வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (12/11/2018)

கடைசி தொடர்பு:14:53 (12/11/2018)

தெருக்களில் விநியோகிக்கப்படும் நிலவேம்புக் குடிநீரை பருகலாமா?

``நிலவேம்பு கசாயம் என்பது பாரம்பர்ய சித்த மருந்து. அதில் நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தனம், பற்படாகம், பேய்ப்புடல், கோரைக்கிழக்கு, சுக்கு, மிளகு ஆகிய 9 வகை மூலிகைகள் சம அளவு கலக்கப்பட்டுள்ளன."

தெருக்களில் விநியோகிக்கப்படும் நிலவேம்புக் குடிநீரை பருகலாமா?

ல குடும்பங்களின் தீபாவளி கொண்டாட்டத்தைக் களையிழக்கச் செய்துவிட்டன டெங்கு, பன்றிக்காய்ச்சல்கள். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தமிழக அரசு நிலவேம்புக் குடிநீரைத் தயாரித்து விநியோகித்து வருகிறது. மற்றொருபுறம் அரசியல் கட்சிகளும் தங்கள் சமூக அக்கறையை நிலவேம்புக் குடிநீரின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றன.

தன்னார்வலர்கள்

`பருவமழைக் காலம் முடியும் வரையிலும், காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களின் உற்பத்தி குறையும் வரையிலும் தொடர்ந்து நிலவேம்புக் குடிநீர் வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்கள், திமுக கட்சி அலுவலகங்கள் அனைத்திலும் தொடர்ந்து நிலவேம்புக் குடிநீர் வழங்க வேண்டும்' என்று தொண்டர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார். 

நாம் தமிழர், ஆம் ஆத்மி, த.ம.மு.க எனப் பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நிலவேம்புக் குடிநீரை மாநிலம் முழுவதும் விநியோகித்து வருகின்றன. சில வணிக நிறுவனங்களும் நிலவேம்புக் குடிநீர் தயாரித்து விநியோகிக்கத் தொடங்கியுள்ளன. காலை முதல் மாலை வரை டீ கேன்களில் வைத்துச் சுடச்சுட கொடுக்கிறார்கள். பொதுமக்களும்  ஆர்வத்துடன் வாங்கிப் பருகிச் செல்கின்றனர்.

நிலவேம்புக் குடிநீர் என்பது சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள ஓர் அருமருந்து. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவர்களால் வரையறுக்கப்பட்ட ஒன்று. அதனை நம் விருப்பத்துக்குக் காய்ச்சிக் குடித்துவிட முடியாது. அதற்கென்று பிரத்தியேக தயாரிப்பு முறைகள் உள்ளன. 

இதுகுறித்து சித்த மருத்துவ அலுவலர் சங்கத்தின் தலைவர் பிச்சையாகுமார் விரிவாக விளக்குகிறார். 

``நிலவேம்பு கசாயம் என்பது பாரம்பர்ய சித்த மருந்து. அதில் நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தனம், பற்படாகம், பேய்ப்புடல், கோரைக்கிழக்கு, சுக்கு, மிளகு ஆகிய 9 வகை மூலிகைகள் சம அளவு கலக்கப்பட்டுள்ளன. மருந்து மற்றும் அழகு சாதனச் சட்டத்தின் கீழ் நிலவேம்பு கசாயத்தை, `மருந்து’ என மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.

நிலவேம்பு

காய்ச்சல் வந்தவர்களுக்கு மருந்தாகவும், வராதவர்களுக்குத் தடுப்பு மருந்தாகவும் இது கொடுக்கப்படுகிறது. இதைக் கசாயமாகக் காய்ச்சி பிச்சையா குமார்விற்பனை செய்ய முடியாது. அதனால் நிலவேம்புக் குடிநீர் சூரணம் என்று தூளாகத் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

இதைப் பெரியவர்கள், 5 கிராம் அளவு (அல்லது 1 தேக்கரண்டி) எடுத்து அதனுடன், 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைத்து, 50 மில்லியாக வற்ற வைத்துப் பருகவேண்டும். ஒரு வயது முதல் 11 வயதுவரையுள்ள குழந்தைகளுக்கு 2.5 கிராம் அளவு பொடியை 100 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து 20 முதல் 30 மில்லியாக வற்ற வைத்துக் கொடுக்க வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள் இந்த மருந்தை மருத்துவரின் ஆலோசனையின்றி பருகக் கூடாது.  

காய்ச்சல் தடுப்பு மருந்தாகப் பருக நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் ஐந்து முதல் ஏழு நாள்களுக்குப் பருகலாம். காய்ச்சல் உள்ளவர்கள் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி ஒரு நாளைக்கு மூன்று வேளை, நோய் குணமாகும் வரை பருகலாம்.

`நிலவேம்புக் குடிநீர் சூரணம்' என்ற மருந்துத் தூளை அது காலாவதியாகும் நாள் வரை வைத்துப் பயன்படுத்தலாம். ஆனால் கசாயமாகக் காய்ச்சிய பிறகு மூன்று மணி நேரத்துக்குள் பருகிவிட வேண்டும். ஒருமுறை காய்ச்சியதைப் பல மணி நேரம் வைத்துப் பயன்படுத்துவதோ, மீண்டும் மீண்டும் சூடாக்கிக் குடிப்பதோ கூடவே கூடாது. மீண்டும் பருக வேண்டும் என்றால் புதிதாகக் காய்ச்சிப் பருக வேண்டும்.

நிலவேம்பு  குடிநீர் தயாரித்தல்

மூன்று மணி நேரம் கழித்துப் பருகினாலோ, மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பருகினாலோ அந்த மருந்தின் பயன் கிடைக்காது. 

கடைகளில் நிலவேம்புப் பொடி என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் தூளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. `நிலவேம்புக் குடிநீர் சூரணம்’ என்ற பெயரில் இருக்கும் தூளைத்தான் வாங்க வேண்டும். அதில்தான் 9 வகை மூலிகைகளும் சேர்க்கப்பட்டிருக்கும். 9 மூலிகைகளும் அதற்குரிய வெப்பநிலையில் தண்ணீரில் சேர்ந்து கசாயமாகும்போதுதான், காய்ச்சலைக் குணமாக்கும் மருந்தாக அது உருமாறும். நிலவேம்புக் குடிநீர் சூரணம் என்பது தூளாக இருக்காது. கொரகொரப்பான தூளாகத்தான் இருக்கும்.

மருந்தைக் கடைகளில் வாங்கும்போது, தயாரிப்பு நிறுவனத்தின் உரிம எண் (லைசன்ஸ் நம்பர்), அந்த மருந்து சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டதற்கான சான்று பெற்றுள்ளதா, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா ஆகிய மூன்று விஷயங்களையும் சரிபார்த்த பின்னர்தான் வாங்க வேண்டும்.

தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட சித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 100 நிறுவனங்கள் நிலவேம்புக் குடிநீர் சூரணத்தைத் தயாரித்து விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ளன. தமிழக அரசின் மருத்துவத் தாவரங்கள் மற்றும் மூலிகை மருத்துவ நிறுவனம்(டாம்ப்கால்), இம்காப்ஸ் எனும் கூட்டுறவுச் சங்கம் ஆகியவையும் தயாரித்து விற்பனை செய்கின்றன. எனவே, மக்கள் தரமான மருந்துகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் நிலவேம்புக் குடிநீரை அதிக அளவில் தயாரிக்கும்போது சித்த மருத்துவர்களின் முன்னிலையில் தயாரிக்க வேண்டும். வீடுகளில் தயாரித்துக் குடிப்பதற்கு முன்னர் சித்த மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டும்..” என்றார் அவர்.

நிலவேம்பு குடிநீர்

தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் என அனைத்திலும் சித்த மருத்துவர்கள் உள்ளனர். சென்னை, பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கெல்லாம் பருவமழைக்காலங்களில் நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதனையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுயமருத்துவம் என்பதை எந்த மருத்துவமுறையும் ஆதரிப்பதில்லை. அதற்கு நிலவேம்புக் குடிநீரும் விதிவிலக்கு இல்லை. பருவமழைக் காலங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் கொடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதில் தவறில்லை. ஆனால், துறை சார்ந்த நிபுணர் தெரிவித்துள்ள அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப்படுகிறதா என்பது விடை தெரியாத கேள்வி. 

`கட்சித் தலைவர் உத்தரவிட்டுவிட்டார். அதனால் எதையாவது எப்படியாவது தயாரித்து விநியோகித்து கடமையை முடித்துக் கொள்வோம்' என்று நினைக்காமல், செய்வன திருத்தச் செய் என்பதை நினைவில் வைத்துச் செயல்படுங்கள்..!