வெளியிடப்பட்ட நேரம்: 18:56 (09/11/2018)

கடைசி தொடர்பு:18:56 (09/11/2018)

உடல் பருமனாக உள்ளவர்கள் கவனம்... டெங்கு, பன்றிக்காய்ச்சல் தாக்க வாய்ப்புகள் அதிகம்!

உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளில் `ஹை ரிஸ்க்' பட்டியலில் உடல் பருமனும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் பருமனாக உள்ளவர்கள் கவனம்... டெங்கு, பன்றிக்காய்ச்சல் தாக்க வாய்ப்புகள் அதிகம்!

டெங்கு காய்ச்சலும் பன்றிக்காய்ச்சலும் தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வருகின்றன. அரசு சார்பில் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அண்மையில் வேலூரில் நடைபெற்ற டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவர், ``தமிழகத்தில் காய்ச்சல்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குத் தாமதமாக வரக்கூடாது. குறிப்பாக உடல் பருமன், ஆஸ்துமா இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்றும் கூறினார். 

உடல் பருமன்

பொதுவாக பருவமழைக் காலங்களில் டெங்கு, சிக்குன்குன்யா, பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவும். இவை பெரும்பாலும் சர்க்கரைநோய், உயர்ரத்த அழுத்தம் போன்ற பாதிப்பு உள்ளவர்களை மிக எளிதாகத் தாக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், சமீபத்திய ஆய்வுகள் உடல்பருமனாக இருப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றன.

உடல்பருமன் என்பது சர்க்கரை நோயைப் போன்று உலகம் முழுவதும் உள்ள பொதுவான பிரச்னை. உலக அளவில் 190 கோடி பேர் உடல் பருமனாக உள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஐந்து பேரில் ஒருவர் உடல்பருமனாக இருக்கிறார்கள். உடல்பருமன் என்பது சர்க்கரை நோய், இதய நோய், புற்று நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களுக்கான முக்கியக் காரணியாக உள்ளது. இப்போது தொற்று நோய்களுக்கும் உடல் பருமன் ஒரு காரணி என்று சொல்லப்படுகிறது.    

சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல்களுடன் 'கோமார்பிடிட்டி' (comorbidity) எனும் வேறு நோய்களின் பாதிப்பும் சேர்த்துதான் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தாமதமாகச் சிகிச்சை பெறுவதும் உயிரிழப்புக்கு மற்றொரு முக்கியக் காரணம். பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிக்கப்படுவதால் மட்டும் உயிரிழப்புகள் நிகழ்வது அரிது. இதய நோய், நுரையீரல் பாதிப்பு, முற்றிய சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், 65 வயதுக்கு மேல் இருப்பவர்கள், பச்சிளங்குழந்தைகள், கர்ப்பிணிகள் இவர்கள் எல்லோரும் 'ஹை ரிஸ்க்' பட்டியலில் உள்ளனர். இவர்களுக்கு எளிதில் தொற்றுநோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. ஒருவர் உடல் பருமனாக இருப்பதற்கு சர்க்கரைநோய் போன்ற வேறு நோய் பாதிப்புகளும் காரணமாக இருக்கலாம். அதனால்தான் உடல் பருமனாக உள்ளவர்களும் 'ஹை ரிஸ்க்' பட்டியலில் உள்ளனர். உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளில் `ஹை ரிஸ்க்' பட்டியலில் உடல் பருமனும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் கவனமாக இருக்க வேண்டியவர்கள் பட்டியலில் உடல் பருமனாக இருப்பவர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறோம்'' என்கிறார் அவர்.

 நமது உடல் சராசரி எடையைக் காட்டிலும் 20 சதவிகிதம் அதிகரிப்பதையே உடல்பருமன் என்று கூறப்படுகிறது. பல்வேறு நோய்களுக்குக் காரணியாக மாறி, அதனால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் கணக்கில் கொண்டு உடல் பருமன் ஒரு நோயாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பன்றிக்காய்ச்சல்

 தாய், தந்தை இருவரும் பருமனாக இருந்தால், குழந்தைகளும் உடல் பருமனாக இருக்கலாம். எப்போதும் பசியுணர்வு மேலோங்கி இருக்கும் குறைபாடு உள்ளவர்கள், அதிகமாக ஹோட்டல் உணவுகளைச் சாப்பிடுபவர்கள், துரித உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள், மனஉளைச்சல், மன அழுத்தம், சர்க்கரை நோய், உடல் உழைப்பு குறைவு என உடல் பருமன் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

உடற்பயிற்சியும் உணவுமுறைகளில் சிறிது மாற்றத்தைக் கொண்டு வந்தாலே உடல் பருமன் பிரச்னைக்கு பெரும்பாலும் தீர்வு கண்டுவிடலாம். கலோரி குறைவான உணவுகளுடன் சாப்பிடுவதுடன், உடற்பயிற்சியும் செய்தால் உடல் எடையை வேகமாகக் குறைக்க முடியும். மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்... உடல் பருமன் எனும் கனத்தை இறக்கிவைத்துவிட்டு ஆரோக்கிய வாழ்க்கைக்குத் திரும்புவோம்.