்குப் புழுங்கலரிசிக் கஞ்சி, இளநீர், சாத்துக்குடி சாறு எனத் தாராளமாகக் கொடுங்கள். சளிப் பிடிக்கும் என்று பயப்படாதீர்கள்.  

`உங்கள் குழந்தைக்கு சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாதீர்கள். வகுப்புத் தேர்வுகள் இருந்தாலும் அனுப்ப வேண்டாம். 

- இப்படிக்கு, பிரின்சிபால்' 

இந்தக் குறுந்தகவலும், மெயிலும் பள்ளிக்கூடத்திலிருந்து பெற்றோர்களுக்கு வருமளவுக்கு, இந்த வருடம் விதவிதமான காய்ச்சல்கள் பதற வைத்துக்கொண்டிருக்கின்றன. குழந்தைகளுக்குக் காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்; வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர் பழனிராஜ் மற்றும் சித்த மருத்துவர் வேலாயுதம் இருவரிடமும் பேசினோம்.

குழந்தை

காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

சத்துக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள குழந்தைகளுக்கும்தான், பருவநிலை மாறும்போது உடனடியாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அதனால் காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படுகின்றன. எனவே குழந்தைகளைக் கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.  

குழந்தை நல மருத்துவர் பழனிராஜ்குடிநீரை எப்போதும் காய்ச்சி ஆற வைத்துக் குடித்தால், மழைக்காலத்திலும் குளிர் காலத்திலும் வருகிற காய்ச்சல் வராது. அதோடு, டைபாய்டு, காலரா, ஹெப்படைட்டிஸ் ஏ ஆகிய பிரச்னைகளையும் முன்கூட்டியே தடுக்க முடியும்.  

உணவில் மிளகு ரசம், இஞ்சி ரசம், பூண்டு ரசம் என்று தினமொரு ரசம் சேர்த்துக்கொண்டால், உடலில் எதிர்ப்புச்சக்தி அதிகமாகும். இதனால், வைரஸால் வருகிற காய்ச்சல்கள் அவ்வளவு சீக்கிரத்தில் உங்கள் குழந்தைகளுக்கு வராது. 

வெறும் தயிர்ச்சாதம் கொடுத்தால்கூட, அதில் வீட்டில் அரைத்த மஞ்சள்பொடியை ஒரு சிட்டிகை சேர்த்துக் கொடுத்து வந்தாலும், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.  

நவதானியங்கள் சேர்த்து அரைத்த சத்துமாவுக் கஞ்சியைத் தினமும் குழந்தைகளுக்குக் கொடுத்து வாருங்கள். நம்முடைய பாரம்பர்ய உணவுகள் அதிகம் சாப்பிட்டால் குழந்தைகளின் உடம்பில் சத்துப் பிடிப்பதோடு, உடம்புக்குள் வைரஸ்கள் வந்தாலும் அவை ஒரு கேடயம் போல் தடுத்துவிடும். 

ஊரில் பலருக்கும் காய்ச்சல் வந்துவிட்டது என்று தெரிந்தால், குழந்தைகளுக்கு 3 நாளைக்கு, காலை - மாலை இரண்டு வேளை மட்டும் 30 மில்லி அளவு நிலவேம்புக் குடிநீர் கொடுங்கள்.  

குழந்தைகளுக்குக் காய்ச்சல் வராமல் தடுக்க ஃப்ளூ வேக்சின் இருக்கிறது. உங்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள்.

காய்ச்சல் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?  

சித்த மருத்துவர் வேலாயுதம்10 வயது வரைக்கும் காய்ச்சல் வந்த பிள்ளைகளுக்கு, மருத்துவர் பரிந்துரைப்படி பாரசிட்டமால் கொடுத்து ஓய்வு எடுக்க வையுங்கள். காய்ச்சல் குணமாகி உடல் தேறுகிற வரைக்கும் அவர்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாதீர்கள்.

வைரல் ஃபீவர் என்பது, ஒரு வீட்டில் ஒருவருக்கு வந்தால், வீட்டில் இருக்கிற எல்லோருக்கும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டுத்தான் போகும். நல்ல நோய் எதிர்ப்பு சக்திகொண்டவர்கள் வேண்டுமானால் தப்பிக்கலாம். அதனால், வீட்டில் எல்லோருமே காய்ச்சலில் படுத்துவிட்டார்களே என்று பயப்பட வேண்டாம்.  

காய்ச்சல் வந்து வைரஸ் அட்டாக் ஆனவுடனே உடல் அதிகபட்சமாகச் சூடாகும்போது உடல் வறட்சியாகி விடுகிறது. இதை ஈடு செய்கிற மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. இதன் விளைவுதான் குழந்தைகளுக்கு நீரிழப்பு ஏற்படுவது. அதனால், காய்ச்சல் வந்த குழந்தைகளுக்குப் புழுங்கலரிசிக் கஞ்சி, இளநீர், சாத்துக்குடி சாறு எனத் தாராளமாகக் கொடுங்கள். சளிப் பிடிக்கும் என்று பயப்படாதீர்கள்.  

புழுங்கலரிசியை வறுத்து, மிக்சியில் ஒன்றிரண்டாக உடைத்து, அதில் கஞ்சி வைத்துக் கொடுத்தால், குழந்தைகளுக்குக் கஞ்சி எளிதில் ஜீரணமாகும். கஞ்சி காய்ச்சும்போது அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், இரண்டு பூண்டுப் பற்கள் போட்டு காய்ச்சிக் கொடுத்தால் சளி வெளியேறும். கூடவே, காய்ச்சல் அடித்த வாய்க்குக் கஞ்சி ருசியாகவும் தெரியும். கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள தூதுவளை துவையல், இஞ்சித் துவையல் அரைத்துக்கொடுத்தால், ஜீரணசக்தி நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

டெங்கு போன்ற காய்ச்சல் வந்தால் ரத்தத் தட்டணுக்கள் குறைந்துவிடுகிறது அல்லவா. அதனால், காய்ச்சல் வந்த குழந்தைகளுக்கு மாதுளம்பழத்தையும், பப்பாளிப்பழத்தையும் சாப்பிடக் கொடுங்கள். இந்த இரண்டு பழங்களுமே தட்டணுக்களை அதிகரிக்கச் செய்யும். 

காய்ச்சல் வந்தால் குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி அதிகமாகும். இந்தச் சளியை விரட்ட சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று ஆடா தொடா கஷாயம் கொடுக்கலாம். காலையில் பல் தேய்த்தவுடன் வெறும் வயிற்றில் 2 கற்பூர வல்லி இலைகள், 10 துளசி இலைகள் சாப்பிடக் கொடுக்கலாம்.  

காய்ச்சல் வந்தாலும், 3 நாளைக்குக் காலை - மாலை இரண்டு வேளை மட்டும் 30 மில்லி அளவு நிலவேம்புக் குடிநீர் கொடுங்கள். சரியாகிவிடும்.


டிரெண்டிங் @ விகடன்