வெளியிடப்பட்ட நேரம்: 21:36 (12/11/2018)

கடைசி தொடர்பு:21:36 (12/11/2018)

`கருணைக் கொலையிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய சிகிச்சை’ - பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவு!

சமீபத்தில், கடலூரைச் சேர்ந்த தையல் தொழிலாளி ஒருவர், 'தீராத நோயால் அவதிப்படும் தன்னுடைய பத்து வயது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று நீதிமன்றத்தை நாடியிருந்தார். வலிப்பு மற்றும் மூளை பாதிப்புகள் காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்த அச்சிறுவன், வாய் பேசவும் இயலாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தான். பிறரது உதவியின்றி இயங்க முடியாத அளவுக்கு அவனது நிலை இருந்தது. 

கருணைக்கொலை

இச்சூழலில், உயர் நீதிமன்றம் சிறுவனின் நிலையை ஆய்வு செய்ய ஒரு மருத்துவக் குழுவை நியமித்தது. அந்தக் குழு சிறுவனை முழுமையாகப் பரிசோதித்து, 'இச்சிறுவனைக் குணப்படுத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், எல்லாச் செயல்களுக்கும் யாரோ ஒருவரைச் சார்ந்தே அவன் இயங்க வேண்டியுள்ளது. சிறிது நேரம் கவனிக்காவிட்டாலும் அது அவனுடைய உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும்' என்று அறிக்கை அளித்தது. அதேநேரத்தில் 'தற்போதைக்கு அந்தக் குழந்தையைக் கருணைக்கொலைக்கு உட்படுத்த வேண்டாம். ஏதாவதொரு தீர்வு கிடைக்கிறதா என்று கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்' என்று கோரிக்கை வைத்திருந்தது. 

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த அரசு சாரா மறுவாழ்வு நிறுவனம் ஒன்று, அந்தக் குழந்தைக்கு தாங்கள் மருத்துவம் செய்வதாக தாமாக முன்வந்தது. பெற்றோர் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 'ட்ரிக்கர் பாய்ன்ட் மற்றும் மஸ்குலர் ஸ்கெலிட்டல்' (Trigger point and Musculoskeletal) என்ற சிகிச்சையைக் குழந்தைக்கு அளிக்கத் தொடங்கியது. எல்லோருக்கும் ஆச்சர்யம்தரும்விதமாக, எந்த சிகிச்சை முறையிலும் சரியாகாத அந்தச் சிறுவனின் உடல்நிலை, இந்தச் சிகிச்சைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீளத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, மீண்டும் சிறுவனைக் கண்காணித்து பரிசோதித்த மருத்துவக்குழு, 'சிறுவனைக் கருணைக்கொலை செய்யத் தேவையில்லை' என்று அறிக்கை அளித்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம்

மருத்துவக் குழுவின் அறிக்கையைப் படித்த நீதிபதிகள், சிறுவனின் கருணைக்கொலை மனுவை நிராகரித்ததோடு, 'இந்தச் சிகிச்சையை இயன்முறை பாடப்பிரிவில் தனியொரு பாடமாகச் சேர்க்குமாறு' உத்தரவு பிறப்பித்துள்ளனர். பாடத்திட்டத்தில் இதைச் சேர்ப்பதன்மூலம் அந்தச் சிறுவனைப் போன்று மூளைக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பலரையும், பாதிப்பின் தீவிரத்திலிருந்து காப்பாற்ற முடியும். மேலும் மூளைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மாதம் 15,000 உதவித்தொகை வழங்குவது குறித்து மாநில அரசு ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க