வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (18/11/2018)

கடைசி தொடர்பு:15:23 (18/11/2018)

செல்போனை குழந்தைகளிடமிருந்து தள்ளி வையுங்கள்... `அப்செஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர்’ பாதிக்கலாம்!

செல்போன் இல்லாத ஒரு வாழ்க்கையை கற்பனைகூட செய்யமுடியாது. அந்தளவுக்கு அது நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துவிட்டது. வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் செல்போனோடுதான் இருக்கிறார்கள். குறித்த நேரத்தில் சாப்பிடுவதில்லை. உறங்குவதில்லை.பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.

செல்போனை குழந்தைகளிடமிருந்து தள்ளி வையுங்கள்... `அப்செஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர்’ பாதிக்கலாம்!

செல்போன் இல்லாத ஒரு வாழ்க்கையை கற்பனைகூட செய்யமுடியாது. அந்தளவுக்கு அது நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துவிட்டது. குழந்தைகளும்கூட அதற்கு விதிவிலக்கல்ல. வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் செல்போனோடுதான் இருக்கிறார்கள். குறித்த நேரத்தில் சாப்பிடுவதில்லை.  உறங்குவதில்லை. இதனால் உடல்சோர்வு, கண்ணெரிச்சல் போன்ற பல பிரச்னைகளை குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். இதுமட்டுமின்றி, `செல்போன்களை தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் ஏற்படக்கூடும்’ என்கிறார் மனநல மருத்துவர் வி.கே.அரவிந்த். 

செல்

 

“தென்கொரியாவில் மாணவர்கள் அதிகமாக இணையத்துக்கு அடிமையானதைக் கண்டறிந்தபிறகு `போர்னோகிராபி’ தளங்களைத் தடை செய்தனர். இந்தியாவில் 'ப்ளுவேல்' என்ற   விளையாட்டால் உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகு, பெற்றோர் மத்தியில் கொஞ்சம் விழிப்புஉணர்வு ஏற்பட்டிருக்கிறது. அது இன்னும் அதிகரிக்கவேண்டும்.

இந்தியாவில் 10 முதல் 15 சதவிகித குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அன்றாட வாழ்க்கையில் அவசியமான 'ஆப்ஸ்'கள் எவை? என்பதை அறிதல் அவசியம். அவற்றை எவ்வாறு, எப்போது, எந்த இடத்தில், எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டுப்பாடும் முக்கியம். இவை பற்றிய விழிப்புஉணர்வு இல்லாததே, பல மன நோய்களுக்கான தொடக்கம்.  

cell

இன்றுள்ள பல  'சோஷியல் மீடியா ஆப்ஸ்கள்' எளிதில் கையாளும் வகையில் இருக்கின்றன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றைப் பெற்றோர்கள் பயன்படுத்துவதைக் குழந்தைகளும் பார்த்துக்  கற்றுக்கொள்கின்றனர். பொதுவாக, குழந்தைகளின் மனநிலை என்பது எதையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மை கொண்டது. நல்லதை விடக் கெட்டதை வேகமாகக் கற்றுக்கொள்ளவும் செய்வார்கள். ஆகவே, பெற்றோர்கள் வெளியில் சென்றிருக்கும்போதோ அல்லது வேறு ஏதாவது வேலையில் மூழ்கி இருக்கும்போதோ அவர்களுக்குத் தெரியாமல் செல்போனை எடுத்து அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று ஆராய்வார்கள்.மனநல மருத்துவர் வி.கே.அரவிந்த்

சில பெற்றோர்கள் தங்களுடைய செல்போனில் உள்ள 'ஆப்ஸ்'களுக்கு பாஸ்வேர்டு வைத்திருப்பார்கள்.  அந்த பாஸ்வேர்டை பிரேக் செய்து, உள்ளே நுழையும் அளவுக்கு சில நேரங்களில் குழந்தைகள் ஈடுபடுவார்கள். சில பாலியல் ரீதியான புகைப்படங்களையோ தகவல்களையோ படிக்கும்போது அவர்களுடைய மனநிலை பாதிப்புக்கு உள்ளாகும். நாளடைவில் அந்தமாதிரியான விஷயங்களில் ஈர்ப்பு ஏற்பட்டு, பெற்றோருக்குத் தெரியாமல் செல்போனை  எடுத்து தன்னுடைய நண்பர்களிடம் காட்டும் ஆர்வமும் அவர்களுக்கு ஏற்படும்.  

பத்தாம் வகுப்புக்கு மேலே படிப்பவர்களாக இருந்தால் அவர்களே தங்களுக்குள் 'வாட்ஸ்அப்' குழுக்களை உருவாக்கி, இதுபோன்ற விஷயங்களைப் பரிமாறிக்கொள்வதும் நடக்கும். இப்படிச் செய்யும்போது அவர்களுக்குள் ஒரு 'நெட்வொர்க்' உருவாகும். இதனால் வகுப்புகளுக்குச் செல்லாமல் வேறு செயல்களில் ஈடுபட்டுக் கல்வியில் பின்தங்குவார்கள்.

ஒரு குழந்தை மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது பள்ளியில் இருந்து வரும் புகார்கள் மூலமே தெரியவரும். `நல்லா படிக்கிற பையன்.. இப்போ சுமாரான மார்க்தான் எடுத்திருக்கான்’ என்று ஆசிரியர் பெற்றோரிடம் சொல்வார். இதுதான் குழந்தை மன அழுத்தத்தில் சிக்கியிருப்பதற்கான ஆரம்ப அறிகுறி! 

குழந்தைகள் மனநல மருத்துவத்தில் மனஅழுத்தம் , மனப்பதற்றம் (anxiety disorder) இரண்டும் பொதுவானவை. இவைதவிர, மேலும் இரண்டு வகை இருக்கின்றன. இதில், ஓ.சி.டி எனும் `அப்செஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர்’ (Obsessive compulsive disorder) ஓன்று . இந்த மூன்றாவது டிஸ்ஆர்டர்தான் குழந்தைகளைத் தற்போது அதிகமாகப் பாதிக்கிறது. இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் ஒரு செயலையே திருப்பித் திருப்பிச் செய்வார்கள். வீடுகளில் பெண்கள் சிலர் சமையல் வேலை முடிந்ததும்  கேஸை மூடிவிட்டோமா என்பதை ஒன்றுக்கு இரண்டுமுறை பரிசோதிப்பார்கள். இப்படிச் செய்வது சாதாரணமானதுதான். ஆனால், அதையே 15 அல்லது 20 முறை சோதித்துப் பார்த்தால் அதுதான் `அப்செஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர்’ .  

செல்

குழந்தைகளுக்கு வரும் `அப்செஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர்’ என்பது செல்போனை திரும்ப திரும்ப எடுத்துப் பார்க்கத் தூண்டும். படிப்பதை மறந்துவிட்டு அதிலேயே மூழ்கியிருக்கச் செய்யும். செல்போனை எடுத்துப் பார்க்கவில்லையென்றால் ஒருவித மனப்பதற்றத்துக்கு ஆளாகிவிடுவார்கள். மேலும், பெற்றோர், உடன்பிறந்தோர் மீது கோபப்படுவும் சண்டையிடவும் செய்வார்கள். 

`கிளப்டோமேனியா’ (Kleptomania) என்பது நான்காவது வகை. இந்த வகையான குழந்தைகள் திருடுவார்கள். ஒரு சில குழந்தைகள் நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களுக்குப் பிடித்தமான ஒரு பொருள் இருந்தால், குறிப்பாக செல்போனை பார்த்தால் பெற்றோர்களுக்குத் தெரியாமல் எடுத்து, அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்பார்கள். பிறகு அதை எங்கேயாவது போட்டுவிடுவார்கள். இந்த நான்குவகை காரணங்களால்தான் குழந்தைகள் அதிக மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

child

ஆகவே, குழந்தைகளிடமிருந்து செல்போனை ஆரம்ப கட்டத்திலேயே பெற்றோர்கள் தள்ளிவைக்கவேண்டும். நிறைய வீடுகளில் குழந்தைகளின் குறும்புகளைச் சமாளிக்க அவர்கள் கையில் செல்போனை திணிக்கிறார்கள். இது தவறான அணுமுறை. இதைத் தவிர்க்க வேண்டும். சமூகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். குழந்தைகளோடு பேச நேரம் ஒதுக்கவேண்டும். பல நேரங்களில் கவுன்சலிங்குக்கு வரும் குழந்தைகள் , தங்களை எதற்காக பெற்றோர் மனநல மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதை அறிய மாட்டார்கள்.child

அதே நேரத்தில் பொறுப்பான பெற்றோர்களாக இருந்தால், 'உனக்கு இந்த பிரச்னை இருக்குப்பா.. இதிலிருந்து நீ வெளியே வரணும்’ என்பதை மெதுவாக எடுத்துச்சொல்லி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிப்பது எங்களுக்கு எளிதாக இருக்கும்.

முதல்கட்டமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். அதோடு நிற்காமல் பெற்றோர்களுக்குத்தான் கவுன்சலிங் கொடுப்போம். 

பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளிடம் அன்று நடந்த சம்பவங்களை கேட்க பல பெற்றோர்கள் தவறிவிடுகின்றனர். பெரும்பாலான குடும்பங்களில் இருவரும் வேலைக்குச் செல்வதால், வீட்டுக்கு வந்ததும் டிவி பார்ப்பது, செல்போனில் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருப்பது என நேரத்தைச் செலவிடுகின்றனர். அன்று பள்ளியில் என்ன நடந்தது என்று அரை மணி நேரம் ஒதுக்கி குழந்தைகளிடம் பேசவேண்டும். 'பள்ளியில் விழா  நடக்கிறதா, உனக்கு எதுவும் வேண்டுமா?' என்றெல்லாம்  கேட்டால், அந்தக் குழந்தை நிறைய சந்தோஷப்படும். குழந்தையின் வயதுக்கேற்றவாறு பொருள்களை வாங்கித் தரலாம். ஆனால், அவர்கள் ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக அவர்களுடைய வயதுக்குப் பொருந்தாத பொருள்களை வாங்கித் தருவதைத்  தவிர்க்க வேண்டும். செல்போனை அவர்களிடம் தருவதாக இருந்தால், நீங்கள் பாஸ்வேர்டு போட்டு திறப்பதாக இருக்க வேண்டும். குறித்த நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். இவையெல்லாம் அவர்களுடைய மன அழுத்தத்தைப் போக்க உதவும்!” என்றார் வி.கே.அரவிந்த்.


டிரெண்டிங் @ விகடன்