வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (10/11/2018)

கடைசி தொடர்பு:13:48 (10/11/2018)

உங்கள் உயிரியல் கடிகாரம் இப்போது எப்படி இயங்குகிறது தெரியுமா? - ஒரு சுவாரஸ்ய அலசல்! #MustRead

வாழ்க்கைமுறை நோய்களுக்கெல்லாம் காரணம், நமது உடலின் 'உயிரியல் கடிகார'மும் (Biological Clock) 'சர்காடியன் இசைவு'ம் (Circadian Rhythm) பாதிக்கப்படுவதுதான் என்கிறது சமீபத்திய ஆய்வு. தூக்கமின்மைதான், மனிதனின் ஆரோக்கியத்துக்கு பெரும் தடையாக உள்ளது.

உங்கள் உயிரியல் கடிகாரம் இப்போது எப்படி இயங்குகிறது தெரியுமா? - ஒரு சுவாரஸ்ய அலசல்! #MustRead

ற்போதைய கணிப்பின்படி, உலகளவில் ஒரு சராசரி மனிதனின் ஆயுள் எதிர்பார்ப்பு (Life Expectancy), 70 - 74 வருடங்களாகும். ஆனால், இந்த சராசரி மனிதன் தன் வாழ்நாளின் 50 சதவிகிதத்தை நோய்களோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அதிலும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய்கள், குடல் அழற்சி, அலர்ஜி, கண் நோய், குழந்தையின்மை, மனநோய்... இவை எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து உறுப்புகளையும் தாக்கும் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான வாழ்க்கைமுறை நோய்களோடு போராடிக் கொண்டிருக்கிறான் மனிதன். இவற்றை எல்லாம் வெல்ல முயலும் அவனது போராட்டத்தில் தோல்வியே மிஞ்சுகிறது. 

இந்த வாழ்க்கைமுறை நோய்களுக்கெல்லாம் காரணம், நமது உடலின் 'உயிரியல் கடிகார'மும் (Biological Clock) 'சர்காடியன் இசைவு'ம் (Circadian Rhythm) பாதிக்கப்படுவதுதான் என்கிறது சமீபத்திய ஆய்வு. 2017-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ் மற்றும் மைக்கேல் யங் ஆகியோரின் ஆராய்ச்சியும் நமது உடலின் ஒவ்வொரு செல்களிலும் இயங்கும் உயிரியல் கடிகாரம் மற்றும் அதன் சர்காடியன் இசைவைப் பற்றியதுதான்.

அது என்ன உயிரியல் கடிகாரம் மற்றும் சர்காடியன் இசைவு...?

இவற்றைப் பற்றி தெரிந்துகொள்வதற்குமுன், சரியான நேரத்தில் உறங்கி விழிப்பது எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்துகொண்டால், இந்த உறக்க மாற்றம் நம்மை எவ்வளவு பாதிக்கிறது என்பதை நம்மால் சுலபமாகப் புரிந்துகொள்ளமுடியும்.

பொதுவாக, நாம் விழித்திருக்கும்போது, `இனி தூங்கச் செல்லலாம்' என்றும், தூக்கத்திலிருக்கும்போது, 'இனி விழித்தெழ வேண்டும்' என்றும் எப்படி நமக்குத் தோன்றுகிறது... எதனால் இது ஏற்படுகிறது..? இதைத்தான், உடலுக்குள் இருக்கும் சர்காடியன் இசைவு (Circadian Rhythm) என்கிறது அறிவியல். 

காலை, பகல், மதியம், மாலை, இரவு ஆகியன 'சர்காடியன் ரிதம்' என்றால், இந்தக் காலை மாலையை முடிவுசெய்ய ஓடும் கடிகாரம்தான் 'உயிரியல் கடிகாரம்'. இது இயற்கையிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான ஒன்று. சுலபமாகச் சொன்னால், ஒவ்வொரு வீட்டிலும் சாதாரணமாக மூன்று அல்லது நான்கு கடிகாரங்கள் இருக்கும். அந்தக் கடிகாரங்களுக்கு, 'செல்' அல்லது சாவி கொடுத்தால் அவை செவ்வனே ஓடிக்கொண்டிருக்கும். அதுபோலவே, நமது உடலின் செல்கள் அனைத்திலும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கடிகாரங்கள் இயங்குகின்றன. இந்தக் கோடிக்கணக்கான கடிகாரங்களுக்கெல்லாம், 'மாஸ்டர் கீ' தரும் தலைமை உயிரியல் கடிகாரம் நமது தலைமைச் செயலகமான மூளையில்தான் இயங்குகிறது.

 உயிரியல் கடிகாரம்

இந்த உயிரியல் கடிகாரம் பழுதடையும்போதும், அதன் 'சர்காடியன் ரிதம்' மாறும்போதும் பல்வேறு வகையான வாழ்க்கைமுறை நோய்கள் ஏற்படுகின்றன என்கின்றன ஆய்வுகள். அதாவது, வீட்டிலுள்ள ஒரு கடிகாரம் காலையில் இயங்கவில்லை என்றால், எப்படி அந்த நாளே தலைகீழாக மாறுகின்றதோ, அதுபோல இங்கு 'மாஸ்டர் கீ'-யுடன் இயங்கும் தலைமைக் கடிகாரமோ அல்லது அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்ற உறுப்புகளின் கடிகாரமோ சரிவர இயங்காதபோது, ஏற்படும் நோய்கள்தான், உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய்கள், குடல் அழற்சி, அலர்ஜி, மனநோய், புற்றுநோய் ஆகியனவாகும்.

'மாஸ்டர் கீ' என்ற நமது மூளை இதை எப்படி நிர்வகிக்கிறது? இந்த லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கடிகாரங்களுக்கும் பேட்டரியை சார்ஜ் செய்வது அல்லது மாற்றுவது எனத்தான் நிர்வகிக்கிறது. இவற்றின் சார்ஜராக, அனைத்தையும் கட்டுப்படுத்துவது 'மெலட்டோனின்' என்ற ஹார்மோன்தான் என்கிறது உயிரியல். மெலட்டோனின் என்பது நமது மூளையின் `பீனியல் சுரப்பி' (Pineal Gland) எனும் பகுதியில் சுரக்கும் முக்கியமான ஹார்மோனாகும். சரி, உறக்கத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்றால், இந்த மெலட்டோனின் என்பது, பகலில், அதாவது அதிக வெளிச்சத்தில் மிகக்குறைந்த அளவிலும்,  இருளில் அதிகமாகவும் சுரந்து மனிதனின் தூக்கத்தையும், அதன் மூலமாக அவனது ஆரோக்கியத்தையும் நிர்ணயம் செய்கிறது. 'மெலட்டோனின் அதிகம் சுரக்கும் இரவில் விழித்திருந்தும், மெலட்டோனின் குறைவாகச் சுரக்கும் பகலில் உறங்கியும் நாம் செய்யும் குழப்பம்தான், இந்த வாழ்க்கைமுறை நோய்களுக்கெல்லாம் முக்கியக் காரணம்' என்கின்றனர் சென்ற ஆண்டின் நோபல் பரிசுபெற்ற ஆராய்ச்சியாளர்கள்.

தூக்கமின்மைதான், மனிதனின் ஆரோக்கியத்துக்கு பெரும் தடையாக உள்ளது என்பதை உணர்ந்தவுடன், அதற்கான காரணங்களான டி.வி, கம்ப்யூட்டர், மொபைல் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைத்தாலே போதும் என்று தோன்றுகிறதல்லவா..? இல்லை.. இவற்றுக்கெல்லாம் மேலாக மற்றுமொரு முக்கியக் காரணம் உள்ளது. அது... நம் வாழ்வில் நம்மால் தவிர்க்கவே முடியாத, மனிதனின் மிக அரிய மற்றும் அதிமுக்கிய கண்டுபிடிப்பான மின்சாரம்தான். இதைக் கேட்கும்போது, உங்கள் உடலிலும் மின்சாரம் பாய்ந்து `ஷாக்' அடித்ததுபோல இருக்கிறதல்லவா..? ஆனால், அதுதான் உண்மை. 

நேற்றைய ஆதிமனிதன், இன்றைய அதிநவீன மனிதனாக வாழ்வதற்கு ஆதாரமே அவனது கண்டுபிடிப்பான மின்சாரம் தான். உலகம் இயங்குவதும், இயக்கப்படுவதும் மின்சாரத்தினால்... ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது மின்சாரம்தான். இதே மின்சாரம்தான், மனிதனின் அத்தனை நோய்களுக்கும் காரணமாக விளங்குகிறது என்பதில் உள்ள உண்மையைச் சற்று ஆராய்ந்து பார்க்க, கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது மின்சாரத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன் வாழ்ந்த நமது முன்னோர் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். இன்றைய மனிதனைக் காட்டிலும், உடலுறுதி, மன வலிமை, வேகம், நோய் எதிர்ப்பு ஆற்றல் என அனைத்திலும் கூடுதல் பலத்துடன் திகழ்ந்தனர். அவர்கள் அனைவரும், இயற்கையோடு இயைந்து, இயற்கை தந்த உணவை உட்கொண்டு வாழ்ந்தனர். சூரியனின் முதல் கதிர், பூமியில் படும்போது கண்விழித்து, நாள் முழுவதும் வெளியே பணிபுரிந்து, சூரியன் மறையும்போது உறங்கினர். சகஜீவிகளான மிருகங்கள், பறவைகள், மரங்கள், செடி, கொடிகள் போலவே இவர்களும் சூரியச் சுழற்சியைப் பின்பற்றி பகலில் விழித்தும் இரவில் உறங்கியும்தான் வாழ்ந்தனர். அன்றிலிருந்து இன்று வரை, மற்ற உயிர்கள் எதுவும் மாறாதபோதும், மின்சாரம் வந்ததும் மனிதன் மட்டும் மாறிப்போய் விட்டான்.

ஆம்... மின்சாரம் வந்ததும் அவன் கண்டுபிடித்த மின்விளக்குதான் இந்த சர்காடியன் ரிதத்தை மாற்றிய முதல் எதிரி. விளக்குகள் வந்த பின்னர்தான் மனிதனின் பகல் நீளமாகி, இரவு குறைய ஆரம்பித்தது. சூரிய அஸ்தமனத்தில் கண்தூங்கி, சூரியோதயத்தில் கண்விழித்த மனிதன், செயற்கை விளக்குகளின் ஒளியில் இரவில் விழிக்க ஆரம்பித்தான். 

மனிதனின் தேவைகள் இன்னும் நீள, அவனது கண்டுபிடிப்புகளும் நீண்டன. மிக்ஸி, கிரைண்டர், டி.வி, ஃப்ரிட்ஜ், ஏ.சி, வாஷிங்மெசின், மைக்ரோவேவ் அவன் என அவன் உபயோகிக்கும் மின்சார உபகரணங்களின் பட்டியலும் நீண்டன. அதனால் அவன் உடல் உழைப்பை மறந்தான். பசி குறைந்ததால் உணவைச் சரியான நேரத்தில் உட்கொள்வதை மறந்தான். புதிய ருசிகள் பழக, உட்கொள்வதன் அளவையும் மறந்தான். தூக்கத்தையும், உழைப்பையும் மறந்த மனிதனது உயிரியல் கடிகாரம், இப்போது சற்று குழப்ப நிலையில் இயங்கத் தொடங்கியது. முன்பு, ஒரு நாளின் உயிரியல் கடிகார நேரம் ஒரு நாளை மூன்றாகப் பிரித்தது. 

உறக்கம்

அதிகாலை 4 மணி முதல் மதியம் 12 மணிவரை, 'எலிமினேஷன்' (elimination) எனப்படும் கழிவுகளை வெளியேற்றும் நேரம். மதியம் 12 மணிமுதல், இரவு 8 மணிவரை, 'ஆப்ரோபிரியேஷன்' (appropriation) எனப்படும் உணவு உட்கொள்ளும் நேரம், இரவு 8 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை, 'அஸிமிலேஷன்'  (assimilation) எனப்படும் செரிமானமான உணவினை கிரகித்துக் கொள்ளும் நேரம். ஆனால், இப்போதோ இந்தக் குழப்பத்தில், தனது சர்காடியன் இசைவை மாற்றியமைக்கத் துவங்கியது உடல். அப்போது உடலில் உள்ள உணவின் சக்திகள் எரிக்கப்பட்டதும் பசியைத் தூண்டி, உணவு கிடைக்கவில்லை என்றால், ஏற்கெனவே உடலில் சேமிக்கப்பட்டுள்ள கலோரிகளைப் பயன்படுத்தி, மூளைக்கு ஆக்சிஜன் செல்வது குறைந்ததும், தூக்கம் வரச்செய்து கொண்டிருந்த சர்காடியன் ரிதம், இப்போது மூளை அலைவரிசைச் செயல்பாடு (Brain wave activity), ஹார்மோன் சுரப்பு (Hormone production), புதிய செல் உற்பத்தி (Cell regeneration) உயிரியல் செயல்பாடுகள் (Biological activities) ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் தடுமாற ஆரம்பித்திருக்கிறது.

இதனால், மனிதனின் `பிஎம்ஆர்' (BMR) என்ற வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரித்துவிட்டது.  அதைச் சமன் செய்ய வியர்வை நாளங்களும், சிறுநீரகமும் அதிக வேலை செய்யத் தொடங்கின. உடலின் வெப்பநிலை கூடியவுடன் முன்பு வெட்டவெளியில் படுத்தோ, கைகளால் விசிறிக் கொண்டோ உறங்கிய மனிதன் ஃபேன், ஏ.சி போன்றவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்தான். முன்பு இயற்கையோடு உறங்கும்போது ஓய்வெடுத்த உடல், இப்போது ஏ.சியின் குளிருக்கு உடல் வெப்பத்தைச் சமன்படுத்த, ஓய்விலும் வேலை செய்துகொண்டிருக்கிறது.

கல்லீரல் மற்றும் பித்தப்பை ஓய்வுக்கான நேரமான நள்ளிரவில் விழித்திருந்து, சாப்பிடுகிறான் மனிதன். மீண்டும் சர்காடியன் இசைவு பெருமளவில் பாதிப்படைகிறது. இதுபோல, இயற்கைக்கு எதிராக மனிதனது செயல்பாடுகளால் மற்ற உறுப்புகளும் சோர்வடையத் தொடங்கின.

 உயிரியல் கடிகாரம்

தலைமை உயிரியல் கடிகாரம், தனது சர்காடியன் இசைவைப் படிப்படியாக இழக்க இதயம், நுரையீரல், சிறுநீரகம், குடல், கண்கள், தசைகள், ரத்த அணுக்கள் என ஒவ்வொரு உறுப்பின் உயிரியல் கடிகாரங்களும் நிலைமாறி ஓய்வின்றி ஓடத் துவங்கின. வாழ்க்கைமுறை நோய்களும் ஒவ்வொன்றாக தோன்றத் துவங்கின.

முன்பெல்லாம் முதுமைவரை ஆரோக்கியமாக வாழ்ந்து மறைந்த மனிதன், தனது வாழ்நாளில், 50 சதவிகிதத்தை உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய், உடல்பருமன், மனநோய் மற்றும் புற்றுநோய்களுடன் கழிக்க ஆரம்பித்தான். அவற்றிலிருந்து விடுபட, இரவு பகலாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறான்.

சரி...  இவற்றுக்கெல்லாம் தீர்வுதான் என்ன..? 

மின்சாரம் இன்றி வாழ்வதா..?

அல்லது மீண்டும் ஆதிமனிதனாகவே வாழ்வதா..?

சற்றே யோசிப்போம்..!  சிந்தித்துப் பார்த்தால், மின்சாரம் போன்ற தொழில்நுட்பங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானவை அல்ல. நோய்க்கான காரணியும் அல்ல. அதைப் பயன்படுத்தும் முறைகளால் நாம்தான் அதை அப்படி ஆக்கிவிட்டோம். வேகமாகச் செல்ல வேண்டும் என்று சக்கரத்தைக் கண்டுபிடித்த மனிதன், நடப்பதை மறக்கலாமா..? எழுதுவதைத் துரிதப்படுத்த டைப்பிங்கை கொண்டுவந்த மனிதன் எழுதுவதை மறக்கலாமா..? அதுபோலவே, வாழ்க்கையை எளிதாக்க மின்சாரத்தை உருவாக்கிய நாம், நம்மை உருவாக்கிய இயற்கையை மறக்கலாமா..?

முன்பு நமக்கு நம் ஆரோக்கியக் கேட்டுக்கான காரணம் தெரியவில்லை. அவற்றைத் தெரிந்து கொண்டபிறகு, நாம் இனி கவனமாக நடக்கலாமே..! மற்ற உயிர்களைப் போல, சூரிய சுழற்சிக்கேற்ப அதிகாலையில் விழிப்பது, வெறும் பாதத்தில் புல்வெளியில் நடப்பது என்று தொடங்கி, பறவைகளுக்குச் சிறுதானியங்கள் அளிப்பது, மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் செய்வது, முடிந்தளவில் சூரிய சுழற்சிக்கேற்ப இயற்கை உணவுகளை உட்கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, இரவில் மின்விளக்குகளை அணைக்கும் நேரத்தைத் துரிதப்படுத்துவது என இயற்கையோடு சிறிதேனும் சேர்ந்து வாழ்வது என படிப்படியாக நம்மை நாமே மாற்றிக்கொள்வோம்...இந்தச் சிறிய மாற்றங்கள் ஒவ்வொன்றும், பல்வேறு நோய்களிலிருந்து கட்டாயமாக நம்மைக் காக்கும் என்பதை உணர்வோம். ஆயுட்காலத்தை அதிகரித்த நாம், அதை ஆரோக்கியமாகவும் வைத்திருப்போம்..!