வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (16/11/2018)

கடைசி தொடர்பு:18:18 (16/11/2018)

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் ஆவாரைக் குடிநீர், மதுமேக சூரணம்!

ஆரம்பக்கட்ட சர்க்கரைநோய் உள்ளவர்கள் மதுமேக சூரணம், ஆவாரைக் கசாயத்தை அருந்துவது நல்லது.

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் ஆவாரைக் குடிநீர், மதுமேக சூரணம்!

ர்க்கரைநோய்... உலகத்தையே மிரட்டும் நோயாகவும் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோயாகவும் மாறி வருகிறது. சர்க்கரை நோய் வர அரிசி சார்ந்த உணவுகளே காரணம் என்று சொன்னார்கள். ஆனால் இன்று அரிசியே சாப்பிடாதவர்களையும் சர்க்கரை நோய் பாதிக்கிறது. காற்று மாசுபடுவதால்கூட இந்நோய் பாதிப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அதே வேளையில், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த மருத்துவம் சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாமல் உடற்பயிற்சிகளிலும் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது.

சர்க்கரை

4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சர்க்கரை நோய் குறித்த குறிப்புகள் வரலாற்றில் ஆங்காங்கே காணப்படுகின்றன. கிரேக்க நாட்டுக் கல்வெட்டு ஆவணங்களில் சர்க்கரை நோய் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இது ஒன்றும் புதிய நோயல்ல, பன்னெடுங்காலமாகவே காணப்படும் ஒரு நோய் என்பது தெரிகிறது.  

சித்த மருத்துவத்தில் மேக நோய்களான பிரமேகம், மதுமேகம் எனும் வரிசையில் சர்க்கரை நோயைக் குறிப்பிட்டுள்ளனர். சித்த மருத்துவப் புரிதலின்படி சிறுநீர் கழித்த இடத்தில் சிறுநீர் நுரைத்துக் காணப்படுவது மேக நோய்களின் குறிகுணங்களில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. 

`வேர்பாறு, தழைபாறு, மிஞ்சினக்கால் மெள்ள மெள்ள பற்ப செந்தூரம் பாறே…' என்பது சித்தர்களின் கூற்று. அதன் அடிப்படையில் நாம் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் இலை, தழை, வேர், பட்டை போன்றவற்றைக் கொண்டு நோயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யவேண்டும். அதைக் காட்டிலும் எளிதாகக் கிடைக்கும் ஆவாரைக் குடிநீர் என்று சொல்லப்படும் ஆவாரைக் கசாயம் ஆரம்பகட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு மிக முக்கியமான மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. சித்த மருத்துவ நூல்கள் பலவற்றிலும் இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தேரன் குடிநீர், அத்மரக்க்ஷாமிர்தம் போன்றவற்றில் ஆவாரைக் குடிநீர், ஆவாரை சமூலக் குடிநீர் போன்ற துவர்ப்பு நிறைந்த குடிநீர் மிக முக்கிய மருந்தாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆவாரைக் குடிநீர் என்பது தனி ஆவாரை கிடையாது. `ஆவாரை கொன்றை நாவல் அலைகடல் முத்தம் கோட்டம் மேவிய மருதத்தோறும் காவிரி நீரும் வற்றும் கடல்நீரும் வற்றும் தானே …' என்ற பாடலில் ஆவாரைக் குடிநீர் சர்க்கரை நோய்க்கான மிக முக்கியமான மருந்தாகச் சொல்லப்படுகிறது.

சர்க்கரைநோய்


ஆவாரையுடன் சேர்ந்துள்ள மற்ற ஏழு மருந்துச் சரக்குகளும் சர்க்கரை நோயை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை. நாள்பட்ட சர்க்கரை நோயின் தாக்கமாக வரக்கூடிய சிறுநீரக நோய்க்கும்கூட இந்தச் கசாயம் மருந்தாகும் என்பதுவே இப்பாடலின் கருத்தாக உள்ளது.
ஆவாரைக் குடிநீர், சர்க்கரையின் அளவு HbA1c 7.0 வரை இருக்கக்கூடிய ஆரம்பகட்ட நோயைக்கட்டுப்படுத்தும் ஒரு பானமாக இருக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் இதை முதல் மருந்தாகப் பயன்படுத்தலாம். இதுதவிர சாதாரணமாக சர்க்கரையைக் கட்டுப்படுத்த சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை, மரமஞ்சள், வில்வம், கறிவேப்பிலை, வெந்தயம், சீந்தில் கொடி எனப் பல்வேறு மூலிகைகளைக் கொண்டு மதுமேக சூரணங்கள் பயன்படுத்தப்படுவதாகச் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. நூலுக்கு நூல் இதன் பயன்பாட்டில் வேறுபாடு இருந்தாலும் சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சிறந்த மருந்தாக மதுமேக சூரணம் உள்ளது.

ஆரம்பகட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள் மதுமேக சூரணத்தை காலை, மதியம், இரவு என மூன்று வேளை அரை டீஸ்பூனும், காலையும் மாலையும் ஆவாரைக் கசாயத்தை 120 மில்லி அளவு அருந்திவந்தால் சீக்கிரம் கட்டுப்பாட்டில் வரும். இதை நோயாளிகள் நேரில் உணரலாம். ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது. நோயாளியின் உடல் எடை, தேக அமைப்பு, இன்சுலின் சுரப்பது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து தொடக்கநிலையிலேயே உறுப்புகளில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படும். அதற்கு இந்த மருந்துகள் போதுமானதாக உள்ளதா என்று அறியவேண்டும். அத்துடன் சிலாசத்து பற்பம், வில்வ மாத்திரை, அப்பிரக பற்பம் போன்ற மருந்துகளைக் கொண்டும் அவர்களின் நாடி ஆகியவற்றின்மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம். 
ஒரு சில நேரங்களில் சிலருக்கு வெறும் வயிற்றிலேயே சர்க்கரை அளவு 200-க்கு மேல் இருக்கும். உணவுக்குப் பின் 400 முதல் 450 இருக்கும். அப்போது வெறும் சித்த மருந்துகளை மட்டும் வைத்துக் கட்டுப்படுத்த முடியாது. அந்தக் கட்டத்தில் சித்த மருத்துவமும் நவீன மருத்துவமும் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

ஆவாரை


சர்க்கரை நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறிகள்!

உடல் எடை வெகுவாகக் குறைவது, அதிக சோர்வு, இரவில் தூக்கமின்மை, சிறிய வேலை செய்தாலும் களைப்பு ஏற்படுவது, நெடுநாள்களாகப் புண்கள் ஆறாமலிருப்பது, தேமல், சிறுநீர்ப் பாதை மற்றும் ஆண்குறியின் மேற்பகுதியில் சிறு அளவில் வெடிப்பு, அடிக்கடி ஏற்படும் சிறுநீர்த் தொற்று ஆகியன சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம். இவற்றில் எத்தகைய குறிகுணங்கள் இருந்தாலும் ரத்த சர்க்கரையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

நாம் உண்ணும் உணவில் மிகுந்த அக்கறைகாட்ட வேண்டியது அவசியம். பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். சமையலறையில் நாம் கவனமாகச் செலவிடும் சிறிதுநேரம் நம் வாழ்நாளில் பல மணிநேரங்களை நமக்குத் திருப்பிக் கொடுக்கும். எனவே, உடல்நலத்தின் புரிதலுடன் அனைவரும் கவனமாக இருப்பது நல்லது.


டிரெண்டிங் @ விகடன்