வெளியிடப்பட்ட நேரம்: 14:12 (19/11/2018)

கடைசி தொடர்பு:14:12 (19/11/2018)

``குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல்போனால், பொம்மைகளையும் சந்தேகப்படுங்கள்!’’ - யோ.தீபா

``உணவு விஷயத்தில் எப்படிப் பாரம்பர்யத்தை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறோமோ, அதேபோல் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களிலும் பாரம்பர்யத்தை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.’’

குழந்தைகளுக்கு ஆபத்தான 10 பொம்மைகளின் பட்டியலை அமெரிக்காவின் வாட்ச் அமைப்பு (World Against Toys Causing Harm) சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்டுள்ளது. இதில், குழந்தைகளின் கண்களில் காயம் ஏற்படுத்தக்கூடிய பொம்மைகள், குழந்தைகள் விழுங்கிவிடக்கூடிய வகையில் பட்டன் பேட்டரிகளைக் கொண்ட பொம்மைகள் என்று காரணங்களைச் சொல்லி, குறிப்பிட்ட 10 பொம்மைகளைக் குழந்தைகளுக்கு வாங்கித் தர வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. தவிர, 3 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பொம்மைகளால் காயம் அடைந்து மருத்துவமனைக்குச் செல்வதாக அந்த வாட்ச் தன்னுடைய அறிக்கையில் சொல்லியிருக்கிறது. நம் வீட்டுக் குழந்தைகள் எப்படிப்பட்ட பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும், குழந்தைகளுக்குப் பாதுகாப்பான விளையாட்டுச் சாமான்கள் பற்றியும் இந்த நேரத்தில், நாமும் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால், இயற்கை மருத்துவர் யோ.தீபாவிடம் குழந்தைகளுக்கான பாதுகாப்பான விளையாட்டுச் சாமான்கள் பற்றிக் கேட்டோம். 

பொம்மை

``நாமெல்லாம் தற்போது, உணவு விஷயத்தில் எப்படிப் பாரம்பர்யத்தை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறோமோ, அதேபோல் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களிலும் பாரம்பர்யத்தை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

யோ. தீபாஒரு தலைமுறைக்கு முன்னால் வரைக்கும் மண்ணில் செய்த பொம்மைகளைத்தான் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுத்தோம். அந்த மண் பொம்மைகளின் மேலே பூசப்பட்டிருந்த வண்ணங்களும் செம்மண், சுண்ணாம்பு, மஞ்சள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக இருந்தது. இவற்றை குழந்தைகள் வாயில் வைத்தாலும், இயற்கை சாயங்கள் அவர்களுக்கு எந்தவித கெடுதலையும் இழைக்கவில்லை. தவிர, மண் பொம்மைகளில் இருக்கிற தாது உப்புகள் குழந்தைகளின் வாய் வழியாக வயிற்றுக்குள்ளும்போனது. இந்தப் பொம்மைகள் உடைந்துவிட்டால், சுலபமாக மட்கியும் போய்விடும். அதனால், பிளாஸ்டிக் டாய்ஸ்போல பூமியைக் கெடுக்கிற பிரச்னையும் மண் பொம்மைகளில் கிடையாது. 

அடுத்தது, பனையோலை பொம்மைகள், பனையோலைக் கிலுகிலுப்பைகள். ஆபத்தில்லாதது மட்டுமல்லாமல், இந்த வகை பொம்மை செய்பவர்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவியது. 

மூன்றாவதாக மரப்பாச்சி பொம்மைகள். இந்தப் பொம்மைகளைக் கருங்காலி மற்றும் வேப்பம் மரங்களால் செய்வார்கள். காய்ந்த மரத்தில் செய்யப்பட்டவை என்றாலும், அவற்றில் இருக்கிற இயற்கை பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், குளோரோபில்ஸ் ஆகியவை இருக்கும். இதனால், இவற்றைக் குழந்தைகள் வாயில் வைத்தாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஜீரண சக்தியையும் தூண்டும். 

கடைசியாக, மண்ணால் செய்யப்பட்ட சொப்பு சாமான்கள். கை, கால்களில் மண் பட வேண்டும் என்று இன்றைக்குப் பல பள்ளிக்கூடங்களில் 'Sand Therapy' என்று சுத்திகரிக்கப்பட்ட மணலில் குழந்தைகளை விளையாட விடுகிறார்கள். வியாபார உத்தியாக இருந்தாலும் மணலில் விளையாடுவது குழந்தைகளுக்கு நல்லது என்பது மறுபடியும் எல்லோருக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது. இதே நன்மைதான் களிமண் சொப்பு சாமான்களுக்கும் பொருந்தும். அவற்றைத் தொட்டு விளையாடும்போது அதில் இருக்கிற தாது உப்புகள் குழந்தைகளின் தோல் வழியாக உடம்புக்குள் சென்று சேர்ந்துவிடும்’’ என்றவர், இன்றைய குழந்தைகளுடன் ஒட்டி உறவாடுகிற பொம்மைகளால் வரக்கூடிய ஆபத்துகள் பற்றியும் சொன்னார்.  

``இன்றைக்கு இருக்கிற ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் டாய்ஸ்களில் கெமிக்கல்ஸ், குறிப்பாக பெட்ரோலியப் பொருள்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த டாய்ஸ்களின் மேலே அடிக்கப்பட்டுள்ள பெயின்ட்களில் இருக்கிற புரோமினேட்டட் ஃபிளேம் ரிட்டார்டன்ட்ஸ் (brominated flame retardants) என்கிற கெமிக்கல், குழந்தைகளுடைய ஹார்மோன்களின் சுழற்சியில் மாற்றங்களை ஏற்படுத்தி விடும். இதனால், குழந்தைகளுடைய மூளையின் நார்மல் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படும் என்கின்றன ஆராய்ச்சிகள். உங்கள் குழந்தைக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது அவர்கள் எந்நேரமும் சோம்பலாக இருந்தாலோ, அவர்கள் விளையாடுகிற டாய்ஸ்களையும் இனிமேல் சந்தேகப்படுங்கள். 

பளிச் நிறங்களுடன் கண்களை கவருகிற பொம்மைகளை உங்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தருவதற்கு முன்னால் அதைச் சற்று மோந்து பாருங்கள். சிந்தடிக் வாடை வரும். இதற்குக் காரணம் அதன் மேற்பூச்சில் இருக்கிற polybrominated diluted ether தான். இந்தக் கெமிக்கலில் இருக்கிற லெட், ஆர்சனிக்  இரண்டும் குழந்தைகளின் மூளையை மங்கச் செய்து சிந்தனை சக்தியைக் குறைத்துவிடும் ஜாக்கிரதை'' என்று முடித்தார் தீபா! 


டிரெண்டிங் @ விகடன்