வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (04/11/2018)

கடைசி தொடர்பு:14:39 (04/11/2018)

தீபாவளி சமய விபத்து... அவசர உதவிக்கு 104/108- ஐ அழைக்கலாம்? #SafetyDiwali

பொதுவாக, தீபாவளி போன்ற பண்டிகைக்காலங்களில் வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். அதன் காரணமாக, விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தமிழகத்தைப் பொருத்தவரை புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, தீபாவளி, காணும் பொங்கல் ஆகிய மூன்று பண்டிகை தினங்களில் சாலை விபத்துகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன...

தீபாவளி சமய விபத்து... அவசர உதவிக்கு 104/108- ஐ அழைக்கலாம்? #SafetyDiwali

தீபாவளி நெருங்கிவிட்டது. கொண்டாட்டத்துக்குத் தயாராகிவிட்டோம். வெளியூரில் வேலை செய்பவர்கள், எப்படியாவது தீபாவளிக்கு ஊருக்குப் போய்விட வேண்டும் என்று ஆவலோடு இருப்பார்கள். பேருந்து நெருக்கடி, பணிச்சூழல் காரணமாக தீபாவளிக்கு முதல்நாள் வரை பயணம் இடைவிடாது நிகழ்ந்துகொண்டேயிருக்கும். சாலைகள் ஸ்தம்பிக்கும். 

தீபாவளி விபத்து

பொதுவாக, தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். அதன் காரணமாக, விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தமிழகத்தைப் பொருத்தவரை புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, தீபாவளி, காணும் பொங்கல் ஆகிய மூன்று பண்டிகை தினங்களில் சாலை விபத்துகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தீபாவளியைப் பொருத்தவரை, பட்டாசு விபத்துகள்தான் அதிகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். பட்டாசு விபத்துகளைக் காட்டிலும், சாலை விபத்துகளின் எண்ணிக்கையே அதிகம்.  

2015,2016, 2017  ஆகிய மூன்று ஆண்டுகளில், தீபாவளி சமயத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையினர் எத்தனை அவசரக் கால நிகழ்வுகளைக் கையாண்டுள்ளனர் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் தீபாவளி தீபாவளிக்கு மறுநாள்
2015 2824  2935 3537
2016 3301 4097 3537
2017 4493 4425 4170

சாலைவிபத்துகள்

ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் தீபாவளி தீபாவளிக்கு மறுநாள்
2015 736 720 1109
2016 1066 1511 894
2017 797 1378 672

தீக்காயங்கள்

ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் தீபாவளி தீபாவளிக்கு மறுநாள்
2015 26 25 72
2016 42 104 44
2017 35 68 44

இந்த ஆண்டு, நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே தீபாவளி வருவதால் பெரும்பாலானவர்கள் சம்பளம், போனஸ் வாங்கியிருப்பார்கள். அதனால் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் சமயங்களில் பயணங்களும் அதிகரிக்கும். பயணங்கள் அதிகரித்தால் விபத்துகளும் நிகழும் என்று விபத்துகளைக் கையாளும் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டாசு வெடி

இதுதவிர, பட்டாசு கொளுத்துவதால் ஏற்படும் மூச்சுத்திணறல், தீபாவளி தினத்தன்று சாப்பிடும் உணவால் சர்க்கரை நோய் தொடர்பான பிரச்னைகள், வயிற்று வலி, இதயப் பிரச்னைகள், பச்சிளங் குழந்தைகள் உடல்நலக் குறைபாடு தொடர்பான அழைப்புகளும் பொதுவாக தீபாவளி சமயத்தில் அதிகமிருக்கும்.

சமீப காலங்களில் பேருந்து, ரயில் பயணங்களைப் போன்றே சுயமாக வாகனத்தை ஓட்டிக் கொண்டு நெடுந்தூரம் செல்வது அதிகரித்துள்ளது. தனி நபராகவோ, நண்பர்கள் சேர்ந்தோ, குடும்பத்துடனோ சேர்ந்து கார்களில் ஊர்களுக்குச் செல்கின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோரும் இதில் அடங்குவர். தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் கூடுதல் எண்ணிக்கையிலான பயணங்களை அறிவிப்பார்கள். அந்த வாகனங்களை இயக்குபவர்கள் ஓய்வின்றி பணியாற்றுவார்கள். அதனால் சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் உண்டு. இதற்கு அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் விதிவிலக்கு இல்லை.

"108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தொலைப்பேசி அழைப்புகளை வைத்துப் பார்க்கும்போது, தீபாவளி தினத்துக்கு முந்தைய நாள் மாலை மற்றும் இரவில்  அதிக அழைப்புகள் வரும். தீபாவளியன்று காலை வேளைகளில் அழைப்புகள் குறைவாகவே இருக்கும். மாலை 4 மணிக்கு மேல் அதிகரிக்கத் தொடங்கும். தீபாவளியைக் கொண்டாடிவிட்டு மாலையில் வெளியே செல்வது, தீபாவளி முடிந்து ஊருக்குத் திரும்புவதெல்லாம் அப்போதுதான் நடக்கும். தீபாவளிக்கு மறுநாளும் இதே நிலை நீடிக்கும்.

சாலை விபத்து

இந்த ஆண்டைப் பொருத்தவரை வார இறுதி நாள்களில் இருந்தே தீபாவளி பயணங்கள் தொடங்கிவிட்டதால்  இப்போதே அழைப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.  தமிழகத்திலேயே சென்னையிலிருந்துதான் அதிக அளவில் மக்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். வேலையை முடித்துவிட்டோ, தீபாவளி ஷாப்பிங் முடித்துவிட்டோ அவசர அவசரமாகப் பேருந்து, ரயில்களைப் பிடிக்க மக்கள் செல்வார்கள். பொதுவாக, பதற்றமான மனநிலை நிலவும். அதுபோன்ற நேரங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அவற்றைக் கையாள்வதற்காக எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 936 ஆம்புலன்ஸ் வாகனங்களும் 41 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன. 

பொதுவாக 8 முதல் 10 சதவிகித வாகனங்கள் சர்வீஸுக்கு செல்வது வழக்கம். தீபாவளி தொடர்பான நிகழ்வுகளைக் கையாள அந்தப் பணிகளையும் முன்னதாகவே முடித்துவிட்டோம். அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் பணியில் இருப்பதை உறுதி செய்துள்ளோம். நீண்ட விடுமுறை தினங்கள் என்றால் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் நிரப்பப்பட்டு, கூடுதலான எரிபொருள் கையிருப்பும் வைக்கப்பட்டுள்ளது. தொலைப்பேசி கட்டுப்பாட்டு அறை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வாகனத்தில் உள்ள அவசரக் கால உதவியாளர்கள் என 5200 ஊழியர்கள் அன்றைய தினம் பணியில் இருப்பார்கள் என்றார் அவர்.

பாதுகாப்பான, விபத்தில்லாத தீபாவளியை உறுதி செய்வோம்!

 


டிரெண்டிங் @ விகடன்