வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (15/11/2018)

கடைசி தொடர்பு:11:15 (15/11/2018)

உடலில் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் நாய்கள்.. மருத்துவ உலகின் புதிய பரிணாமம்!

சர்க்கரை நோயாளிகள் மாறுபட்ட வாசனையை அடிக்கடி நுகரச் செய்து இதுபோன்ற நாய்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அனைத்து வகை நாய்களுக்கும் இதுபோன்ற பயிற்சிகளை அளிக்க முடியும்.

உடலில் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் நாய்கள்.. மருத்துவ உலகின் புதிய பரிணாமம்!

ந்தச் சிறுவனுக்கு இரண்டு வயதாகும்போது டைப் 1 சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து சர்க்கரை நோய்க்கான மருந்துகள், இன்சுலின் கொடுத்து இரவும் பகலும் பெற்றோர் குழந்தையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். குழந்தைக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக சர்க்கரைநோயைக் கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்ட `ஜெடி' என்ற நாயையும் வளர்த்து வந்தனர். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடினாலும் குறைந்தாலும் பயிற்சி பெற்ற நாய்களால் கண்டறிய முடியும். 

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் நாய்கள்

ஒருநாள் நள்ளிரவில் குழந்தை உட்பட வீட்டில் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். ஜெடி திடீரென்று குரைக்க ஆரம்பித்தது. குழந்தையின் தாய் படுத்திருந்த மெத்தையின் மேல் ஏறியும் இறங்கியும் அவரை விழிக்கவைக்க முயன்றது. தூக்கத்திலிருந்து எழுந்த தாய், குழந்தையைப் பார்த்தார். அது நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. `தூங்குவதற்கு முன்னர் குழந்தையைப் பரிசோதித்தபோது சர்க்கரையின் அளவு 100 என்றுதானே காட்டியது. அதனால் குழந்தைக்கு எதுவும் இருக்காது. ஜெடி வேறு எதற்காகவோ குரைக்கிறது' என்று நினைத்து, அதன் குரைப்பை அலட்சியப்படுத்திவிட்டு மறுபடியும் தூங்க முயன்றார். ஜெடி விடுவதாக இல்லை, தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது.தொந்தரவு தாங்க முடியாமல் எழுந்த அவர், எதற்கும் பரிசோதித்துப் பார்க்கலாம் என்று நினைத்து, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கை விரல்களிலிருந்து ரத்தத்தை எடுத்து, சர்க்கரையின் அளவைப் பரிசோதிக்கும் கருவியில் வைத்தார். சர்க்கரையின் அளவு வெறும் 57 தான் இருந்தது. தூக்கத்தில் குழந்தைக்கு சர்க்கரையின் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டே வந்திருக்கிறது. பதறிப்போன தாய் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதால் குழந்தை காப்பாற்றப்பட்டது.

 நாய் ஜெடியின் சிக்னலை அலட்சியப்படுத்தியிருந்தால் குழந்தையின் உயிரை இழக்க வேண்டி வந்திருக்கும். இந்தச் சம்பவம் நடைபெற்றது கனடா நாட்டில். தனது மகனின் உயிரைக் காப்பாற்றிய ஜெடியைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார் அந்தத் தாய்.

சர்க்கரை நோய்

நாய்களுக்கு இருக்கும் மோப்ப சக்தியை வெடிகுண்டுகளை, குற்றவாளிகளைக் கண்டறிய பயன்படுத்தி வருகின்றனர் என்பது நாமறிந்ததே. ஆனால் மருத்துவ உலகத்துக்கும் நாய்கள் பேருதவியைச் செய்து வருகின்றன. 25 ஆண்டுகளுக்கு முன்னரே புற்றுநோய் பாதிப்பைக் டாக்டர் பாலசுப்பிரமணியன்கண்டறிய நாய்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சர்க்கரை நோய், மலேரியா போன்ற நோய்களைக் கண்டறியவும் நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கத்திய நாடுகளில் அதிக அளவில் நாய்களுக்கு இதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 

சர்க்கரை நோய் என்பது உலகளாவிய பிரச்னை என்பது நாம் அறிந்ததே. 2017- ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலக அளவில் 42.5 கோடி பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இந்தியாவில் மட்டும் 7.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்களும், மருத்துவ சேவைகளுக்கும் உள்ள பற்றாக்குறையைப் போக்குவதற்கு இதுபோன்ற நாய்கள் உதவலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சர்க்கரை நோயாளியை 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கு இந்த நாய்களால் முடியும். 

இது தொடர்பாக மெட்ராஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சி நிபுணரும் விஞ்ஞானியுமான டாக்டர் எம்.பாலசுப்பிரமணியனிடம் பேசினோம்: ``சர்க்கரை நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவு குறையும்போது அல்லது அதிகமாகும்போதும் அவர்களின் மூச்சுக் காற்றிலும் வியர்வையிலும் ஒரு சில வேதியியல் மாற்றங்கள் நடைபெறும். அப்போது அது வித்தியாசமான வாசனையுடன் வெளிப்படும். இதைச் சாதாரண மனிதர்களால் உணர முடியாது. ஆனால் மனிதர்களைக் காட்டிலும் 100 மடங்கு அதிகமான மோப்ப சக்தியைக் கொண்டுள்ள நாய்களால் அதை உடனடியாகக் கண்டறிய முடியும். கண்டறிந்த உடன் தொடர்ந்து குரைப்பது, குதிப்பது, அதன் உரிமையாளரை வைத்த கண் வாங்காமல் மிரட்டுவது போல் பார்ப்பது போன்ற நடவடிக்கைகளை நாய்கள் செய்யும். இது போன்ற செயல்பாடுகள் சர்க்கரை நோய் தாக்கத்தைக் கண்டறிய உதவும் அறிகுறிகள். தூக்கத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து கோமா நிலைக்குச் சென்று உயிரிழக்கும் நிகழ்வுகளை இதனால் தடுக்க முடியும்.  

நாய்கள்

அனைத்து வகை நாய்களுக்கும் இதுபோன்ற பயிற்சிகளை அளிக்க முடியும். சர்க்கரை நோயாளிகள் மாறுபட்ட வாசனையை அடிக்கடி நுகரச் செய்து இதுபோன்ற நாய்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தியாவில் தில்லியில் இதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. விரைவில் பல முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற நாய்களைப் பார்க்க முடியும். பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களின் விலை சற்று அதிகமாக உள்ளதால், அதை அனைத்துத் தரப்பினரும் வாங்குவதில் சிக்கல் உள்ளது. பயன்பாடு அதிகரித்து, பயிற்சி அளிப்போரும் அதிகரிக்கும்போது நாய்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம்" என்றார் அவர்.

நமது குடும்பங்களில் நாய் எப்போதும் முக்கிய அங்கமாக உள்ளது. சர்க்கரை நோயாளிகளே இல்லாத குடும்பங்களும் இல்லை எனலாம். அதனால் நாய்களை வாங்கும்போதே, சர்க்கரை நோய்க்கான பயிற்சி பெற்ற நாய்களை வாங்குவது அதிக பயனளிக்கக் கூடும்.

 


டிரெண்டிங் @ விகடன்