வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (16/11/2018)

கடைசி தொடர்பு:14:59 (22/11/2018)

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது? #SpotVisit #HospitalReview

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது? - நேரடி அனுபவம்!

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது? #SpotVisit #HospitalReview

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு `அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்' தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை மருத்துவமனையில் கடந்த ஜூன் 8-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது. 

பரிசோதனை

இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது? 

தெரிந்துகொள்வதற்காக நேரடியாக மருத்துவமனைக்குச் சென்றோம்.

அதிகாலை நேரத்திலும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. கூட்டம் நிறைந்திருக்கிறது. தரைதளத்தில் நுழைவு வாயிலின் எதிரே அமைந்துள்ளது `முழு உடல் பரிசோதனை மையம்'. அதனால், யாரிடமும் அதுபற்றி விசாரிக்கும் அவசியம் ஏற்படவில்லை. 

மருத்துவமனை உள் வளாகத்தில் நீள் வட்ட வடிவில் அமைந்துள்ளது இந்த மையம். மையத்தில் உள்ள வரவேற்பறைக்குள் நுழைந்ததும் இரண்டு பேர் இன்முகத்துடன் வரவேற்கிறார்கள். அவர்களை முந்திக்கொண்டு வரவேற்கிறது ரம்மியமான இசை. மிகவும் சுத்தமாக, ஏசி வசதியுடன் மனதை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது பரிசோதனை மையம். 

முழு உடல் பரிசோதனை பிரிவு

விண்ணப்பத்தையும் பேனாவையும் வழங்கிய வரவேற்பாளர், `எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் வந்திருக்கிறோமா' என்பதை உறுதி செய்துகொண்டார். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து 1000 ரூபாய் கட்டணத்தையும் செலுத்தினோம். கனிவோடு பெற்றுக்கொண்டவர், அடுத்து எங்கே செல்ல வேண்டும்; என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும் என்பதையெல்லாம் விளக்கமாகக் மீன் தொட்டிகூறினார். ஊழியர்கள் உதவுவதற்காகவே காத்திருப்பதுபோல `அடுத்தடுத்து எங்கே செல்லவேண்டும்' என்று உடன் அழைத்துச்செல்கிறார்கள். அதனால் எந்தக் குழப்பத்துக்கும் அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. எந்த இடத்திலும் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழலில்லை. அந்த சில நிமிடங்களிலும் இருக்கைகளில் அன்றைய  செய்தித்தாள்களை புரட்டலாம். நோயாளிகளுக்கு அமைதியான மனநிலையை ஏற்படுத்த உள் அரங்கம் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள், மீன் தொட்டிகள் காத்திருக்கும் நேரத்தை இதமாக மாற்றி விடுகின்றன. 

ஆங்காங்கே மினரல் வாட்டர் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பரிசோதனைக்கு முன்பும் எப்படித் தயாராக வேண்டும் என்பதை ஊழியர்கள் விளக்குகிறார்கள். உள்ளேயே உணவகம் இருக்கிறது. காலைச் சிற்றுண்டியை அவர்களே தந்துவிடுகிறார்கள். அதிகபட்சம் இரண்டரை மணி நேரத்தில் அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்துவிடுகின்றன.

என்னென்ன பரிசோதனைகள்?

`அம்மா கோல்டு’, `அம்மா டைமண்ட்’, `அம்மா பிளாட்டினம்’ என மூன்றுவிதமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. 1,000 ரூபாய் கட்டணத்தில் அளிக்கப்படும் `அம்மா கோல்டு’ பரிசோதனையில் முழு ரத்தப்பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, ரத்த சர்க்கரைப் பரிசோதனை (உணவுக்கு முன், உணவுக்குப் பின்), சிறுநீரக ரத்தப் பரிசோதனை, ரத்த கொழுப்புப் பரிசோதனை, கல்லீரல் ரத்தப் பரிசோதனை, ஹெபடைடிஸ்-பி பரிசோதனை, ரத்த வகை மற்றும் ஆர்.எச். பரிசோதனை, இ.சி,ஜி, `டிஜிட்டல் எக்ஸ்-ரே' (Digital chest X-ray), அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் அடிவயிறு பரிசோதனை, கர்ப்பப்பை வாய் பரிசோதனை ஆகியவை செய்யப்படுகின்றன. 2,000 ரூபாய்க்குச் செய்யப்படும் `அம்மா டைமண்ட்’  பரிசோதனையில் `அம்மா கோல்டு’ பரிசோதனைகளுடன், கூடுதலாக எதிரொலி இதயத் துடிப்பு, அளவீடு, புற்றுநோய், தைராய்டு ஆகிய பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.

காத்திருக்கும் பகுதி

3,000 ரூபாய் கட்டணத்தில் செய்யப்படும் `அம்மா பிளாட்டினம்’ சிறப்புப் பரிசோதனையில் `அம்மா டைமண்ட்’ பரிசோதனைத் திட்டத்தின்கீழ் வரும் பரிசோதனைகளும் செய்யப்படும். மேலும், கூடுதலாக மார்பகச் சிறப்புப் பரிசோதனை, எலும்பு உறுதித்தன்மை ஆகிய பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் மொத்தம் 18 வகையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

முன்பதிவு வசதி

பரிசோதனை செய்ய வருபவர்கள் நேரிலோ அல்லது ஆன்லைனிலோ பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்து வந்தால் குறிப்பிட்ட நேரத்தில் பரிசோதனையை முடித்துவிட்டு வீடு திரும்பலாம். ஆன்-லைனில் https://tngmssh-mhc.com/ என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம். 044- 25666111 என்ற தொலைபேசி எண்ணில் விவரங்களைக் கேட்டு தெரிந்துகொள்ளலாம். 73388 35555 என்ற செல்போன் எண்ணிலும் தங்களைப் பற்றிய தகவல்களைக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி பரிசோதனைக்கான நேரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

டெக்ஸா ஸ்கேன்

எவ்வளவு நேரம்?

`அம்மா கோல்டு’ பரிசோதனைக்கு ஒன்றரை மணி நேரமும், `அம்மா டைமண்ட்’ பரிசோதனைக்கு இரண்டு மணிநேரமும், `அம்மா பிளாட்டினம்’ பரிசோதனைக்கு இரண்டரை மணி நேரமும் ஆகலாம். நம் ஒத்துழைப்பு மற்றும் கூட்டத்தைப் பொறுத்து அரை மணி நேரம் கூடுதலாகலாம். ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பரிசோதனை நடக்கிறது. 

கட்டணத்தைத் தற்போது ரொக்கமாகச் செலுத்தும் வசதி மட்டுமே இருக்கிறது. `பேடிஎம்’ மற்றும் ஆன்-லைனில் பணம் செலுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. 

பரிசோதனைக்காக ஓசூரிலிந்து வந்திருந்த சுலோச்சனாவிடம் பேசினோம். 

சுலோச்சனா

``நான், என்  கணவர், மகள் மூன்று பேருக்கும்  பரிசோதனை செய்வதற்காக வந்திருக்கிறோம். இந்த மருத்துவமனை பற்றி என் மகள் கேள்விப்பட்டு எங்களிடம் சொன்னாள். நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் சிறப்பாக இருக்கிறது. மருத்துவர்களும் ஊழியர்களும் கனிவுடன் பேசுகிறார்கள். நீண்டநேரம் காத்திருக்கவில்லை. அனைத்துப் பரிசோதனைகளையும் மளமளவென்று முடித்துவிடுகிறார்கள். வெளியூரிலிருந்து வந்திருக்கிறோம் என்று சொன்னதால் இன்றே பரிசோதனை முடிவுகளும் தந்துவிடுவதாகச் சொன்னார்கள். ஒரே குறை, கண் பரிசோதனை செய்ய வசதி இல்லாததுதான்" என்றார் அவர். 

 மருத்துவமனை தொடர்பு அலுவலர் டாக்டர் ஆனந்தகுமாரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம்.

டாக்டர் ஆனந்தகுமார்``முழு உடல் பரிசோதனைக்குத் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்களால் இந்தப் பரிசோதனையைச் செய்ய முடியவில்லை. அதற்காகவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது `அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்' தொடங்கப்பட்டது. 

தினமும் 30 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டினரும் கூட இந்தப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம்.  பரிசோதனையின் முடிவில் நோய்க்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டால் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நிபுணர்கள் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். 

சென்னையைத் தவிர பிற மாவட்டங்களிலிருந்து வரும் பயனாளிகளுக்கு அன்றைய தினமே முடிவுகள் தரப்படுகின்றன. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவது முக்கியமானது என்பதால், 3000 ரூபாய் திட்டத்திலேயே மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. விரைவில் கண், நுரையீரல் பரிசோதனைகளை உள்ளடக்கிய 4,000 ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.  

பரிசோதனை

கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி தொடங்கி இதுவரை 4542 பேர் பயனடைந்துள்ளனர். இதுவரை பரிசோதனை செய்ததில் 271 பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 401 பேருக்கு சர்க்கரைநோய் பாதிப்பும், 7 பேருக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பும், 28 பேருக்கு தைராய்டு பாதிப்பும் கண்டறியப்பட்டன. மேலும், 27 பெண்களுக்குக் கருப்பை வாய்புற்றுநோய்க்கான அறிகுறிகளும், 7 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளும், 12 பேருக்கு நாள்பட்ட சிறுநீரகப் பிரச்னைகளும், 17 பேருக்கு ரத்தசோகை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளன" என்றார் அவர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்