வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (06/11/2018)

கடைசி தொடர்பு:16:16 (06/11/2018)

நீங்களே செய்யலாம், செரிமானக் கோளாற்றைப் போக்கும் தீபாவளி லேகியம்!

நீங்களே செய்யலாம், செரிமானக் கோளாற்றைப் போக்கும் தீபாவளி லேகியம்!

துநாள் வரை கிடைக்காத பதார்த்தங்கள் எல்லாம் தீபாவளியன்று சாப்பிடக் கிடைக்கும். போதும், போதுமென்றாலும் அள்ளி வைத்துச் சாப்பிடச் செய்வார்கள். விதவிதமான சுவை, விதவிதமான தன்மை கொண்ட பதார்த்தங்கள் என வயிறு ஒரு வழியாகிவிடும். சாயங்காலமே விளைவுகள் தெரியத் தொடங்கிவிடும். பெரும்பாலானோர் செரிமானக் கோளாறால் தவிப்பார்கள்.  

தீபாவளி

இந்தத் தொல்லையில் இருந்து தப்பிக்க, காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்ததுமே தீபாவளி லேகியம் அல்லது ஓமம், சுக்கு கலவையை ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.

தீபாவளி லேகியம், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். எந்தவித செயற்கைப் பொருள்களும் இல்லாத, பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத தீபாவளி லேகியத்தை நீங்களும் தயார் செய்து கொள்ளலாம். மிளகு, சீரகம் தலா 50 கிராம், திப்பிலித் தூள் இரண்டு டீஸ்பூன், சுக்கு சிறு துண்டு, அதிமதுரத்தூள் இரண்டு டீஸ்பூன், லவங்கப்பட்டை ஒரு டீஸ்பூன் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைத்துக் கொள்ளுங்கள். காயவைக்க நேரமில்லாவிட்டால், வாணலியில் போட்டு வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். பனைவெல்லத்தை நீர் விட்டு பாகு பதமாகும்வரை நன்றாகக் காய்ச்ச வேண்டும். கெட்டிப் பதத்துக்கு வந்ததும் பொடியாக்கி வைத்த மருந்துக் கலவையை அதில் கொட்டி அடிப் பிடிக்காமல் கிளற வேண்டும். சிறிதளவு தேனும், கொஞ்சம் நெய்யும் விட்டுக் கிளறி இறக்கினால் தீபாவளி லேகியம் தயார். செரிமானக் கோளாற்றைப் போக்கச் சிறப்பான மருந்துக் கலவை இது. முற்காலத்தில் இனிப்புப் பண்டமாகவும் மருந்தாகவும் இது பயன்பட்டது. இதில் ஒரு உருண்டையை வாயில் போட்டுச் சுவைத்தால் மிக எளிதாகச் செரிமானமாகும்.

தீபாவளி லேகியம்

தீபாவளி லேகியத்துக்குப் பதில் ஓமம், சுக்கு தலா ஒரு டீஸ்பூன் எடுத்துப் பொடியாக்கி பனைவெல்லம் அல்லது தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளலாம். இதைக் காலையில் வெறும் வயிற்றிலோ அல்லது தீபாவளி பலகாரங்கள் சாப்பிட்ட பிறகோ ஓர் உருண்டையை வாயில் போட்டுக் கொள்ளலாம். சாப்பிட்ட பலகாரங்களோ, உணவோ செரிமானமாகவில்லை என்றால் இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம். புதினா இலை ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன் சிறிது இஞ்சித்துண்டு சேர்த்து அரைத்து நீர் விட்டு வடிகட்டி எலுமிச்சைச் சாறு, நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்கலாம். இதை மதிய வேளைகளில் அருந்துவது சிறந்த பலனளிக்கும். இதேபோல் மாலை வேளையில் சுக்கு வெந்நீர் அருந்தலாம். சுக்கு, மிளகு, தனியா மற்றும் ஏலக்காய் கலவையை அரைத்துப் பொடியாக்கி நீர் விட்டுக் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.

உணவில் புதினாத் துவையல், கொத்தமல்லித் துவையல் சேர்த்துக் கொள்வதும் பலனளிக்கும். வெறும் ஓமத்தை வறுத்துப் பொடியாக்கி பனைவெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். ஓமவாட்டர் அல்லது சீரகம், பெருஞ்சீரகத்தைக் கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடிகட்டி அதை அருந்துவதும் நல்ல பலன் தரும். 

தீபாவளி லேகியம்

இதுதவிர இரவில் திரிபலா சூரணம் அருந்தலாம். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலவையே திரிபலா. இது உணவுப்பாதையில் சிறப்பாகச் செயல்பட்டு மலக்கட்டை நீக்கும். குடலியக்கத்தைச் சீர்ப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும் இது உதவும்.