வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (16/11/2018)

கடைசி தொடர்பு:23:00 (16/11/2018)

அகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை!

நாகை மாவட்டம் பூம்புகாரில் காவிரி ஆறு வங்கக் கடலுடன் சங்கமிக்கும் புனித இடம் அமைந்துள்ளது. இங்கு, இன்று (15.11.18) காலை 10 மணியளவில் 'அகில பாரதிய துறவியர் சங்கம் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை' சார்பில்  8-ம் ஆண்டு அன்னை காவிரித் திருவிழா மற்றும் விழிப்பு உணர்வு துலா தீர்த்த யாத்திரை நிறைவு விழா நடைபெற்றது. இதில், ஏராளமான துறவியர்களும் பக்தர்களும் கலந்துகொண்டனர்.

யாத்திரை

துறவியர் சங்கம் மற்றும் காவிரி நதிநீர்  பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாகக் கடந்த ஏழு ஆண்டுகளாக காவிரியைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டி மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், 'காவிரி விழிப்பு உணர்வு ரதயாத்திரை' நடத்தப்பட்டு வருகிறது.  இந்த யாத்திரை, கடந்த 26.10.18 அன்று தலைக்காவிரி உற்பத்தியாகும் கா்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் தொடங்கியது. குடகில் பூஜை செய்து எடுத்துவரப்பட்ட தலைக்காவிரி நீர், வழி நெடுக்கிலும் பல காவிரி படித்துறைகளில் ஆராதனை செய்யப்பட்டு  30 நாள்கள் ஆன யாத்திரையின் இறுதி நாளான இன்று, காவிரி சங்கமத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக, காவிரி சங்கமத்திற்கு அருகில் அமைந்துள்ள ரத்தின பூர்ணேஸ்வரி அம்மன் ஆலயத்தில், லோபமுத்திரா ஹோமம் எழுப்பப்பட்டு தலைக்காவிரி நீருக்கும் காவிரி அம்மனுக்கும் தீபாராதனை செய்யப்பட்டது.  பின்பு, பக்தர்கள் சூழ "ஜெய ஜெய மாதா, காவிரி மாதா" என்ற கோஷங்களுடன் துறவிகளால் காவிரி சங்கமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட தலைக்காவிரி நீர், காவிரியும் கடலும் இணையும் இடத்தில்  சேர்க்கப்பட்டது.

காவிரி ரத யாத்திரை!

பின்னர், காவிரி அம்மன் சிலை ரத்தின பூர்ணேஸ்வரி அம்மன் ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்டு நிறைவு பூஜைகள் நடத்தப்பட்டன.   இந்தக் காவிரி யாத்திரையை முன்னின்று நடத்திய அகில பாரதிய துறவியர் சங்கத்தின் செயலாளர் சுவாமி ராமானந்தாவிடம் இந்த யாத்திரைகுறித்துக் கேட்டபோது, "நம்மை வாழவைக்கின்ற அன்னை காவிரியை வணங்குவதோடு மட்டுமல்லாமல், தூய்மையாக வைத்திருக்கவேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது.  அதற்கான விழிப்பு உணர்வை இந்தக் காவிரி யாத்திரை மூலமாகத் தமிழகத்தில் ஏற்படுத்திவருகின்றோம். சென்ற தாமிரபரணி புஷ்கரத்தின்போது, நாங்கள்  மக்களிடையே ஏற்படுத்திய விழிப்பு உணர்வின் காரணமாக,  பிளாஸ்டிக் பொருள்கள், சிகைக்காய், இதர குப்பைகள் எதுவும் இல்லாமல் புனித நீராடல் மிகவும் தூய்மையாக நடைபெற்று, தாமிரபரணியின் தூய்மை காக்கப்பட்டது. அதேபோல, நதிநீர் தூய்மை நிலை தொடர்வதற்கே இந்த விழிப்பு உணர்வு ரத யாத்திரையை நடத்தினோம். வான்மாரி பொழிய, நீர்வளம் பெருக, விவசாயம் தழைக்க, மரம், செடி கொடிகள் பசுமை மாறாதிருக்க, நாடும் வீடும் நலமுடன் திகழ,  குறைவிலாது உயிர்கள் வாழ அன்னை காவிரியை வணங்குவதுடன் சேர்த்து, அவள் தூய்மையைப் பாதுகாக்க உறுதியெடுக்க வேண்டும்.

காவிரி ரத யாத்திரை!

காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில், லட்சக்கணக்கான மரங்கள் நட்டு அதிக மழையைப் பெற தனித்திட்டம் உருவாக்க வேண்டும்.  காவிரியில் சாக்கடைக் கழிவுகள் மற்றும் ஆலைகளின் ரசாயனக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க அவசர சட்டம் உருவாக்க வேண்டும்.  மழைக்காலங்களில் வீணாகக் கடலுடன் கலக்கும் நீரை சேமிக்க, காவிரியின் கரைகளைப் பலப்படுத்தி தடுப்பணைகள் கட்ட வேண்டும்.  ஆறுகள், ஏரிகள், குளங்களைப் பாதுகாக்கவும் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளைச் செய்ய நீர்வளத்துறை என்ற தனி அமைச்சகத்தை  உருவாக்க வேண்டும்.  கங்கையைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கியதுபோல காவிரியைத் தூய்மைப்படுத்த நிதி ஒதுக்க வேண்டும்.  நதிகளைத் தேசிய மயமாக்க வேண்டும். இதன் முதல் கட்டமாக, தென்னக நதிகளைக் காவிரியுடன் இணைக்க வேண்டும் என  வலியுறுத்தும் விதமாகவே இந்த காவிரி ரத யாத்திரை நடத்தப்பட்டது`` என்றார்.