வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (08/11/2018)

கடைசி தொடர்பு:18:20 (08/11/2018)

8 மணி நேரம் தூக்கம் அவசியம்... இல்லாவிட்டால் நீர்ச்சத்து வற்றிவிடும்! - ஆய்வில் தகவல்

ரு மனிதன் தினமும் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். இரவில் அதிக நேரம் விழித்திருப்பது, இரவுப்பணி என பல காரணங்களால் குறைவான நேரம் தூங்குபவர்கள் இப்போது அதிகரித்துவிட்டனர். ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவு, `ஸ்லீப்’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தூக்கம்

அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு நாடுகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு நாடுகளிலும் 6 மணி நேரம் மட்டுமே தூங்குபவர்களின் சிறுநீர் மிகவும் அடர்த்தியாக மாறியிருந்தது. அவர்களில் 16 முதல் 59 சதவிகிதம் பேரின் உடலில் நீர்ச்சத்து தேவையான அளவைக் காட்டிலும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துகளை `வேஸோபிரஸ்ஸின்' என்ற ஹார்மோன் நிர்வகிக்கிறது. தூக்கம் குறையும்போது இந்த ஹார்மோன் பாதிக்கப்படுகிறது. அதனால் உடலுக்குப் போதிய நீர்ச்சத்து கிடைக்காமல் போகிறது. அதே சமயம், மலையே சரிந்தாலும் 8 மணி நேரம் தூக்கத்தை விட்டுக் கொடுக்காதவர்கள் உடலில் நீர்ச்சத்துகளின் அளவு சரியான விகிதத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.